ஜனநாயகன் விமர்சனம்

பாலகிருஷ்ணா, அவரது வளர்ப்பு மகளான ஸ்ரீலீலாவை ராணுவத்தில் சேர்த்தே ஆக வேண்டும் என வைராக்கியத்துடன் இருக்கிறார். சிறு வயதில் நடந்த ஒரு விஷயம் ஸ்ரீலீலாவுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், ராணுவம் எல்லாம் வேண்டாம் என மறுக்கிறார். இதனிடையே, ஒரு விவகாரத்தில் வில்லன் கோஷ்டி, ஸ்ரீலீலாவைக் கடத்திச் செல்கிறது. விஷயம் அறிந்து அங்கு சென்று வில்லன் கோஷ்டியை எதிர்க்கிறார் பாலகிருஷ்ணா. அங்கு சில எதிர்பாராத திருப்பங்கள் நடக்கிறது. அது என்ன, வில்லன் ஏன் ஸ்ரீலீலாவைக் கடத்தினான் ?, அவரை வளர்க்கும் பாலகிருஷ்ணா யார் ?, வில்லனை என்ன செய்கிறார் பாலகிருஷ்ணா ? என்பதுதான் 2023ல் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகி ஓடி 100 கோடி வசூலித்த ‘பகவந்த் கேசரி’ தெலுங்குப் படம்.

அந்தப் படத்தை அப்படியே தமிழில் ரீமேக் செய்திருந்தால் ஒரிஜனல் தெலுங்குப் படத்தில் இருந்த எமோஷனல், ஆக்ஷன், அதிரடி அனைத்துமே விஜய்க்கு அட்டகாசமாகப் பொருந்தி அவரது சிறந்த ‘பேர்வெல்’ படமாக ‘ஜனநாயகன்’ படம் அமைந்திருக்கும். 

ஆனால், படத்தை பிரம்மாண்டமாக உருவாக்குவோம் என விபரீத கற்பனை செய்து, ஆப்பிரிக்க நாடு ஒன்றை நிர்மூலமாக்கி அதன் அதிபரைக் கொலை செய்யும் ஒரு வில்லன். அந்த வில்லன் தமிழகத்திற்குள்ளும் நுழைந்து இங்கு மதக் கலவரங்களைத் தூண்டி, இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்களுக்குள் சண்டையிட வைத்து இந்தியாவை நாசமாக்கத் துடிக்கிறான் என பில்டப் கொடுத்து, அந்த வில்லன் யார் என்றால் மதுரையின் முன்னாள் டெபுடி கமிஷனர் என்று சொல்லி, அந்த டெபுடி கமிஷனரையே சுட்டுக் கொன்ற (?) இன்ஸ்பெக்டர் தான் தளபதி வெற்றி கொண்டான் என ஒரு டிவிஸ்ட் வைத்து கடைசியில் ‘இந்தியா’ என ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’ ஆக நாட்டைக் காப்பாற்றுகிறார் இந்த ‘ஜனநாயகன்’.

கிளைமாக்சில் திடீரென ரேபோட்டுகள் வருகிறது, வில்லனை எதிர்க்க சிறப்பு டாங்கர் ஒன்றை ஒருவர் உருவாக்க அதில் ஏறி நாயகன் விஜய்யும், அவரது வளர்ப்பு மகளும் வில்லனை போட்டிப் புரட்டி எடுக்க ஒரு படத்தில் என்னென்ன சொல்ல முடியுமோ அதை அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்ல வேண்டும் என ஒரு பட்டியல் போட்டு 3 மணி நேரத்திற்கு சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர் அ வினோத்.

பெண் குழந்தைகளுக்கு அட்வைஸ், அரசியல்வாதிகளுக்கு அட்வைஸ், வில்லன்களுக்கு அட்வைஸ், உயரதிகாரிகளுக்கு அட்வைஸ் என பக்கம் பக்கமாக விஜய்யை வசனம் பேச வைத்திருக்கிறார் இயக்குனர். ஒரு நீண்ட வசனம், ஒரு நீண்ட சண்டை, ஒரு நீண்ட வசனம், ஒரு நீண்ட சண்டை என மாறி மாறி திரைக்கதை போய்க் கொண்டே இருக்கிறது.

இடையில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ எம்ஜிஆர் போல கையில் சாட்டை எடுத்துக் கொண்டு எம்ஜிஆர் புகைப்படம் உயிர் பெற்று ஆசீர்வாதம் சொல்வது போல வசனம் வைத்து, படத்தின் ஆரம்பத்தில் விஜய் அறிமுகக் காட்சியில் சுவற்றில் எம்ஜிஆர் ஓவியம் தெரிய வைத்து என அந்த பில்டப் வேறு. 

விஜய்க்கும் இருக்கும் மாஸ் ஹீரோயிசத்திற்கான காட்சிகளை சாதாரணமாகச் சொல்லி இருந்தாலே அதுவே தெறிக்கும். ஆனால், அதை வேறு பில்டப் கொடுத்து எடுப்போம் என ஓவர் பில்டப் கொடுத்திருக்கிறார்கள். ஒரு வேளை பொங்கலுக்கு, தேர்தலுக்கு முன்பு படம் வெளியிடும் நோக்கம் இருந்ததால் இப்படி சேர்த்திருக்கலாம்.

விஜய்யின் ஜோடியாக பூஜா ஹெக்டே, நாயகனுக்கு உதவி செய்யும் கதாபாத்திரம் என்பதால் அவரை ஒரு டிவி ஜர்னலிஸ்ட் ஆக வைத்துவிட்டார்கள். ஒரே ஒரு பாடலில் மட்டும் நடனமாடி சில வசனங்களைப் பேசிவிட்டு இருக்கும் தெரியாமல் போகிறார்.

மமிதா பைஜு பாசமான வளர்ப்பு மகளாக மனதில் இடம் பிடிக்கிறார். அதிலும் கடைசியில் காதலனிடம் தனது வளர்ப்பு அப்பா பற்றி பேசும் காட்சி ‘நச்’.

மெயின் வில்லன் பாபி தியோல். ஹிந்தி முகங்கள் தமிழ் சினிமாவில் வந்தாலே அலர்ஜியாக இருக்கிறது என்று சொல்லுமளவிற்கு இருக்கிறது அவரது நடிப்பு. அரசியல்வாதி ஒருவரை வில்லனாகக் காட்ட வேண்டும், பிரகாஷ் ராஜை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள். அவரை எதிர்த்துப் பேசும் வசனங்களில் அரசியல் மட்டுமே இருக்கிறது.

சிறிய கதாபாத்திரங்களில் கவுதம் மேனன், நரேன், சுனில், பிரியாமணி, ரேவதி, நாசர் என வந்து போகிறார்கள். 

அனிருத் இசைதான் படத்தின் பில்டப்பைக் காப்பாற்றி இருக்கிறது. பாடல்களில் வழக்கம் போல அதிரடியைக் கிளப்பி இருக்கிறார்.

படம் முழுவதும் கூட்டம், கூட்டம், ஆரம்பம் முதல் இறுதி வரை ஆயிரமாயிரம் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். ஸ்டன்ட் மாஸ்டருக்கு அதிக வேலை. ஒவ்வொரு சண்டைக் காட்சியையும் பிரம்மாண்டமாக, அதிரடியாகக் காட்ட சிரமப்பட்டிருக்கிறார். மாஸ் எப்படி காட்ட வேண்டும் என்பதை ஒளிப்பதிவில் செய்திருக்கிறார் சத்யன் சூர்யன். ரிவைசிங் கமிட்டி ‘கட் ’ செய்ததை விட எடிட்டர் இன்னும் நிறைய கட் செய்திருக்கலாம். 

படத்தின் முதல் பாதி விஜய் ரசிகர்களுக்கும் மற்ற ரசிகர்களுக்கும் பிடிக்கலாம். இரண்டாம் பாதி ஆரம்பமானதும் வரும் பிளாஷ்பேக் அவ்வளவு நீளம். அதன்பின் திரைக்கதை எங்கெங்கோ போய் வருகிறது. இரண்டு, மூன்று கிளைமாக்ஸ் வருகிறது. 

‘ஒன் லாஸ்ட் டைம், ஒன் லாஸ்ட் டான்ஸ்’ என்றார்கள். ஆனால், இப்படியான ‘லாஸ்ட்’ இருக்கும் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் இதுதான் தனது கடைசி படம் என விஜய்யே சொல்லிவிட்டார்.

எனவே, இதற்கு முந்தைய விஜய்யின் நல்ல படம் ஒன்றை நினைத்து இந்தப் படத்தை மறப்போமாக.

Read Previous

ஜனநாயகன் – டிரைலர்