உறுதி கொள் – விமர்சனம்

‘உறுதி கொள்’ என்பது என்ன ஒரு அருமையான தலைப்பு. ஆனால், பொறுப்பற்ற, ஒரு ரவுடி கதாபாத்திர கதாநாயகனைப் பற்றிய கதைக்கு இப்படி ஒரு தலைப்பை வைத்திருக்கிறார்கள்.

கிஷோர் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே பத்தாவது வகுப்பில் படிக்கும், மேகனாவைக் காதலிக்கிறார். படிப்பே ஏறாத மிகவும் மோசமான மாணவன் கிஷோர், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் ‘பிட்’ அடித்து மாட்டிக் கொள்கிறார். அதன் பின் ஊரைச் சுற்றும் ஒரு வெட்டி இளைஞராகவே இருக்கிறார். கிஷோர் அப்படி இருந்தாலும் அவரை விடாமல் காதலிக்கிறார் மேகனா. ஒரு முறை ஊர் திருவிழாவில் கிஷோரின் தங்கை, மேகனா இருவரும் காணாமல் போய் விடுகிறார்கள். அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் கிஷோர். காணாமல் போனவர்களை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தை இடைவேளை வரை மிகவும் கலகலப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் அய்யனார். அதிலும் பள்ளிக் கூடக் காட்சிகள் அனைத்துமே மிகவும் சுவாரசியமானவை. கிஷோர், மேகனா, அந்த குண்டுப் பையன், காளி வெங்கட் காட்சிகள் வரும் காட்சிகள் அனைத்திலும் அவ்வளவு யதார்த்தம். ஆனால், இடைவேளைக்குப் பின்னர்தான் கதையை எப்படி நகர்த்துவது என்பதில் இயக்குனர் குழம்பிவிட்டார் போலிருக்கிறது. எங்கெங்கோ நகர்கிறது படம், அதிலும் கிளைமாக்சை இப்படித்தான் முடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது. நாயகனுக்குக் கிடைக்கும் தண்டனை எல்லாம் மிகவும் கொடூரம்.

‘பசங்க’ படத்தில் சிறுவனாக நடித்த கிஷோர் இந்தப் படத்தில் தனி நாயகனாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பில் எந்தக் குறையும் இல்லை. நாயகியாக மேகனா, மாணவியாக பொருத்தமாகவே நடித்திருக்கிறார்.

தென்னவன் பொறுப்பான கிராமத்து அப்பாவாக மனதில் இடம் பிடிக்கிறார். குடிகார கிராமத்து இளைஞராக காளி வெங்கட், அப்படியே வாழ்ந்திருக்கிறார். பெண்களைக் கடத்தும் அந்த வில்லன் கூட்டம் நடிகர்களும் நிறைவு.

கிராமத்துக் கதையை யதார்த்தமாகக் கொடுக்க முயற்சித்ததற்காக இயக்குனரைப் பாராட்டலாம்.

Read Previous

திட்டி வாசல் – விமர்சனம்

Read Next

விழித்திரு – விமர்சனம்

Most Popular