சினிமாவில் எப்போதும் புதிய பரிசோதனைகளை முயற்சி செய்து வியக்க வைக்கும் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், தனது நீண்ட சினிமா பயணத்தில் இன்னொரு துணிச்சலான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். உரையாடல்களே இல்லாத ‘பேசும் படம்’ மூலம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்திய அவர், இப்போது உரையாடல்கள் அனைத்தும் பாடல்களாக ஒலித்தால் எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கு ‘சிங் கீதம்’ என்ற படத்தின் மூலம் பதில் சொல்லியிருக்கிறார். பேராசை, இயற்கை அழிவு, மனித உறவுகள் என பல அடுக்குகளை இணைத்து, ஃபேண்டஸி கலந்த சமூகச் செய்தியை வித்தியாசமான பாணியில் சொல்லும் இந்தப் படம், பார்வையாளர்களுக்கு புதிய திரை அனுபவத்தைத் தருகிறது.
மோசடி குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான அயான், தனது குடும்ப சொத்து ஆவணங்களைப் பெறுகிறான். அதில் சுமார் 100 ஏக்கர் நிலம் இருப்பது தெரியவர, அந்த நிலத்தைத் தேடி குபேரபுரம் என்ற ஊருக்குச் செல்கிறான். பாலைவனம் போல காட்சியளிக்கும் அந்த ஊரில் மக்கள், இரண்டு தங்கச் சுரங்கங்களை நம்பி வாழ்கிறார்கள். அங்கு சென்ற அயான், தங்கச் சுரங்கங்களில் ஒன்றின் உரிமையாளர் தனது தந்தைதான் என்பதை அறிகிறான். பணம் கிடைத்தவுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிடலாம் என்று திட்டம் போடும் அவன், திடீரென ஏற்படும் ஒரு விநோதமான சம்பவத்தால் அங்கேயே சிக்கிக்கொள்கிறான்.
அந்தச் சம்பவத்தின் விளைவாக, ஊரில் உள்ள அனைவரும் சாதாரணமாக பேசும் வார்த்தைகளைக் கூட பாடலாகப் பாடத் தொடங்குகிறார்கள். கோழிகூட கூவலை சங்கீத பாணியில் வெளிப்படுத்துகிறது. இது குபேர கடவுள் கொடுத்த சாபம் என்று நம்பும் மக்கள், அதிலிருந்து விடுபட முடியுமா? பணத்தோடு ஓடிவிட நினைத்த அயானின் திட்டம் நிறைவேறுமா? என்பதை வித்தியாசமான கற்பனையுடன் சொல்வதே ‘சிங் கீதம்’.
இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், இந்தப் படத்தில் தனது புதுமையான யோசனையை மட்டும் நிறுத்தாமல், மனிதர்களின் பேராசை இயற்கையை எப்படி அழிக்கிறது என்பதை அழகாகவும், ஆழமாகவும் சொல்லியிருக்கிறார். ஃபேண்டஸி கலந்த கதையாக இருந்தாலும், அதன் பின்னால் இருக்கும் சமூகப் பொறுப்புணர்வு மிகவும் வலுவாக இருக்கிறது. பிரச்சாரம் செய்யாமல், திரை மொழியின் மூலம் இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறார்.
நாயகனாக அயான், கலகலப்பான கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக அம்மா செண்டிமெண்ட் மற்றும் தன் தவறுகளை உணர்ந்து மனம் மாறும் காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது. மரங்களையும் இயற்கையையும் காப்பாற்றப் போராடும் கெளரி கதாபாத்திரத்தில் அஹல்யா பம்ரூ, துறுதுறுப்பான நடிப்பால் பார்வையாளர்களின் மனதில் எளிதில் இடம் பிடிக்கிறார். தங்கச் சுரங்க உரிமையாளராக ஷாலினி கொண்டேபூடி தனது எக்ஸ்பிரஷன்களால் கவர்கிறார்.
நிவேதா பெத்துராஜ், ராகுல் ரவீந்திரன், சிவ நாராயணா, பெனர்ஜி, வாம்சி உள்ளிட்டோர் தங்களது பாத்திரங்களுக்கு நல்ல நீதி செய்திருக்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் விஜய் தேவரகொண்டாவின் வருகை படத்திற்கு கூடுதல் ஈர்ப்பைத் தந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் அங்கூர்.சி, வறண்ட பாலைவனச் சூழலை அழகாகவும், யதார்த்தமாகவும் படமாக்கியிருக்கிறார். கலை இயக்குநர் அரவிந்த் மூலே, முழு ஊரையே உருவாக்கியிருப்பது படத்தின் மிகப்பெரிய வலுவாக அமைந்திருக்கிறது. வறண்ட நிலம், பழைய தங்கச் சுரங்கங்கள், குபேர கோவில் என அனைத்தும் செயற்கை என்று தெரியாமல் இயற்கையாகவே காட்சியளிக்கின்றன.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்தின் உயிர் என்றால் மிகையில்லை. சாதாரண உரையாடல்களைப் பாடல்களாக மாற்றியது மட்டுமல்லாமல், தனிப்பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலமாகவும் படத்திற்கு முழு உயிரூட்டியிருக்கிறார். அவரது இசை இல்லாமல் இந்தக் கருத்து இவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்திருக்காது.
50 ஆண்டுகளுக்கும் மேலான சினிமா பயணத்திற்குப் பிறகும், இன்னும் இளமையான சிந்தனையுடன் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், ‘சிங் கீதம்’ மூலம் தனது திறமையை மீண்டும் நிரூபித்திருக்கிறார். உரையாடல்களை பாடல்களாக மாற்றியது எளிதான காரியமல்ல. ஆனால் அதை எந்தவித போராட்டமும் இல்லாமல், இயல்பாகவும், ரசிக்கத்தக்க விதத்திலும் திரையில் கொண்டு வந்திருப்பது இயக்குநரின் மிகப்பெரிய வெற்றி.
வித்தியாசமான கருத்து, அழகான காட்சிகள், சிறப்பான இசை மற்றும் வலுவான செய்தி என பலம் நிறைந்த ‘சிங் கீதம்’, வழக்கமான படங்களை விரும்பாதவர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும் படமாக அமைந்திருக்கிறது. பார்க்க வேண்டிய ஒரு துணிச்சலான முயற்சி!