மம்மட்டியான் ஸ்டார்ஸ் என்ற ஆறு அத்தியாயங்கள் கொண்ட வெப் சீரிஸ், கிரிக்கெட் ரசிகர்களின் ஆழமான பக்கங்களை ஜாலியான திருப்பங்களுடன் எடுத்துரைக்கும் ஒரு சுவாரசியமான தொடராக அமைந்திருக்கிறது. எம்.எஸ். டோனி போன்ற ஒரு கிரிக்கெட் வீரரின் தீவிர ஆர்வலர்களான மூன்று இளைஞர்களின் எளிய வாழ்க்கையும், அவர்களின் பெரிய ஆசையும், அதனால் உருவாகும் சிக்கல்களும் இங்கு இயல்பாகப் பின்னப்பட்டுள்ளன. இது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, இளைஞர்களை சற்று சிந்திக்க வைக்கும் தன்மையும் கொண்டது.
வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக் ஆகிய மூன்று நண்பர்களும் எம்.எஸ்.வீர் சிங் என அழைக்கப்படும் எம்.எஸ். ரசிகர்கள். தங்கள் கிராம அணியான மம்மட்டியான் ஸ்டார்ஸை வழிநடத்தி பல்வேறு போட்டிகளில் விளையாடி வருகின்றனர். ஊர் போட்டியில் வெற்றி பெற்று கிடைக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் பரிசைப் பயன்படுத்தி சென்னையில் நடக்கும் எம்எஸ்-ன் கடைசி போட்டியை நேரில் பார்க்கத் திட்டமிடுகின்றனர். ஆனால் ஊர் தலைவரின் திடீர் மரணத்தால் இறுதிப் போட்டி நடைபெறாமல் போகிறது. அதனால் ரன்னர் அப் பரிசுத் தொகையைத் திருடி டிக்கெட் வாங்கி சென்னைக்குப் புறப்படுகின்றனர். அவர்களுடன் வைபவ்வின் முன்னாள் காதலி லாவண்யா அன்பழகனும் உடன் செல்கிறார்.
சென்னை வந்ததும் தங்கள் டிக்கெட் போலி என்று தெரிய வருகிறது. ஆனாலும் எப்படியாவது எம்எஸ் விளையாடும் போட்டியைப் பார்த்துவிட்டு ஊர் திரும்ப வேண்டும் என்று உறுதி கொண்டு பணம் திரட்ட முயற்சிக்கின்றனர். இதனால் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர். இறுதியில் அவர்கள் நினைத்தது நடக்கிறதா இல்லையா என்பதுதான் தொடரின் மையக் கதை.
இந்தத் தொடர் நட்சத்திரங்களை வழிபடும் இளைஞர்கள் அவர்களைப் பின்தொடரலாம் ஆனால் அதில் முற்றிலும் மூழ்கிவிடக் கூடாது என்ற கருத்தை இலகுவான முறையில் வலியுறுத்துகிறது. கதை முழுவதும் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. விளையாட்டின் நுட்பமான தகவல்களும், போட்டிகளில் நடைபெறும் சூதாட்ட உலகின் விவரங்களும் மிகத் தெளிவாகவும் உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன.
முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக் ஆகியோர் தங்கள் பாத்திரங்களை மிகவும் இயல்பாக உயிர்ப்பித்திருக்கின்றனர். உடல் மொழி, உரையாடல்கள், உணர்ச்சிகள் அனைத்தையும் உண்மையான நண்பர்களைப் போலவே கையாண்டு பார்வையாளர்கள் மனதில் பதிய வைத்திருக்கின்றனர். லாவண்யா அன்பழகன் தன் பாத்திரத்தின் வழியாக, இன்றைய பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ முடியாமல் தந்தை, காதலன், கணவன் போன்ற ஆண்களால் கட்டுப்படுத்தப்படும் நிலையை இயற்கையான நடிப்பால் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நான் கடவுள் ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, சம்பத் ராம், சரத் ரவி, ஹலோ கந்தசாமி போன்ற துணை நடிகர்களின் இருப்பு கதை ஓட்டத்திற்கு கூடுதல் வலிமை சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் பி.எம். ராஜ்குமார் கிராமம் மற்றும் நகரத்தின் வித்தியாசங்களை மட்டுமல்லாமல், கதாபாத்திரங்கள் இரு இடங்களுக்கும் இடையே பயணிக்கும்போது ஏற்படும் மாற்றங்களை அழகாகப் படமாக்கியிருக்கிறார்.
பரத் தனசேகரின் பின்னணி இசை சாதாரண காட்சிகளையும் கவனம் ஈர்க்கும் வகையில் உயர்த்தியிருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெவ்வேறு விதமான இசை மற்றும் பீஜிஎம் மூலம் தொடருக்கு உயிரூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. திரைக்கதை எழுதிய சவிர் சுதாகர், நவீன் ராஜ்குமார், கலைச்செல்வன், வினு கார்த்திகேயன் ஆகியோர் கிரிக்கெட் தொடர்பான அனைத்து விவரங்களையும் துல்லியமாகவும் விரிவாகவும் எழுதியிருக்கின்றனர். இளைஞர்கள் நட்சத்திரங்களின் மீது எப்படி பைத்தியம் கொள்கிறார்களோ அதுபோல கிரிக்கெட் வீரர்கள் மீதும் கொண்டு அதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை ஜாலியாகவும் சிந்திக்க வைக்கும் விதமாகவும் சொல்லியிருக்கின்றனர்.
இயக்குநர் சவிர் சுதாகர் கதாபாத்திரங்களின் பல்வேறு பயணங்களையும் பிரச்சனைகளையும் கிரிக்கெட் பின்னணியில் இணைத்து சித்தரித்திருப்பது தொடரின் முக்கிய பலம். முதல் மூன்று அத்தியாயங்கள் நண்பர்களின் எளிய வாழ்க்கை, அவர்களின் ஆசைகள், கிரிக்கெட் மீதான அவர்களின் தீவிர ஆர்வம் ஆகியவற்றால் பார்வையாளர்களை சிரிக்க வைக்கின்றன. அடுத்த மூன்று அத்தியாயங்கள் அதே கிரிக்கெட் பின்னணியில் இருந்தாலும், இதுவரை பலருக்கு தெரியாத சூதாட்ட உலகத்தை நேரடியாகக் காட்டுகின்றன.
சில இடங்களில் ஒரே இடத்தில் பல காட்சிகள் நீண்டு செல்வதால் தொடர் சற்று மந்தமாகத் தோன்றலாம். ஆனால் நாயகனின் காதல், நாயகியின் தைரியமான முடிவு, நண்பர்களிடையே ஏற்படும் மோதல்கள் ஆகியவை மூலம் அதை சமாளித்திருக்கிறார் இயக்குநர். கிரிக்கெட் சூதாட்டத்தின் ஆபத்துகளை இன்னும் விரிவாகச் சொல்லாமல் போனது ஒரு சிறிய குறையாக இருந்தாலும், இந்தத் தொடர் இளைஞர்களை நட்சத்திரங்களின் மீது கண்மூடித்தனமாக ஈர்க்கப்படாமல் சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. ஜாலியான பொழுதுபோக்குடன் சேர்த்து சில முக்கியமான செய்திகளையும் கொண்டு செல்கிறது.