எஸ்பிபி குரல் விவகாரம் தொடர்பாக எஸ்.பி.சரணுடன் சமரசம் செய்துவிட்டதாக தருண் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தருண் பாஸ்கர் இயக்கி, நடித்திருந்த படம் ‘கீடா கோலா’. இந்தப் படத்தினை ராணா டகுபதி வழங்கியிருந்தார். 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
இந்தப் படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலமாக மறைந்த பாடகர் எஸ்பிபியின் குரலை பயன்படுத்தி இருந்தனர். இதனால் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார் எஸ்.பி.சரண். தங்களிடம் முறையான அனுமதி பெறவில்லை எனவும், நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்த விவகாரம் பேசும் பொருளாக மாறியது. பலரும் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக இதெல்லாம் பண்ண முடியுமா என்று விவாதிக்க தொடங்கினார். இதனிடையே, தற்போது இந்த விவகாரம் சமரசமாகிவிட்டது என இயக்குநர் தருண் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
”எஸ்பிபி சாரைப் பெருமைப்படுத்தவே அவருடைய குரலைப் பயன்படுத்தினோம். அவரை சிறுமைப்படுத்துவது நோக்கம் அல்ல. மேலும், அதில் வியாபாரம் நோக்கமும் அல்ல. தற்போது ஏ.ஐ தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. அவை பல மக்களுடைய பணிகளுக்கே ஆபத்தமாக கூட இருக்கிறது. முதல் எங்களுக்கு எஸ்பிபி குடும்பத்தினருக்கும் தொடர்பு பிரச்சினை இருந்தது, தற்போது அனைத்து சுமூகமாகிவிட்டது” என்று தருண் பாஸ்கர் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
இதில் சமரசம் ஏற்பட்டுவிட்டதா என்று எஸ்.பி.சரண் தரப்பிலிருந்து இன்னும் எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.