மகுடம் – விமர்சனம்

விஷால் இயக்கி நடித்திருக்கும் ‘மகுடம்’ படம், அப்பா-மகன் உணர்வுகளையும் ஆக்‌ஷன் மசாலாவையும் கலந்த ஒரு வழக்கமான கதையை எடுத்துக்கொண்டு, அதை எப்படி திறமையின்றி கையாள முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக அமைந்திருக்கிறது. மருந்து விற்பனைப் பிரதிநிதியாக வாழும் சாதாரண மனிதனின் வாழ்க்கை சூறாவளியாக மாறும் கதையைச் சொல்ல முயன்றாலும், அதன் செயல்பாட்டில் பல குறைபாடுகள் வெளிப்படுகின்றன.

மருந்து விற்பனைப் பிரதிநிதியான விஷால், மனைவி துஷாரா விஜயன் மற்றும் இரு குழந்தைகளுடன் எளிய வாழ்க்கை நடத்தி வருகிறார். குறைந்த சம்பளத்திலேயே மனநிறைவுடன் வாழும் அவர், நீண்டநாள் கனவான கார் வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். புதிய கார் வாங்க இயலாததால் பழைய கார் ஒன்றை வாங்குகிறார். அந்தக் காரால் அவரது குடும்பத்தை ஆபத்து பின்தொடர, மனைவியும் மகளும் கொல்லப்படுகிறார்கள்.

தன் மனைவி மற்றும் மகள் கொலைக்குத் தனது தந்தையே காரணம் என்று நம்பும் விஷாலுக்கு ஆத்திரம் அதிகரிக்கிறது. அப்போது தந்தை அவரைச் சந்திக்க வருகிறார். ஆனால் அவரைப் பார்க்க விரும்பாத விஷால், அவமதித்துத் திருப்பி அனுப்பிவிடுகிறார். விஷால் தன் தந்தை மீது கோபம் கொள்ளக் காரணம் என்ன? அவரது தந்தை யார்? மனைவி, மகளைக் கொன்றவர்களை விஷால் என்ன செய்தார்? போன்ற கேள்விகளுக்குக் காரசாரமான மசாலாத்தனத்துடன் பதில் சொல்ல முயற்சிப்பதே ‘மகுடம்’.

விஷால் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் இப்படம், பழைய அப்பா-மகன் சென்டிமென்ட் ஆக்‌ஷன் மசாலா கதையை எடுத்துக்கொண்டாலும், அதை எவ்வளவுக்கு எவ்வளவு கிழித்துக் கந்தலாக்க முடியுமோ அவ்வளவுக்குச் செய்திருக்கிறார் இயக்குநர் விஷால்.

அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் மூன்று விதமான தோற்றங்களில் நடித்திருக்கும் விஷாலுக்குத் தோற்ற மாற்றம் சிறிதளவும் பலனளிக்கவில்லை. உண்மையான தோற்றத்தில் மருத்துவப் பிரதிநிதியாக வரும் பாத்திரமும் அதில் வெளிப்படுத்தும் நடிப்பும் குறையற்றவை. ஆனால் அப்பா வேடத்தின் இளமை மற்றும் முதுமைத் தோற்றங்களும் அவற்றில் காட்டிய நடிப்பும் பொறுக்க முடியாத அளவுக்கு இருக்கின்றன.

அப்பா விஷாலுக்கு இணையாக நடித்திருக்கும் அஞ்சலி, மீன் விற்பனையாளர் பாத்திரத்திற்குப் பொருத்தமாக இருந்தாலும் நடிப்பில் சற்று அதிகப்படியாகவே தெரிகிறது. மகன் விஷாலுக்கு இணையாக நடித்திருக்கும் துஷாரா விஜயன், வழக்கம் போலவே தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார்.

ஜெயபிரகாஷ், ஜான் விஜய், தம்பி ராமையா, சித்ரா லட்சுமணன், வம்சி கிருஷ்ணா, சபுமோன் அபுசலிம், அஜய், அர்ஜய் பிரின்ஸ் உள்ளிட்ட பல துணை நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஒளிப்பதிவாளர்கள் ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் அபிநந்தன் ஆகியோரின் கேமரா மிக வேகமாகச் சுழல்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளை அமர்க்களமாகப் படமாக்கியிருப்பதோடு, 80களின் காலக்கட்டங்களை அதிகப்படியான வண்ணங்களுடன் காட்சிப்படுத்தியிருக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் வணிக அம்சங்களுடன் வந்துள்ளன. பின்னணி இசை அதிரடி மற்றும் ஆரவாரமான காட்சிகளுக்கு வலு சேர்க்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த், பணியின் போது தூங்கிவிட்டார் போன்ற உணர்வைத் தருகிறார். அதனால்தான் வெட்டிவிட வேண்டிய காட்சிகளை அப்படியே வைத்து, படத்தின் நீளத்தைக் கூட்டியதோடு பார்வையாளர்களின் பொறுமையையும் சோதித்திருக்கிறார்.

விஷால், தனது ஒட்டுமொத்த சினிமா அனுபவத்தையும் கேள்விக்குறியாக்கும் விதத்தில் இப்படத்தை இயக்கியிருக்கிறார். வழக்கமான வணிகப்படம் என்றாலும் அதைத் தொய்வின்றி நகர்த்தி, வணிகப்பட விரும்பிகளைத் திருப்திப்படுத்தத் தவறியிருக்கும் அவர், திரையரங்கிற்குள் வரும் ஒரு சிலரையும் கூடத் தலைதெறிக்க ஓடவைத்திருக்கிறார்.

யாருக்கு எந்தப் பாத்திரத்தைக் கொடுப்பது, யாரை எந்த இடத்தில் நடிக்கவைப்பது, நகைச்சுவைக் காட்சிகளை எப்படிக் கையாள்வது என்பதில் எந்தக் கவனமும் செலுத்தாமல், ஒவ்வொருவரும் தங்கள் இஷ்டப்படி நடிக்கவைத்து அப்படியே காட்சிப்படுத்தி, மூன்று மணி நேரத்திற்கும் அதிகமான நீளமுள்ள படமாக வழங்கியிருக்கும் விஷால், இயக்குவதை விட்டுவிட்டு நடிகராகவே தனது பயணத்தைத் தொடர்வது நல்லது.

Read Previous

தர்மன் – இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பம்

Read Next

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்