என் கல்லூரி இடத்தைத் தருகிறேன் – விஜயகாந்த்

கொரானோ நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தர்வளின் உடலை அடக்கம் செய்ய அந்தந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

நேற்று சென்னையில் மரணமடைந்த ஒரு டாக்டரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அவருக்குச் சொந்தமான கல்லூரியின் ஒரு இடத்தைத் தருவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். 

இந்த உலகில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் ஒரு நாள் நிச்சயமாக இறக்கத்தான் போகிறார்கள்.

இப்படி இருக்கும்போது மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்து மக்களுக்குச் சேவை செய்த ஒரு மருத்துவருக்கு இந்த நிலை என்றால் சாதாரண மனிதனின் நிலையை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். 

கால்நடைகள் இறந்தாலே அதை மனிதாபிமானத்தோடு அடக்கம் செய்து உரிய மரியாதை செலுத்தி வரும் தமிழக மக்கள், தற்போது மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

உடலை அடக்கம் செய்வதில் எந்தத் தொற்றும் ஏற்படாது என உலக சுகாதார நிறுவனமும், தமிழக அரசும் அறிவித்துள்ளன. ஆனால், மக்கள் தவறாகப் புரிந்துகொண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட மருத்துவர்களைத் தாக்கியது கண்டனத்துக்குரியது. 

மக்கள் அனைவரும் மனிதாபிமானத்தோடு சிந்தித்து இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், உடலை அடக்கம் செய்வதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை மக்களுக்கு தமிழக அரசு புரியவைக்க வேண்டும். 

கடவுளுக்கு அடுத்தபடியாக நான் கருதுவது மருத்துவர்களைத்தான். ஆனால் மக்கள் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இந்த நிலை என்பது மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால். 

ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக் கொள்ளலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விஜயகாந்தின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Read Previous

‘ஆர்ட்டிக்கிள் 15‘ ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் ?

Read Next

பெப்ஸி அமைப்புக்கு 5 லட்சம் வழங்கிய ‘தலைவி’ கங்கனா

Most Popular