விழித்திரு – விமர்சனம்

தமிழ் சினிமாவில் ஒரு நாளில் நடக்கும் கதை, ஒரே இரவில் நடக்கும் கதை கொண்ட படங்கள் சில வந்துள்ளன. ஆனால், இந்த ‘விழித்திரு’ படம் ஒரே இரவில் நடக்கும் கதை என்றாலும், நான்கு விதமான கதைகளாக ஆரம்பித்து ஒன்றாக முடியும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மீரா கதிரவன் ஒரு விறுவிறுப்பான த்ரில்லிங் ஆக்ஷன் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

கதை 1

பர்சைப் பறி கொடுத்தால் ஊருக்குச் செல்ல முடியாமல் கார் ஓட்டச் செல்கிறார் கிருஷ்ணா. அந்தக் காரில் பயணியாக வந்த சரண் சிலரால் கொலை செய்யப்படுகிறார். அவரிடம் இருக்கும் ஐ-பேடைப் பிடிக்க ஒரு கூட்டம் கிருஷ்ணா ஓட்டும் காரைத் துரத்துகிறது.

கதை 2

பார்வை இல்லாத வெங்கட் பிரபுவும், அவருடைய மகள் சாராவும் காணாமல் போன அவர்கள் வீட்டு நாயைத் தேடிக் கிளம்புகிறார்கள். அப்புறம் சாராவும், வெங்கட் பிரபுவை விட்டு காணாமல் போய் விடுகிறார்.

கதை 3

பாண்டிச்சேரியில் பிறந்த நாளைக் கொண்டாட வந்த பணக்கார இளைஞர் ராகுல் பாஸ்கரன், அங்கு யதேச்சையாகப் பார்க்கும் எரிக்கா பெர்னாண்டஸ் அழகில் மயங்கி அவரை தன் வழிக்குக் கொண்டு வர முயற்சிக்கிறார். ஆனால், எரிக்கா அந்த இரவில் தன்னுடன் சென்னைக்கு வர ராகுலை அழைக்கிறார். முடிந்தால் தன்னை காதல் வலையில் வீழ்த்துங்கள் பார்க்கலாம் என ராகுலுக்கு சவால் விடுகிறார்.

கதை 4

தம்பி ராமையா வீட்டிலிருந்து நகைகள், பணம் ஆகியவற்றைத் தனித் தனியாகத் திருடச் செல்லும் சாய் தன்ஷிகா, விதார்த் இருவரும் ஒன்றாகத் தப்பிக்கிறார்கள். போலீசிடம் சிக்காமல் இருக்க பொய் சொல்லி சமாளிக்கிறார்கள். விதார்த்தை ஏமாற்றி தன் கூட்டாளிகளுடன் செல்ல முயல்கிறார் தன்ஷிகா. பணத்தைப் பறி கொடுத்த தம்பி ராமையா அவர்களைத் தேடிச் செல்கிறார்.

இப்படி தனித் தனியாக ஆரம்பமாகி நகரும் கதைகள் கிளைமாக்சில் ஒன்று சேர்கின்றன. அதில்தான் திரைக்கதையை மிகவும் அருமையாக வடித்திருக்கிறார் இயக்குனர் மீரா கதிரவன்.

கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு மூவரில் நடிப்பைப் பொறுத்தவரையில் விதார்த், வெங்கட் பிரபு, கிருஷ்ணா என்றுதான் வரிசைப்படுத்த வேண்டும். அதே போல நாயகிகளில் சாய் தன்ஷிகா, எரிக்கா பெர்னாண்டஸ், அபிநயா என வரிசைப்படுத்தலாம்.

விறுவிறுப்பான த்ரில்லர் கதைக்கு டி.ராஜேந்தரின் பாடல்கள் எல்லாம் தேவையற்றது. பாடல்களே இல்லை என்றாலும் படம் நன்றாகத்தான் இருக்கும்.

பெரிய நட்சத்திரங்களை நம்பாமல், வளரும் நட்சத்திரங்களை வைத்து ரசிக்கும்படியான படத்தைக் கொடுத்ததற்காகவே இயக்குனர் மீரா கதிரவனை தனியாகப் பாராட்டலாம்.

Read Previous

உறுதி கொள் – விமர்சனம்

Read Next

அவள் – விமர்சனம்

Most Popular