இயக்குநரும் நடிகருமான கே.பி. ஜெகன் இயக்கி, கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயில் மேட்ஸ்’.
யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை பசங்க புரொடக்ஷன்ஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்படத்தில் கே.பி. ஜெகன், விஜய் வர்மா, எம்.எஸ். பாஸ்கர், சனாஷ்கா ஸ்ரீ, மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, ‘உறியடி’ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வா சிவா’ என்ற பாடலும், அதற்கான பிரத்யேக வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மறைந்த இசையமைப்பாளர் தேவா பாடியுள்ள இப்பாடலுக்கு அறிமுகப் பாடலாசிரியர் சக்தி உமா பாலகிருஷ்ணா வரிகள் எழுதியுள்ளார். ‘எங்கெங்கோ தேடிப் போனேன்… ஏதேதோ நாடி போனேன்… இப்போ நான் ஆடிப் போனேனே… என் அப்பன் சிவனே…’ எனத் தொடங்கும் இப்பாடல், சிவபெருமானிடம் பக்தன் ஒருவன் தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தேவா மறைவுக்கு முன்பாக அவரது குரலில் பதிவு செய்யப்பட்ட கடைசிப் பாடல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அவரது தனித்துவமான குரலில் ஆன்மிக உணர்வுடன் அமைந்துள்ள இப்பாடல் இசை ரசிகர்களிடமும், சிவபக்தர்களிடமும் கவனம் பெற்றுள்ளது.
மேலும், இப்பாடலில் தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர் சிவனடியாராக நடித்துள்ளார். பாடல் படமாக்கப்பட்டபோது பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றுள்ளனர். கொக்கரை, நந்தி சிருங்கி உள்ளிட்ட பாரம்பரிய சிவ வாத்தியங்களும் இப்பாடலுக்காகப் பிரத்யேகமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இப்படத்தின் அறிமுகக் காணொளி ஏற்கெனவே வெளியாகி டிஜிட்டல் தளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமா என்ற அடையாளத்துடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுக. செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிகண்டன் சிவக்குமார் படத்தொகுப்புப் பணிகளையும், வீரசமர் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ உரிமையை வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் நிறுவனம் பெற்றுள்ளது.