இம்மார்டல் – விமர்சனம்

அழகும் கவர்ச்சியும் நிறைந்த ஒரு வீட்டிற்குள் குடியேறும் நாயகன், அங்கே மறைந்திருக்கும் மர்மத்தால் சிக்கிக்கொள்ளும் கதை. ஃபேண்டஸி, சஸ்பென்ஸ், திரில்லர் என பல அம்சங்களை ஒன்றிணைத்து வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறது ‘இம்மார்டல்’. ஆனால், படத்தின் இரண்டாம் பாதியில் அதிகரிக்கும் லாஜிக் மீறல்களும், சுவாரஸ்யம் குறையும் திரைக்கதையும் அந்த முயற்சிக்கு தடையாக அமைந்திருக்கிறது.

வாடகைக்கு வீடு தேடி அலையும் பேச்சுலரான ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. தனது வீட்டில் உள்ள இரண்டு அறைகளில் ஒன்றை வாடகைக்கு விடுவதாகவும், வீடு பிடித்திருந்தால் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறுகிறார். இதையடுத்து அந்த வீட்டிற்கு செல்லும் ஜி.வி.பிரகாஷ் குமார், வசதியான அடுக்குமாடி குடியிருப்பையும், அதன் உரிமையாளரான கயாடு லோஹரின் அழகையும் பார்த்ததும் மயங்கி விடுகிறார். வீடு பிடித்ததா, இல்லையா என்பதைவிட அதன் உரிமையாளரின் மீது ஈர்ப்பு ஏற்பட, உடனடியாக அங்கே குடியேறுகிறார்.

வீட்டில் குடியேறிய சில நாட்களிலேயே கயாடு லோஹரிடம் காதலை வெளிப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார். அவரும் அதற்கு சாதகமாக பதிலளிக்க, இருவருக்கும் இடையே நெருக்கம் உருவாகிறது. ஆனால், இந்த சந்தோஷம் நீண்ட நாட்களுக்கு நீடிப்பதில்லை.

திடீரென அந்த வீட்டிற்குள் கயாடு லோஹரின் தாத்தா என்று கூறப்படும் ஒருவர் வருகிறார். அவரது வருகைக்குப் பிறகு வீட்டில் ஏதோ அமானுஷ்யமான மற்றும் மர்மமான விஷயங்கள் நடப்பதை ஜி.வி.பிரகாஷ் குமார் உணர்கிறார். இதனால் அங்கிருந்து வெளியேற முயற்சிக்கிறார். ஆனால், சூழ்நிலைகள் அவரை வெளியேற விடாமல் தடுக்கின்றன. அதே நேரத்தில் அந்த வீட்டின் பின்னணியில் இருக்கும் பல அதிர்ச்சிகரமான உண்மைகளும் அவருக்கு தெரிய வருகின்றன. அந்த உண்மைகள் என்ன? ஜி.வி.பிரகாஷ் குமார் அந்த வீட்டிலிருந்து தப்பினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

‘இம்மார்டல்’ என்றால் அழிவற்றது என்று பொருள். இந்த வார்த்தையை மையமாக வைத்தே ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தையும், அதை சுற்றி உருவாகும் மர்மங்களையும் இயக்குநர் மாரியப்பன் சின்னா திரையில் கொண்டு வந்திருக்கிறார். வழக்கமான சஸ்பென்ஸ் திரில்லர் களத்துடன் ஃபேண்டஸி அம்சங்களையும் இணைத்து புதிய முயற்சியை மேற்கொண்டிருப்பது கவனிக்க வைக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இந்தப் படம் நடிப்பில் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பை கொடுத்திருக்கிறது. காதல் வயப்படும் தருணங்கள், ஆபத்தை உணர்ந்து பதற்றமடையும் காட்சிகள், பயத்துடன் தப்பிக்க முயற்சிக்கும் சூழ்நிலைகள் என வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியிருந்தாலும், பெரும்பாலான காட்சிகளில் ஒரே மாதிரியான முகபாவனைகளையே பயன்படுத்தியிருப்பது பலவீனமாக தெரிகிறது.

கயாடு லோஹர் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒருவர். அழகும் கவர்ச்சியும் நிறைந்த தோற்றத்துடன் முதல் பாதி முழுவதும் கவனம் ஈர்க்கும் அவர், கதையின் மர்மம் வெளிப்படும் போது நடிப்பிலும் தனது திறமையை நிரூபிக்கிறார். கதாபாத்திரத்தின் இரு வேறு முகங்களையும் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

காமெடி கதாபாத்திரங்களில் அதிகம் பார்த்த டி.எம்.கார்த்திக், இங்கு சற்று வித்தியாசமான வேடத்தில் நடித்து கவனம் பெறுகிறார். லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மஹாராஜ், பேமா சாம்சோ, சுனிதா ஷ்ரேஷ்டா உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனின் கேமரா வேலை படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக கயாடு லோஹரின் அழகையும் கவர்ச்சியையும் காட்சிப்படுத்துவதில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கிராபிக்ஸ் மற்றும் ஃபேண்டஸி காட்சிகளையும் தேவையான அளவில் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் பெரிதாக மனதில் பதியவில்லை. பின்னணி இசையாவது திரில்லர் உணர்வை அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தால், அங்கும் ஏமாற்றமே. குறிப்பாக படத்தில் வரும் விசித்திரமான உயிரினம் மற்றும் அதன் காட்சிகளுக்கான பின்னணி இசையில் ஹாலிவுட் படங்களின் தாக்கம் அதிகமாக தெரிகிறது. தனித்துவமான இசை அனுபவத்தை கொடுக்க வேண்டிய இடத்தில் அது போதுமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

படத்தொகுப்பாளர் ராஜேஷ்.எம், தேவையற்ற நீளத்தை தவிர்த்து காட்சிகளை சுருக்கமாக நகர்த்தியிருப்பதால் முதல் பாதியில் படத்தின் வேகம் நன்றாக இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் மாரியப்பன் சின்னா, வழக்கமான திரில்லர் கதைக்களத்துக்குள் ஃபேண்டஸி அம்சத்தை புகுத்தி, அதை வித்தியாசமான திரை அனுபவமாக மாற்ற முயற்சித்திருக்கிறார். இந்த முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால், கதையில் இடம்பெறும் சில நிகழ்வுகளுக்கு சரியான காரணமும், நம்பகத்தன்மையான விளக்கமும் இல்லாதது படத்தின் மிகப்பெரிய குறையாக மாறுகிறது.

வெறும் 5 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு இப்படியொரு பிரம்மாண்டமான வீடு கிடைப்பது ஏன்? அதன் உரிமையாளர் இவ்வளவு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பது மட்டுமல்லாமல், அந்த வீட்டை சுற்றி ஏன் இத்தனை மர்மங்கள் இருக்கின்றன? என்ற கேள்விகள் தொடக்கத்திலேயே ரசிகர்களுக்குள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. அந்த மர்மம் என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் முதல் பாதி சுவாரஸ்யமாக நகர்கிறது.

ஆனால், இரண்டாம் பாதியில் முக்கியமான சஸ்பென்ஸ் வெளிப்பட்ட பிறகு திரைக்கதையின் வேகம் மற்றும் சுவாரஸ்யம் இரண்டுமே குறைந்து விடுகின்றன. கதையின் பல இடங்களில் வரும் லாஜிக் மீறல்கள், ஏற்கனவே உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்பை சிதைக்கின்றன. இறுதிப்பகுதியும் வலுவான முடிவை கொடுக்காமல், எப்படியாவது கதையை முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவசரமாக முடிக்கப்பட்டது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில், வித்தியாசமான கதைக்களத்தையும் ஃபேண்டஸி-திரில்லர் கலவையையும் முயற்சித்திருக்கும் ‘இம்மார்டல்’, கயாடு லோஹரின் கவர்ச்சி, ஒளிப்பதிவு மற்றும் முதல் பாதியின் மர்மம் ஆகியவற்றால் கவனம் ஈர்க்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் தடுமாறும் திரைக்கதை, லாஜிக் ஓட்டைகள் மற்றும் தாக்கம் இல்லாத முடிவு காரணமாக முழுமையான திருப்தியை கொடுக்கத் தவறுகிறது. இயக்குநரின் முயற்சி பாராட்டுக்குரியதாக இருந்தாலும், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் ‘இம்மார்டல்’ சிறந்த ஃபேண்டஸி திரில்லராக அமைந்திருக்கும்.

Read Previous

4 இடியட்ஸ் – விமர்சனம்