இப்படை வெல்லும் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் தீவிரவாதத்தை மையமாக வைத்து வரும் படங்கள் ‘அவுட் டேட்டட்’ ஆகிவிட்டன. அவை தமிழ் சினிமாவை விட்டு விலகி சில வருடங்கள் ஆகிவிட்டன.

இப்படி முடிந்து போன ஒரு டிரென்டை மீண்டும் இந்தப் படம் மூலம் உருவாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கௌரவ் நாராயணன்.

வெடிகுண்டு வைப்பது என்றாலே அவர்கள் முஸ்லிம் ஆக இருப்பார்கள் என்றுதான் காலம் காலமாக தமிழ் சினிமாக்களும், இந்திய, உலக சினிமாக்களும் காட்டி வருகின்றன. ஆனால், இந்தப் படத்தில் வெடிகுண்டு வைப்பது முஸ்லிம் அல்ல என்பது மட்டும்தான் ஒரு வித்தியாசம். அடுத்தது, நாயகனின் அம்மாவை பேருந்து ஓட்டுனராகக் காட்டியிருப்பது இரண்டாவது வித்தியாசம். மற்றபடி படத்தில் ஏற்கெனவே பார்த்துப் பழகிய காட்சிகள்தான் அதிகம்.

சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை போன உதயநிதி ஸ்டாலினும், உதவி கமிஷனர் ஆன ஆர்.கே. சுரேஷ் தங்கையான மஞ்சிமா மோகனும் காதலர்கள். இவர்கள் காதலை வழக்கம் போல அண்ணன் ஆர்.கே. சுரேஷ் எதிர்க்கிறார். வட இந்தியாவில், ஹைதராபாத்தில், வெடிகுண்டு வைத்துவிட்டு சென்னைக்கு வெடிகுண்டு வைக்க வருகிறார் தீவிரவாதியான டேனியல் பாலாஜி. அவர் சாலையில் வந்து கொண்டிருக்கும் போது காரில் செல்லும் உதயநிதி அவர் மீது இடித்து விடுகிறார். மருத்துவமனையில் சேர்த்துவிட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாததால் ஓடி வந்து விடுகிறார் உதயநிதி. மருத்துவமனையில் உள்ள சிசிடிவி மூலம் டேனியல் பாலாஜி சென்னைக்கு வந்திருப்பது காவல் துறைக்குத் தெரிய வருகிறது.

உதயநிதியும் அந்த கேமராவில் பதிவாகியிருப்பதால் அவர்தான் டேனியலுக்கு உதவி செய்பவர் என போலீஸ் அவரைப் பிடித்து விடுகிறது. கூடவே, டேனியலுக்கு பைக்கில் லிப்ட் கொடுத்த சூரியும் கைது செய்யப்படுகிறார். அவர்கள் கமிஷனர் ஆபீசுக்குச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள். அங்கிருந்து உதயநிதியும், சூரியும் தப்பித்து விடுகிறார்கள். தங்களுக்கும், டேனியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என உதயநிதி, காதலி மஞ்சிமாவின் உதவியுடன் நிரூபிக்கப் போராடுகிறார். இதுதான் படத்தின் கதை.

உதயநிதி வழக்கம் போல அவருக்கேற்ற கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து நடித்துள்ளார். முழுமையான ஆக்ஷன் கதாபாத்திரமாக இல்லாமல் ஓடிக் கொண்டேயிருக்கும் கதாபாத்திரமாக உதயநிதிக்கு இருக்கிறது. அவரும் சலிப்பில்லாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறார். அவருக்கான வெற்றி ஓட்டத்தை இந்தப் படம் கொடுக்குமா என்பது சந்தேகம்தான்.

மஞ்சிமா மோகன், சோகத்தை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு போல் எப்போதுமே ‘உம்’ என்றே இருக்கிறார். காதலனுக்கு உதவி செய்யும் பொறுப்புள்ள காதலியாக இருக்கிறார்.

சூரியின் நகைச்சுவையில் துர்நாற்றம் அதிகம், ‘பாம்’ போடுவது, அடிக்கடி சிறுநீர் கழிக்க ஓடுவது, இவற்றையெல்லாம்தான் அவர் நகைச்சுவை என நினைத்துக் கொண்டால் சூரி, ரொம்ப சாரி. உங்க ரூட்டை மாற்றவில்லை என்றால் உங்கள் இடத்தை வேறு ஒருவர் விரைவில் நிரப்புவார்.

வில்லனாக டேனியல் பாலாஜி. பொதுவாக தீவிரவாதி என்றாலே வெள்ளையாக, வட இந்தியரைப் போலத்தான் தமிழ் சினிமாவில் காட்டுவார்கள். இந்தப் படத்தில் ஒரு கருப்பு முகத்தை தீவிரவாதி எனக் காட்டுகிறார்கள். ஏற்றுக் கொள்ளக் கடினமாக இருந்தாலும் தன்னுடைய ‘சோட்டா’ கதாபாத்திரத்தில் ‘பெட்டர்’ ஆக நடித்திருக்கிறார் டேனியல் பாலாஜி.

ஆர்.கே.சுரேஷ் அவ்வளவு உயரம் குறைவாக இருக்கிறார், அவரை எப்படி உதவி கமிஷனர் ஆக ஏற்றுக் கொள்ள முடியும். ராதிகா, சிறப்புத் தோற்றத்தில் வந்தாலும் சிறப்பு.

இமானின் இசையில் ‘குலேபா வா’ பாடல், படமாக்கப்பட்ட விதம் அழகோ அழகு.

படத்தில் குண்டு வைக்க வந்த தீவிரவாதி டேனியல் பாலாஜி சென்னையில் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. ஒட்டு மொத்த போலீசாரும், அவரைக் கண்டுபிடிக்க முயற்சி எடுக்காமல், அவருக்கு உதவி செய்த உதயநிதி, சூரி ஆகியோரை மட்டுமே தேடுவது ஏன் எனத் தெரியவில்லை. மெயின் திரைக்கதையிலேயே இவ்வளவு பெரிய லாஜிக் மீறல்.

 

Read Previous

சூர்யா தயாரிக்க, கார்த்தி நடிக்க, பாண்டிராஜ் இயக்கும் படம்

Read Next

நவம்பர் 24ம் தேதி திருப்பதியில் நமீதா திருமணம்

Most Popular