கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

2022ம் ஆண்டு வெளிவந்த ‘கட்டா குஸ்தி’ படத்தின் இரண்டாம் பாகமாக வந்திருக்கும் படம்.

பாலக்காட்டைச் சேர்ந்த குஸ்தி வீராங்கனையான ஐஸ்வர்ய லெட்சுமியை, கோயம்பத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த படிக்காத விஷ்ணு விஷால் திருமணம் செய்து கொண்டதுதான் முதல் பாகக் கதை.

மனைவி ஒரு குஸ்தி வீராங்கனை என்பதே தெரியாமல் திருமணம் செய்து கொண்டவருக்கு ஒரு கட்டத்தில் தெரிந்துவிட அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் முதல் பாகத்தின் கதையாக இருந்தது.

இந்த இரண்டாவது பாகத்தில் கணவர் விஷ்ணு விஷால் ‘ஹவுஸ் ஹஸ்பென்ட்’ ஆக இருக்க, மனைவி ஐஸ்வர்யா குஸ்தி பயிற்சியைப் பெற்றுக் கொண்டே ரயில்வே வேலையில் இருக்கிறார். அவர்களுக்கு ஒரு குட்டி மகள்.

தென்னிந்திய அளவிலான போட்டிக்கான பயிற்சியில் ஐஸ்வர்யா இருக்க, அவரது கோச் சதியில், என்னவென்றே தெரியாமல் தினமும் சாப்பாட்டில் போதை மருந்தைக் கலந்து கொடுக்கிறார் விஷ்ணு விஷால். அந்தப் போட்டியின் முதல் சுற்றிலேயே ஐஸ்வர்யா தோற்றுப் போக, அவருக்கு ஓராண்டு தடையும் விதிக்கப்படுகிறது.

தனக்கு எதுவுமே தெரியாது என விஷ்ணு விஷால் சொல்ல, அதைக் காதில் வாங்காத ஐஸ்வர்யா கணவரை விட்டுப் பிரிந்து செல்கிறார். மேலும், விவாகரத்து கேட்டு வழக்கும் தொடுக்கிறார். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

முதல் பாதில் அப்பா மகள் பாசம், கணவனின் ஹவுஸ் ஹஸ்பென்ட் வேலைகள் என கலகலப்பாக நகர்கிறது. இடைவேளைக்குப் பிறகு அப்பாவைப் பிரிந்து இருக்க முடியாத மகள், கணவனை விட்டுப் பிரிந்து செல்லும் மனைவி, விவாகரத்து வழக்கு என கொஞ்சம் சீரியஸாகச் செல்கிறது. இருந்தாலும் ஆங்காங்கே சரியான, தேவையான இடங்களில் நகைச்சுவைக் காட்சிகளை வைத்து படத்தை முழுவதுமாக ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் செல்ல அய்யாவு.

நகைச்சுவை நடிப்பில் மீண்டும் அசத்தியுள்ளார் விஷ்ணு விஷால். அவருக்கும் குட்டி மகளுக்கும் இடையிலான பாசப் பிணைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். மகள்கள் எப்போதுமே அப்பாவிடம்தான் அதிக பாசத்துடன் இருப்பார்கள். இவர்கள் இருவர் இடையிலான காட்சி படம் முழுவதும் அவ்வளவு அழகாகக் கையாளப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு ஹவுஸ் ஹஸ்பெண்ட் நமக்குக் கிடைக்க மாட்டாரா என திருமணமாகப் போகும் ‘ஜென் சி’ பெண்களுக்கு ஒரு ஏக்கத்தை, எதிர்பார்ப்பை தனது நடிப்பில் ஏற்படுத்தி இருக்கிறார் விஷ்ணு விஷால்.

ஐஸ்வர்ய லெட்சுமியை தமிழ் சினிமா இன்னும் அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தப் படத்தைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். கோபம், பாசம், கவலை, வீரம் என ஐஸ்வர்யாவின் நடிப்பு படம் முழுவதும் அம்சமாக உள்ளது.

யாருப்பா அந்த குட்டி மகள். எதிர்கால எக்ஸ்பிரஸ் குயின். ஒவ்வொரு காட்சியிலும் அப்படி ஒரு நடிப்பு. ஸாரா சியானா படம் முழுவதிலும் நம் மனதை கொள்ளை கொண்டு போகிறார்.

அந்த ஸ்கூல் டீச்சர் மோக்ஷா அழகோ அழகு. இப்படி ஒரு டீச்சர் ஸ்கூலில் இருந்தால் எல்லா அப்பாக்களும் அவர்களது குழந்தைகளை தவறாமல் கொண்டு போய் விட்டு, அழைத்து வருவார்கள். நல்ல வேளையா ‘அப்படிப் போடு’ பாடலுடன் அந்த டீச்சரின் கண்ணியத்தைக் காப்பாற்றி இருக்கிறார் இயக்குனர்.

கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன் ஆகியோர் கொஞ்சமாக வந்தாலும் தேவையான இடங்களில் சரியாக வருகிறார்கள்.

நீதிபதியாக சிறப்புத் தோற்றத்தில் ரம்யா கிருஷ்ணன், போட்டி வர்ணனையாளராக சிறப்புத் தோற்றத்தில் யோகிபாபு.

‘சம்பவக்காரி’ பாடலை ஷான் ரோல்டன் ஏன் இப்படிப் பாடியிருக்கிறார் என்று தெரியவில்லை. ‘மகராசி’ பாடல் சிறப்பு.

இந்த வருடத்தில் இதுவரையில் வெளிவந்த இரண்டு இரண்டாம் பாகப் படங்கள் நம்மை சோதித்தது. ஆனால், இந்த ‘கட்டா குஸ்தி 2’ நம்மை கலகலப்பாக ரசிக்க வைத்துள்ளது. அதோடு குடும்பத்திற்கான ஒரு குட்டி மெசேஜையும் சொல்லியுள்ளது.

Read Previous

அறிமுக இயக்குனர் படத்தில் துருவ் விக்ரம்

Read Next

ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் ‘செகண்ட் லவ்’

Most Popular