தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி ஏற்கெனவே தமிழில் தனுஷ் நடிக்க ‘வாத்தி’ படத்தை இயக்கியவர். அவரது இரண்டாவது தமிழ்ப் படமாக சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் வெளியாகி உள்ளது.
அப்பா ஒரு நடிகையை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டதால் திருமணம் என்பதின் மீதே வெறுப்பாக இருக்கிறார் சூர்யா. தொழிலதிபர், துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற வீரர் என பெருமை மிக்கவர். திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார் அம்மா ராதிகா. திடீரென அமெரிக்கா சென்று வாடகைத் தாய் மூலம் ஒரு ஆண் குழந்தையுடன் வருகிறார். அந்தக் குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை காரணமாக சிக்கல் வருகிறது. அதனால், வாடகைத் தாயாக இருந்த அமெரிக்காவில் வசிக்கும் மமிதா பைஜுவை அழைத்து வருகிறார்கள். வந்த இடத்தில் சூர்யாவின் குணத்தைப் பார்த்து காதலிக்க ஆரம்பிக்கிறார் மமிதா. ஆனால், தனக்கும் மமிதாவுக்கும் 20 வயது வித்தியாசம் இருக்க, அதையே காரணம் காட்டி மமிதாவைத் தவிர்க்கிறார் சூர்யா. இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
‘டெய்லர் மேட்’ கதாபாத்திரம் என்று சொல்வார்கள். அப்படியான கதாபாத்திரங்களாக இந்தப் படத்தில் சூர்யாவுக்கு, மமிதாவுக்கு, ராதிகாவுக்கு அமைந்திருக்கிறது.
‘கஜினி’ படத்தில் சஞ்சய் ராமசாமியாக கலக்கியவர், இந்தப் படத்தில் சஞ்சய் விஸ்வநாத் ஆக கலக்கி இருக்கிறார். தமிழ் சினிமாவில் பணக்கார குடும்பத்து கதாநாயகன் என்றால் அதற்கு அப்படியே பொருத்தமாகிப் போய்விடுகிறார் சூர்யா. ஒவ்வொரு காட்சியையும் அவர் ‘ஹேண்டில்’ செய்துள்ள விதம் ரசிக்க வைக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு இயல்பான சூர்யாவை படம் முழுவதும் பார்க்க முடிவது ஆறுதல்.
தமிழில் சினிமாவில் ரேவதி, அசின், ஜெனிலியா என துள்ளல் கதாநாயகிகள் வரிசையில் மமிதாவும் இடம் பிடித்துவிட்டார். காட்சிக்குக் காட்சி மமிதாவின் நடிப்பை ரசித்துக் கொண்டே இருக்கலாம். எந்த இடத்திலும் கதாபாத்திரத் தன்மையை மீறிய நடிப்பு என்று சொல்லவே முடியாது, அவ்வளவு இயல்பு. சூர்யாவை அவர் பார்க்கும் விதம், ராதிகாவை டீல் செய்யும் விதம், மற்றவர்களுடன் எளிதில் பழகும் விதம் என ஸ்கோர் செய்துள்ளார்.
அம்மா கதாபாத்திரத்தில் ராதிகா. இடைவேளை வரை இவரும் படத்தின் ஒரு கதாநாயகிதான். மகன் மீதுள்ள பாசம், பேரன் மீதுள்ள பாசம், மமிதா மருமகளாக வந்தால் நன்றாக இருக்கும் என்ற பாசம் என அவரது அனுபவத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
படத்தில் காமெடியன்கள், வில்லன்கள் என யாருமில்லை. சூர்யாவின் உறவினராக கூடவே இருக்கும் சுனில் ரெட்டி அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்.
ஜிவி பிரகாஷ்குமார் பின்னணி இசையில் நிறைவாய் செய்திருந்தாலும் பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். குறிப்பாக அந்தத் திருமணப் பாடலை சூப்பர் ஹிட்டாக்கி இருக்கலாம், மிஸ் செய்துவிட்டார்.
ஒரே ஒரு பிரம்மாண்டமான வீட்டிலேயே இடைவேளை வரையிலான படம் நகர்ந்து போகிறது. இடைவேளைக்குப் பின் கதை ஊட்டிக்கு நகர்கிறது.
சண்டைக் காட்சிகள் வேண்டும் என்பதற்காக இரண்டு சண்டைக் காட்சிகளை திணித்திருக்கிறார் இயக்குனர். இடைவேளை வரை சுவாரசியமாக, பரபரப்பாக நகரும் திரைக்கதை, இடைவேளைக்குப் பின் வேறு பாதையில் பயணிக்கிறது. அது முதல் பாதியுடன் ஒட்டவில்லை.
சூர்யாவின் அந்த மாதக் கடைசி வெளிநாட்டுப் பயணம் பற்றிய காட்சியை தவிர்த்திருக்கலாம். அவர் கதாபாத்திரம் மீதான இமேஜை அது குறைத்துவிட்டது.
சில குறைகள் தெரிந்தாலும் படம் முடியும் போது ஒரு நிறைவான படத்தைப் பார்த்த திருப்தி கிடைக்கிறது.