தமிழ் சினிமாவில் மலை கிராமங்கள் சார்ந்த கதைகள் வருவது அபூர்வமானவை. அப்படியே வரும் படங்களும் காதல் படங்களாகத்தான் அதிகம் வந்திருக்கின்றன.
மலை கிராம மக்களின் பிரச்சனைகளைச் சொல்லும் படங்கள் வருவது மிகவும் அரிதானது. அந்தக் குறையை ‘திட்டி வாசல்’ படம் போக்கியிருக்கிறது.
முள்ளங்காடு மலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அந்த ஊர் பெரிய மனிதரான நாசர் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்கள். அந்த ஊர் மக்களைக் காப்பதுதான் அவருடைய வேலை. ஆனால், அந்த கிராமத்திலிருந்து மக்களை வெளியேற்றி அந்த மலை கிராமத்தை தனதாக்கிக் கொள்ளப் பார்க்கிறார் அமைச்சர். அதற்காக காவல் துறை, வனத்துறை ஆகியவற்றை ஏவிவிடுகிறார். இருந்தாலும் மக்கள் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேற மறுக்கிறார்கள். வலுக்கட்டாயமாக அவர்களை வெளியேற்றும் போது நடக்கும் பிரச்சனையில் நாசர் கொல்லப்படுகிறார். அந்தக் கிராமத்து இளைஞர்களான மகேந்திரன், வினோத் உள்ளிட்டவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சிறையில் அவர்களைக் கொடுமைப்படுத்தும் வேலைகள் நடக்கிறது. அவர்களைக் காப்பாற்ற மகேந்திரனின் காதலியான தனு ஷெட்டி போராட்டத்தில் இறங்குகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நாசர். ஊர் பெரிய மனிதர் மூப்பன் ஆக அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார். மகேந்திரன், வினோத் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். படத்தின் நாயகியாக தனு ஷெட்டி, சினிமாவுக்குரிய முகம் இல்லை என்றாலும் கதாபாத்திரத்தில் தனித்துத் தெரிகிறார்.
குறிப்பிட்ட கதாபாத்திரங்களின் மீது கதை நகராமல், மலை கிராமப் பிரச்சனையாக மட்டுமே நகர்கிறது. அதன் போக்கிலேயே திரைக்கதையும் அமைக்கப்பட்டிருக்கிறது.
எடுத்துக் கொண்ட மக்கள் பிரச்சனையெல்லாம் சரி, ஆனால், அதை ரசிக்க வைக்கும் விதத்தில் கொடுத்திருக்கலாம் இயக்குனர் பிரதாப் முரளி.