நினைவிழப்பு என்பதை மையமாகக் கொண்டு, முதல் காதல் மற்றும் தற்போதைய காதல் என இரண்டு பெண்களுக்கு இடையே சிக்கும் ஒரு இளைஞனின் கதையைச் சொல்லும் ‘ஹார்ட்டின்’, யதார்த்தமான முடிவுடன் வரும் ஒரு ரொமான்டிக் டிராமா. ஜெய்ப்பூர் பின்னணியில் தொடங்கும் இந்தக் கதை, காதல், பிரிவு, மறதி ஆகிய உணர்வுகளை இயல்பாகப் பேச முயற்சிக்கிறது.
ஜெய்ப்பூரில் தனது நண்பரின் உணவகத்தில் வேலை செய்யும் சனத், ஐடி துறையில் பணியாற்றும் இமயாவுடன் நட்பு கொள்கிறான். இமயாவுக்கு சனத் மீது காதல் மலர்கிறது. ஆனால் தனது முதல் காதல் பிரிவின் வலியை மீண்டும் அனுபவிக்க விரும்பாத சனத், முதலில் அவளது காதலை ஏற்க மறுக்கிறான். பின்னர் இமயாவின் உண்மையான காதலை உணர்ந்த சனத், அவளுடன் காதல் கொள்கிறான். இமயாவின் அன்பால் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் திரும்பிய சனத், திடீர் விபத்தில் தலையில் அடிபட்டு 6 வருட நினைவுகளை இழந்துவிடுகிறான்.
நினைவிழப்புக்குப் பிறகு இமயாவையும், அவளுடனான தனது காதலையும் மறந்துவிடும் சனத், தனது முன்னாள் காதலி மடோனா செபாஸ்டியனைத் தேடிச் செல்கிறான். நினைவுகள் திரும்பிய பிறகு அவன் யாரைத் தேர்ந்தெடுப்பான்? இமயாவின் காதல் வெற்றி பெறுமா? அல்லது முதல் காதலின் ஈர்ப்பு அவனை இழுத்துச் செல்லுமா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்த சனத், இரண்டு நாயகிகள் இருந்தாலும் டூயட் அல்லது அதீத ரொமான்டிக் காட்சிகள் இல்லாமல், ஒரு சாதாரண இளைஞனாகவே தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார். முதல் காதலியின் பிரிவால் ஏற்பட்ட மன உளைச்சல், இமயாவுடன் காதல் கொண்ட பிறகு ஏற்படும் மகிழ்ச்சி, நினைவிழப்புக்குப் பிறகு ஏற்படும் குழப்பம் ஆகியவற்றை அவர் நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
அறிமுக நடிகையான இமயா, புதுமுகம் என்ற உணர்வே இல்லாமல் தன்னம்பிக்கையுடனும் இயல்பாகவும் நடித்திருக்கிறார். அவரது திரை இருப்பு மற்றும் உணர்ச்சிகரமான நடிப்பு, கதாபாத்திரத்திற்கு நல்ல வலு சேர்த்திருக்கிறது. மடோனா செபாஸ்டியன், தான் நிராகரித்த காதல் மீண்டும் தன்னைத் தேடி வரும்போது ஏற்படும் மனக் குழப்பத்தையும், வருத்தத்தையும் யதார்த்தமாகக் காட்டியிருக்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்த வாட்ஸ்அப் மணி, குணச்சித்திர வேடத்தில் நகைச்சுவையை இயல்பாக வழங்கியிருக்கிறார். அவரது மனைவியாக நடித்த டெப்னிதா தனது குறுகிய பாத்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன்.வி, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டியின் அழகை அழகியலுடன் படமாக்கியிருக்கிறார். ராஜேஷ் முருகேசனின் இசையில் வரும் பாடல்கள் இனிமையான மெலோடிகளுடன் இருக்கின்றன. ஆனால் பின்னணி இசை சற்று சாதாரணமாகவே இருக்கிறது.
நினைவிழப்பு கதையை மையமாகக் கொண்டிருப்பதால், காதல் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகரமான தருணங்கள் கொஞ்சம் குறைவாகவே வெளிப்பட்டிருக்கின்றன. படத்தொகுப்பாளர் பரத் விகரமன், இயக்குநர் சொன்னதைச் சரியாகச் செய்திருந்தாலும், காதல் காட்சிகளில் உணர்வுபூர்வமான இறுக்கம் கொஞ்சம் குறைவாகவே உள்ளது.
தமிழ் சினிமாவில் நினைவிழப்பு கதைகள் அடிக்கடி வரும் போக்கில், இந்தப் படம் யதார்த்தமான முடிவைத் தந்திருப்பது பாராட்டத்தக்கது. ஒரே நேரத்தில் இரண்டு காதல்களுக்கு இடையே சிக்கும் நாயகனின் நிலை மற்றும் இறுதியில் அவன் யாரைத் தேர்ந்தெடுப்பான் என்பது படத்தை சுவாரஸ்யமாக வைத்திருக்கிறது. இருப்பினும், சனத் மற்றும் மடோனா இடையிலான முதல் காதலின் ஆழமும், பிரிவின் வலியும் இன்னும் சற்று வலுவாகச் சொல்லப்பட்டிருக்கலாம்.
இரண்டு காதல்களுக்கு இடையேயான மன உலகை யதார்த்தமாகச் சொல்ல முயற்சித்த ‘ஹார்ட்டின்’, உணர்ச்சிகரமான ஆழம் சற்று குறைவாக இருந்தாலும், வித்தியாசமான முடிவு மற்றும் நல்ல நடிப்புகளால் பார்க்கக்கூடிய ஒரு படமாக அமைந்திருக்கிறது.