சிறு படங்களின் நிலை குறித்து ஓடிடி நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆகியவற்றை கடுமையாக சாடியுள்ளார் சமுத்திரக்கனி.
தமிழ் சினிமாவில் தற்போது ஒரு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய நாயகர்களின் படங்கள் மட்டுமே ஓடிடி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டியிட்டு வாங்குகிறார்கள். சிறு படங்களை அவர்கள் சீண்டுவதே இல்லை. இதனால் பல வரவேற்பு பெற்ற படங்கள் கூட இன்னும் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமை விற்பனையாகாமல் உள்ளது.
இந்த நிலைத் தொடர்பாக இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி பேட்டியொன்றில் பேசியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
“சிறு முதலீட்டு படங்கள் எளிதாக வெளியாவதற்கு எளிதான சூழல் இல்லை. பெரிய முதலீட்டு படங்களுக்கு மரியாதை கொடுக்கப்படுகிறது. அவை தயாரிப்பில் இருக்கும் போதே விற்பனையாகிவிடுகிறது. ஆனால், சிறு முதலீட்டு படைப்புக்கு அந்த சூழல் இல்லை.
சிறு முதலீட்டு படங்களை ஓடிடி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களிடம் விற்பதற்கு பெரும் போராட்டமாக இருக்கிறது. பிச்சை எடுப்பதைவிட மோசமாக அலைய வேண்டியதுள்ளது. பெரிய அதிகாரம் அல்லது நிறைய பணம் இருந்தால் மட்டுமே ஒரு படைப்பை தைரியமாக வெளியே கொண்டு வர முடிகிறது.
அதே போல் திரையரங்குகளிலும் என்ன படம் வெளியிடலாம் என்று யாரோ முடிவெடுக்கிறார்கள். அவர்களுக்கும் சினிமாவுக்கு சம்பந்தமே இல்லை. பல்வேறு நல்ல படைப்புகள் முடங்கிக் கிடக்கிறது. ஓடிடி தளத்தில் படங்களை விற்க யாரிடம் பேசுவது என்று கூடத் தெரியாது. ஆனால், பெரிய படங்கள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் விற்பனையாகிறது. இந்த சூழல் இருந்தால் எப்படி நல்ல படங்கள் வரும்”
இவ்வாறு சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.