காலா – விமர்சனம்

ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. தமிழ் சினிமாவில் ‘மெட்ராஸ்’ படம் மூலம் தன்னைப் பற்றி அதிகம் பேச வைத்தவர் இயக்குனர் பா.ரஞ்சித். அடுத்து ரஜினிகாந்த்துடன் இணைந்து ‘கபாலி’ படத்தைக் கொடுத்தார். அந்தப் படத்தில் அவருடைய பார்வை என்ன என்பது இந்த திரையுலகத்திற்குப் புரிய வந்தது. இந்த ‘காலா’வில் அந்தப் பார்வை இன்னும் அதிகமாக விரிந்துள்ளது.

‘நிலம் எங்கள் உரிமை’ என தாங்கள் வாழும் நிலத்திற்காக போராடிக் கொண்டிருப்பவர்கள் இந்த உலகத்தில் பல நாடுகளில் இருக்கிறார்கள். அது இனப் போராட்டமாகவே இந்த உலகத்திற்குத் தெரிய வருகிறது. அது இனப் போராட்டம் மட்டுமல்ல, வாழும் உரிமையும் கூட என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அப்படி ஒரு வாழ்வியல் போராட்டத்தை இந்த ‘காலா’ படத்தில் கொடுத்திருக்கிறார்.

தாராவி என்பதை மாற்றி நீங்கள் இலங்கை என்றோ, தூத்துக்குடி என்றோ வேறு எந்த களத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம். மனைவி, குழந்தைகள் என குடும்பமாய் வாழ முடியாத மக்கள் அதற்குப் பிரச்சினை வரும் போது போராட்டத்தில் இறங்குகிறார்கள். அப்படிப்பட்ட போராட்டத்தின் வலி எப்படி இருக்கும் என்பதை இந்த ‘காலா’ படத்தைப் பார்த்தும் புரிந்து கொள்ளலாம்.

சினிமாவில் போராட்டத்தை ஆதரித்து ரசிகர்கள் கைதட்டும் அளவிற்கு வசனம் பேசி நடித்துள்ள ரஜினிகாந்த் நிஜ வாழ்க்கையில் போராட்டத்தை வேண்டாம் என்று பேசுவதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக உள்ளது.

‘இந்த உடம்புதான் நம்ம ஆயுதம், தேவைப்பட்டால் அந்த கடவுளைக் கூட எதிர்ப்பேன், என் சுதந்திரம்தான் என் சுயநலம், கருப்பு உழைப்பின் வண்ணம்’ என வசனம் பேசும் நிஜ வாழ்வில் மக்களின் தேவைகள் என்ன என்பதை உணர்ந்து கொண்டால் அவருடைய திரையுலகப் பயணத்திற்கும் நல்லது.

தென் தமிழ்நாட்டிலிருந்து மும்பை சென்று செட்டில் ஆனவர்களால் உருவானதுதான் மும்பை தாராவி. மதம், இனம், சாதி என எந்த வேற்றுமையும் இல்லாமல் ஒற்றுமையாக தமிழர்கள் என்ற அடையாளத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய அந்த தாராவி பகுதியை தன் வசப்படுத்த முயல்கிறார் வெள்ளை உடையில் நல்ல மனிதர் என்ற போர்வையில் இருக்கும் முன்னாள் தாதா ஹரி தாதா (நானா படேகர்). ஒரு காலத்தில் அந்தப் பகுதியின் தலைவனாக வாழ்ந்த வேங்கையன் மற்றும் பலரைக் கொன்று இன்று அரசியலிலும் தனி சக்தியாக வளர்ந்து நிற்கும் நானா படேகரை, அந்த வேங்கையன் மகன் ‘காலா’ (ரஜினிகாந்த்) எப்படி எதிர் கொண்டு வீழ்த்துகிறான் என்பதுதான் படத்தின் கதை.

மும்பை, தாராவி என்றதும் தமிழ் சினிமாவில் அனைவருக்கும் ‘நாயகன்’ படம்தான் ஞாபகத்திற்கு வரும், அது மணிரத்னம் இயக்கம். இந்த ‘காலா’ பா.ரஞ்சித் இயக்கம். அதனால், ரஞ்சித்தின் எண்ண வண்ணங்களான கருப்பு, சிவப்பு, நீலம் என பல அர்த்தங்கள் இந்த ‘காலா’வில் புதைந்து கிடக்கின்றன.

‘காலா’வை ராவணன் என்று சொல்லும் நானா படேகர் வீட்டில் ராமர் பூஜை நடந்து கொண்டிருக்கும் போதுதான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நடக்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே சம்பத் கொல்லப்படும் போது, விநாயகரை கடலில் மூழ்கடிக்கிறார்கள். படத்தின் பல காட்சிகளில் புத்தர் படத்தை பின்னணியில் காட்டுகிறார் ரஞ்சித். இந்து கடவுள்கள் மீதான அவரது பார்வை வன்மம் ஆக இருக்கிறதோ என யோசிக்க வைக்கும் காட்சிகள் அவை.

ரஜினிகாந்த் இதுவரை நடித்து வந்த படங்கள், கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்ட கதாபாத்திரமாக ‘கபாலி’ இருந்தது. அந்தப் படத்தில் கூட அதிகமான ஹீரோயிசம் இருந்தது. ஆனால், ‘காலா’ படத்தில் ரஜினிகாந்த்தை ஒரு குடும்பத் தலைவராகவும் பொறுப்பான வசனங்களைப் பேச வைத்திருக்கிறார் இயக்குனர். அவருடைய அடிதடி ஆக்ஷன் நடிப்பை விட, மனைவி மீது காட்டும் பாசம், முன்னாள் காதலி மீது காட்டும் காதல், மகன்கள் மீது காட்டும் அன்பு, கோபம், உறவினர்கள் மீது காட்டும் நேசம் ஆகியவை நெகிழ வைக்கின்றன. ‘கபாலி’யிலிருந்து ‘காலா’வை நிறையவே வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறார் ரஜினிகாந்த். மந்திரி சாயஜி ஷிண்டேயிடம் ‘யார் இவர்….யார் இவர்…?’ எனக் கேட்கும் வசனம் ‘யார் நீங்க..’ என்ற தூத்துக்குடி நிஜ வசனத்தை ஞாபகப்படுத்துகிறது. போராட்டங்களுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் எதிர்ப்புக் குரல் ஒலிக்கிறது.

ரஜினியின் மனைவியாக ஈஸ்வரி ராவ். ஒரு நாயகியாக தமிழ் சினிமாவில் நல்ல இடத்தைப்  பிடித்திருக்க வேண்டியவர். யார் இவர் ? என படம் பார்க்கும் ரசிகர்களை நிச்சயம் கேட்க வைப்பார். கணவன் ரஜினிகாந்த், வேறொரு பெண்ணை காதலித்தவர் என்று தெரிந்த பின்னும் அவர் மீதுள்ள பாசத்தைப் பொழியும் காட்சிகளில் யதார்த்த நடிப்பில் அசத்துகிறார் ஈஸ்வரி ராவ்.

ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக ஹுமா குரேஷி. இளமையான நடிகையை முதிர்ச்சியான தோற்றத்தில் மாற்றியிருக்கிறார்கள். அவரும் அந்தக் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருக்கிறார். ரஜினிகாந்த்தை ‘கரிகாலன்’ என உரிமையுடன் அழைக்கும் போதே அவருக்குள் இருக்கும் காதல் வெளிப்படுகிறது.

ரஜினிகாந்த் படம் என்றாலே அவருக்கு எதிராக நிற்பவர் அவருடன் போட்டி போடும் அளவிற்கு இருக்க வேண்டும். இந்தப் படத்தில் ரஜினிகாந்த்தையும் மிஞ்சும் அளவிற்கு நடித்திருக்கிறார் நானா படேகர். அதிலும் ரஜினிகாந்த்திடம், தன் காலைத் தொட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு போ என்று சொல்லும் காட்சியில் அவருடைய பார்வையும், உடல்மொழியும் அசத்தல்.

ரஜினிகாந்தின் தளபதியாக அவருடைய மகன் ‘வத்திக்குச்சி’ திலீபன், நண்பனாக சமுத்திரக்கனி இருவருமே அவர்களைப் பற்றி பேச வைத்திருக்கிறார்கள். ரஜினிகாந்தின் கடைசி மகனாக புரட்சி பேசும் மணிகன்டன், இவருடைய காதலியாக அஞ்சலி பாட்டீல் இவர்களும் கவனிக்க வைக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையில் ரஜினி படத்தைப் பார்ப்பதற்கு பொருத்தமில்லாமலே இருக்கிறது. இசையால் அதிரடியை இன்னும் அதிகமாக்க வேண்டாமா ?. ‘கபாலி’ போலவே ஒரு டியூனைப் பிடித்து தீம் மியூசிக்காக்கி அதை ‘காலா’வில் பயன்படுத்தியிருக்கிறார். ‘வாடி என் தங்கச்சிலை…’ பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது.

மும்பை தாராவியை சென்னை ஸ்டுடியோவில் அப்படி அச்சு அசலாக வடிவமைத்த கலை இயக்குனர் ராமலிங்கம் பெரிதும் பாராட்டுக்குரியவர்.

‘நிலம் எங்கள் உரிமை’ என்று போராடும் மக்கள், அந்த மக்களுக்காக எதையும் செய்யத் துணியும் ஒரு தலைவர், சினிமாவில் இதை செய்து பாராட்டுக்களைப் பெறும் ரஜினிகாந்த், நிஜ வாழ்விலும் மக்களுக்கு ஆதரவாக இருக்கலாம்.

காலா-ன்னா கருப்பு, கருப்பு உழைப்பின் வண்ணம். படத்தில் அதுவே கொள்கையாகவும் இருக்கிறது.

 

Read Previous

‘காலா’- அமெரிக்க பிரிமீயர் வசூல் டார்கெட் என்ன ?

Read Next

‘காலா’ பார்க்க காத்திருக்க முடியாது – ஆமீர் கான்

Most Popular