அந்தரன் – விமர்சனம்

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் புதிய முகம் காட்டும் ‘அந்தரன்’, இயக்குநர் சந்தோஷ் ராவணனின் திரைக்கதை திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் படைப்பு. தொடர் கொலைகள், காதல், மர்மம் என பல அடுக்குகளை இணைத்து, பார்வையாளர்களை கடைசி வரை யூகிக்க விடாமல் வைத்திருக்கும் இந்தப் படம், வழக்கமான திரில்லர் பாணியைத் தாண்டி சுவாரஸ்யமான திருப்பங்களுடன் முன்னேறுகிறது.

நாயகி இவானா வருண் தனது முதல் காதலனை கொடூரமாக இழக்கிறாள். சில மாதங்களுக்குப் பிறகு, பெற்றோர்களின் வற்புறுத்தலால் அவளுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் வருங்கால மாப்பிள்ளை திடீரென தற்கொலை செய்துகொள்கிறார். இதைத் தொடர்ந்து இவானாவுக்கும் இரண்டாவது திருமண ஏற்பாடு நடக்கிறது. ஆனால் அந்த நிச்சயதார்த்தமும் விபத்தில் முடிகிறது. இந்த மரணங்கள் தற்செயலானவை என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, காவல்துறை விசாரணையில் இவை அனைத்தும் திட்டமிட்ட கொலைகள் என்பது தெரியவருகிறது.

வழக்கில் எந்த தடயமும் கிடைக்காத நிலையில், அனுபவமிக்க காவல்துறை அதிகாரி பிரஜினிடம் வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. இவானாவை விசாரிக்கும் பிரஜின், படிப்படியாக அவள் மீது காதல் கொண்டு, அவளை திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார். இவானாவுக்கு முன்னால் திருமணம் செய்துகொள்ள நினைத்தவர்களுக்கு ஏற்பட்ட அதே விதி பிரஜினுக்கும் ஏற்படுமா? அல்லது அவர் கொலையாளியை கண்டுபிடித்து மர்மத்தை தீர்ப்பாரா? என்பதை பல திடுக்கிடும் திருப்பங்களுடன் சொல்வதே ‘அந்தரன்’ படத்தின் மையக்கரு.

காவல்துறை அதிகாரியாக நடித்த பிரஜின், கம்பீரமான தோற்றத்துடன் தனது கதாபாத்திரத்திற்கு முழு நியாயம் செய்திருக்கிறார். அதிகாரி என்ற முறையில் தீவிரமும், காதலன் என்ற வகையில் உணர்ச்சிகளும் கலந்த அவரது நடிப்பு படத்திற்கு வலு சேர்க்கிறது. நாயகியாக இவானா வருண், வலுவான கதாபாத்திரத்தை இயல்பாகவும் உணர்வுபூர்வமாகவும் கையாண்டு கவனம் ஈர்க்கிறார்.

இவானாவின் தந்தையாக எம்.கே.சாம்பசிவம், தாயாக செந்தி குமாரி, அனுபமா குமார், அதிரன், ரமேஷ் பாபு, கீதா, பத்மன், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் உள்ளிட்டோர் தங்களது பாத்திரங்களுக்கு நல்ல நீதி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கிஷோர் ராமச்சந்திரன், கிரைம் காட்சிகளில் பதற்றத்தையும், காதல்-பாடல் காட்சிகளில் வண்ணமயமான அழகையும் தந்து பார்வையை கட்டிப்போட்டிருக்கிறார். ஹரி.எஸ்.ஆர் இசையமைப்பில் காதல் பாடல்கள் இதமாக அமைந்திருக்கின்றன. பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை இன்னும் அதிகரிக்கச் செய்கிறது. இக்னேஷியஸ் அஸ்வின் மற்றும் சதீஷ் குரோசாவா ஆகியோரின் தொகுப்பு, படத்தை தொய்வின்றி, இறுக்கமாக முன்னெடுத்துச் செல்கிறது.

இயக்குநர் சந்தோஷ் ராவணன், வழக்கமான தொடர் கொலை கதைகளுக்கு புதிய உயிர் கொடுத்திருக்கிறார். பார்வையாளர்களுக்கு பல கதாபாத்திரங்கள் மீது சந்தேகம் எழும் வகையில் காட்சிகளை அமைத்து, கிளைமாக்ஸில் எதிர்பாராத திருப்பத்துடன் அனைத்து யூகங்களையும் தகர்த்தெறிகிறார். நாயகியின் வீட்டில் இருக்கும் இளைஞர் யார் என்பதை தெளிவாக விளக்காதது சிறிய லாஜிக் குறை என்றாலும், படத்தின் தொடக்கத்திலேயே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்து, இறுதி வரை “அடுத்து என்ன நடக்கும்?” என்ற எதிர்பார்ப்பை தக்க வைத்திருக்கிறார்.

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு முழு திருப்தி தரும் படமாக ‘அந்தரன்’ அமைந்திருக்கிறது. திருப்பங்கள், இறுக்கமான திரைக்கதை, நல்ல நடிப்பு என பலம் நிறைந்த இந்தப் படம், வீட்டில் அமர்ந்து பார்க்கத் தகுந்த ஒரு நல்ல திரில்லர் அனுபவத்தைத் தருகிறது.

Read Previous

லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி – பூஜையுடன் ஆரம்பம்

Read Next

சிங் கீதம் – விமர்சனம்

Most Popular