நடிகை சிம்ரன் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். காலத்திற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக்கொண்டு, பல்வேறு வகையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
இது குறித்து சிம்ரன் கூறியதாவது, “சில கனவுகள் நனவாக சரியான நேரம் அமைய வேண்டும். ரஜினிகாந்த் சாருடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது என் நீண்ட நாள் விருப்பங்களில் ஒன்று. ‘பேட்ட’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. இப்போது ‘தர்மன்’ படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய ரஜினிகாந்த் சார், கமல்ஹாசன் சார், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என் ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ‘கேளுங்கள்… நம்புங்கள்… இந்த பிரபஞ்சம் நீங்கள் நினைக்காத விதத்தில் பதிலளிக்கும்’ என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு” என்றார்.
1997 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி வெளியான ‘ஒன்ஸ் மோர்’ மற்றும் ‘வி.ஐ.பி.’ படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான சிம்ரன், இன்றும் முன்னணி நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.