தகப்பன் – இரண்டாவது பாடல் வெளியீடு

ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தகப்பன்’.

இப்படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. மார்ஷல் ராபின்சன் இசையமைப்பில், மோகன் ராஜன் பாடல் வரிகளில், ஹரிசரண், சைந்தவி மற்றும் நாராயணன் ரவிசங்கர் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளனர்.

ஏற்கெனவே வெளியான ‘தங்கபுள்ள’ முதல் பாடல் தந்தை – மகன் இடையேயான அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்திய நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘சொக்க வச்சாளே’ பாடல் கணவன் – மனைவி இடையேயான காதல் மற்றும் ரொமான்ஸை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. மென்மையான இசையில் உருவாகியுள்ள இப்பாடல், புதுமணத் தம்பதிகளின் காதல், நெருக்கம் மற்றும் இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களைப் பதிவு செய்கிறது.

லாரி ஓட்டுநராக இருக்கும் நாயகனுக்கும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நாயகிக்கும் இடையே மலரும் காதல், பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் கோயிலில் திருமணம் செய்துகொள்வது என அவர்களது காதல் பயணத்தைப் பாடலின் காட்சிகள் விவரிக்கின்றன. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள சிறிய கிராமத்து வீட்டில் தொடங்கும் அவர்களது இல்லற வாழ்க்கை, அன்றாட ரொமான்ஸ், நாயகி கர்ப்பமடையும் மகிழ்ச்சியான தருணம் என பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையே நாயகியின் அம்மாவிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் அவர்களது வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கதையின் முக்கியத் திருப்பங்கள் மற்றும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளைப் பாடலின் வழியாகவே வெளிப்படுத்தியிருப்பது இதன் சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டுள்ளது. ‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் ஜீவா நடிக்கும் இப்படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். கே. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், படத்தின் தயாரிப்புப் பணிகள் நிறைவடைவதற்கு முன்பே சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் நிறுவனமும், ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.

டிசம்பர் 24-ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள ‘தகப்பன்’ திரைப்படத்தின் முதல் பாடல் தந்தை – மகன் உறவைப் பேசிய நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பாடலான ‘சொக்க வச்சாளே’ கணவன் – மனைவி இடையேயான காதலைப் பதிவு செய்துள்ளது.

Read Previous

ஓம் – ஆபரேஷன் மோல் – விமர்சனம்

Read Next

இயக்குனர் ஆகும் ராம் பொத்தினேனி