தனா இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் புதிய படத்திற்கு ‘டாக்ஸி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரேடான் மீடியா வொர்க்ஸ் இந்தியா லிமிடெட் மற்றும் பெர்ஜெயா குழும நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
‘வானம் கொட்டட்டும்’ படத்தை இயக்கிய தனா இப்படத்தை இயக்குகிறார். ஜெயமோகன் கதை எழுதுகிறார். சரத்குமாரின் 177வது படமாக உருவாகும் ‘டாக்ஸி’ அதிரடி ஆக்ஷன் என்டர்டெய்னர் திரைப்படமாகத் தயாராகிறது.
இப்படத்திற்கு ஐ. நவீன்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். சங்கத் தமிழன் படத்தொகுப்புப் பணிகளையும், சில்வா சண்டைக் காட்சிகளையும் வடிவமைக்கின்றனர். ஹர்ஷினி ரவிச்சந்தர் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றுகிறார். உத்ரா மீனாட்சி கொங்கரா நிர்வாகத் தயாரிப்புப் பொறுப்பைக் கவனிக்கிறார்.
படத்தின் அறிமுக விழாவில் பெர்ஜெயா குழுமத்தின் நிறுவனர் வின்சென்ட் டான் உள்ளிட்ட மலேசியாவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இயக்குநர் மணிரத்னம் விழாவில் பங்கேற்று படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் விழாவில் கலந்து கொண்டவர்களை வரவேற்றார்.
இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு தொடர்பான விவரங்களைப் படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.