தனிமையில் வாழும் ஒருவனின் வாழ்க்கைக்குள் எதிர்பாராத விதமாக வரும் ஒரு பெண், அவனது உலகையே மாற்றுகிறாள். ஆனால், அந்த உறவு காதலாக மாறிய பிறகு அவனது பழக்கவழக்கங்களே இருவருக்கும் இடையே பிரிவை ஏற்படுத்துகிறது. காதல் என்பது எப்போதும் மகிழ்ச்சியை மட்டுமே கொடுப்பதில்லை, சில நேரங்களில் ஒருவரை முழுமையாக மாற்றிய பிறகும் அவரை விட்டு விலகிச் செல்லும் என்பதை எளிமையான கதைக்களத்தின் மூலம் பதிவு செய்திருக்கிறது ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’.
சிறு வயதிலேயே தாயை இழந்துவிடும் டி.ஆண்டனி, தந்தையின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் தனிமையில் வளர்கிறார். அந்த தனிமை அவரை மெல்ல மெல்ல மதுவுக்கு அடிமையாக்குகிறது. காதல், திருமணம் போன்ற வாழ்க்கை பந்தங்களில் நம்பிக்கை இல்லாத அவர், தனிமையை போக்குவதற்காக தினமும் ஒரு பாலியல் தொழிலாளியை தனது வீட்டிற்கு வரவழைத்து, அவருடன் மனம் விட்டு பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அப்படிப்பட்ட ஒரு இரவில் அவரது வீட்டிற்கு வரும் மதுமிதா தாஸ், ஆண்டனியின் கவனத்தை ஈர்க்கிறார். அவருடன் பேசுவதும், தனது நேரத்தை அவருடன் செலவிடுவதும் ஆண்டனிக்கு பிடித்துப் போகிறது. இதனால் அடுத்தடுத்த நாட்களிலும் அவரையே வரவழைக்கிறார். ஆண்டனி தன்னிடம் காட்டும் அன்பும் அக்கறையும் மதுமிதா தாஸின் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. பணத்திற்காக தொடங்கிய உறவு, மெல்ல காதலாக மாறுகிறது.
நீண்ட காலமாக தனிமையில் இருந்த ஆண்டனியின் வாழ்க்கையில் மதுமிதாவின் வருகை புதிய உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. வாழ்க்கையின் மீது மீண்டும் நம்பிக்கை பிறக்கிறது. இருவரும் ஒன்றாக வாழத் தொடங்குகிறார்கள். ஆனால், ஆண்டனியின் மதுப்பழக்கம் அவர்களது உறவுக்குள் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறது. இறுதியில் மதுமிதா அவரை விட்டு விலகிச் செல்கிறார். மீண்டும் தனிமையில் சிக்கிக்கொள்ளும் ஆண்டனி, அவளை மீண்டும் தனது வாழ்க்கைக்குள் அழைத்து வந்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
முதல் படத்திலேயே வலுவான கதாபாத்திரங்களை ஏற்றிருக்கும் டி.ஆண்டனி மற்றும் மதுமிதா தாஸ், படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகள் இவர்களது உரையாடல்களை மையமாகக் கொண்டே நகர்கின்றன. நீண்ட உரையாடல்களைக் கொண்ட திரைக்கதையை சலிப்பில்லாமல் நகர்த்துவதற்கு இருவரது நடிப்பும் பெரிதும் உதவுகிறது.
தமிழ் பேசத் தெரியாத மதுமிதா தாஸை பெங்காலி பெண்ணாகவே கதைக்குள் கொண்டு வந்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனமான அணுகுமுறை. படத்தில் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசினாலும், இடையிடையே அவர் முயற்சி செய்து பேசும் தமிழ் வார்த்தைகள் கதாபாத்திரத்திற்கு தனித்துவத்தை கொடுக்கின்றன. அவரது இயல்பான பேச்சும், குழந்தைத்தனமான சில வெளிப்பாடுகளும் ரசிக்க வைக்கின்றன.
எப்போதும் சிகரெட்டும் மதுவுமாக இருக்கும் கதாபாத்திரமாக வரும் டி.ஆண்டனி, பெரிய அளவிலான நடிப்பு வெளிப்பாடுகளை காட்டாமல், சிறிய ரியாக்ஷன்கள் மற்றும் முகபாவனைகள் மூலமாக கதாபாத்திரத்தின் மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக தனிமை, காதல், ஏமாற்றம் போன்ற உணர்வுகளை கட்டுப்படுத்தப்பட்ட நடிப்பில் வெளிக்கொணர்ந்திருப்பது கவனிக்க வைக்கிறது.
ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நிறைவாக செய்து, பிரதான கதையின் பயணத்திற்கு துணையாக இருந்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பியேட்ரோ வில்லானியின் கேமரா வேலை படத்தின் இயல்புத்தன்மைக்கு வலு சேர்க்கிறது. செயற்கையான வெளிச்சங்களை அதிகம் பயன்படுத்தாமல் இயற்கையான ஒளியிலேயே பல காட்சிகளை படமாக்கியிருப்பது கதையின் எளிமையான தன்மையோடு நன்றாக பொருந்துகிறது. கதாபாத்திரங்களின் வாழ்க்கைக்குள் நாம் நேரடியாக பயணிப்பது போன்ற உணர்வையும் இது ஏற்படுத்துகிறது.
ஜெய்கர் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் இசையமைத்துள்ள பாடல்கள் தனித்தனி பாடல்களாக கவனம் பெறுவதைவிட, திரைக்கதையின் உணர்வுகளை வெளிப்படுத்தும் மாண்டேஜ் காட்சிகளுடன் இணைந்து செயல்பட்டிருக்கின்றன. அவை கதையின் நகர்வுக்கு தேவையான உணர்வை கொடுக்கின்றன. ஜோயி ரெடாவின் பின்னணி இசையும், வசனங்கள் சொல்லத் தவறிய பல உணர்வுகளை இசை வழியாக வெளிப்படுத்துகிறது.
கதை, திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு என பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதுடன் நாயகனாகவும் நடித்திருக்கும் டி.ஆண்டனி, மிகப்பெரிய திருப்பங்களோ அல்லது சிக்கலான கதைக்களமோ இல்லாமல் ஒரு எளிய காதல் கதையை சொல்ல முயற்சித்திருக்கிறார். காதலர்களுக்கு இடையேயான உறவு, பிரச்சனைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் ஏமாற்றங்களை இயல்பாக பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.
அதே நேரத்தில் படத்தின் நீளம் சற்று அதிகமாக இருப்பது மிகப்பெரிய குறையாக தெரிகிறது. குறிப்பாக கதையின் முக்கியமான பகுதிகள் முடிந்துவிட்டதாகத் தோன்றும் தருணங்களுக்குப் பிறகும் மீண்டும் மீண்டும் கடற்கரையைச் சுற்றி காட்சிகள் நகர்வது தேவையற்ற நீளத்தை ஏற்படுத்துகிறது. சில காட்சிகளை குறைத்திருந்தால் படத்தின் தாக்கம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
பெங்காலி பெண் என்பதால் மதுமிதா தமிழ் பேச முடியாது என்பதற்காக ஆண்டனியும் ஆங்கிலத்தில் பேசுவது கதைக்குள் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமாக இருக்கிறது. ஆனால், படம் முழுவதும் அதிக அளவில் ஆங்கில உரையாடல்கள் இடம்பெறுவதால் தமிழ் ரசிகர்களுக்கு சில இடங்களில் அந்நியமாகவும், புரிந்துகொள்வதற்கு சிரமமாகவும் இருக்கிறது. அதைவிட சப்-டைட்டிலும் ஆங்கிலத்திலேயே இருப்பது அந்த சிரமத்தை மேலும் அதிகரிக்கிறது.
நேரடி ஒலிப்பதிவு முறையில் படமாக்க வேண்டும் என்பதற்காகவே ஆள் நடமாட்டம் குறைவான இடங்களையும், குறிப்பிட்ட நேரங்களையும் தேர்வு செய்திருக்கும் இயக்குநர், கடற்கரையை வெறும் பின்னணியாக மட்டும் பயன்படுத்தாமல் கதையின் ஒரு பகுதியாக மாற்றியிருக்கிறார். காதல் மற்றும் கடற்கரை இரண்டுக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தை படம் முழுவதும் உணர்த்தியிருப்பது ரசிக்கத்தக்க அம்சம்.
பாலியல் தொழிலாளிக்கும், அவரைச் சந்திக்கும் ஒரு தனிமையான ஆணுக்கும் இடையே உருவாகும் காதல் என்ற வித்தியாசமான கருவை எடுத்துக்கொண்டு, அதை எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் இயல்பான முறையில் சொல்லியிருக்கிறார் டி.ஆண்டனி. கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் உறவின் மாற்றங்களையும் அழுத்தமாக பதிவு செய்திருப்பது படத்தின் பலம்.
மொத்தத்தில், வித்தியாசமான காதல் களத்தை எளிமையான அணுகுமுறையில் சொல்லியிருக்கும் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’, அதன் இயல்பான நடிப்பு, அழகான ஒளிப்பதிவு மற்றும் உணர்வுப்பூர்வமான கதையால் மனதைத் தொடுகிறது. ஆனால், நீண்ட திரைக்கதை, தேவையற்ற சில காட்சிகள் மற்றும் அதிகப்படியான ஆங்கில உரையாடல்கள் படத்தின் அனுபவத்தை சற்று பாதிக்கின்றன. இந்த குறைகளை கடந்து பார்த்தால், தனிமை, காதல் மற்றும் பிரிவின் வலியை உணர்வுபூர்வமாக பதிவு செய்யும் படமாக இது அமைகிறது.