விஜய் டிவியில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ புதிய தொடர்

விஜய் டிவியில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

‘மதுர, சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை’ போன்ற தொடர்களில் நடித்த செந்தில் இத் தொடரின் நாயகனாக நடிக்கிறார். அதிலும் அண்ணன், தம்பியாக இரு வேடங்களில் நடிக்கிறார். தொடரின் நாயகிகளாக ரக்ஷா, ரேஷ்மி ஆகியோர் நடிக்கிறார்கள். தாய் செல்வம் இத் தொடரை இயக்குகிறார்.

இதுவரையில் தொலைக்காட்சித் தொடர்களில் மாமியார் – மருமகள், அக்கா – தங்கை, தோழிகள் என பெண்களை மட்டுமே சுற்றி வரும் கதைகள் அதிகம் வந்திருக்கின்றன.

இத் தொடரில் அதிலிருந்து மாறுபட்டு ஒரு வித்தியாசமான கதையை உருவாக்கியிருக்கிறார்கள். அது, அண்ணன், தம்பி இரட்டையர்களைப் பற்றிய கதை.

மாயன், அரவிந்த் இருவரும் இரட்டையர்கள். அரவிந்த்தை, பிறந்த உடனேயே குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு தத்துக் கொடுக்கிறார்கள். அரவிந்த் படித்து மும்பையில் பிரபல டாக்டராக இருக்கிறான்.

அதே நேரம் மதுரைக்கு அருகில் ஒரு ஊரில் மாயன் வேலைக்கும் போகாமல் மரத்தடி பஞ்சாயத்து, வம்பு சண்டை, என்று அலப்பறை செய்து கொண்டிருக்கிறான்.

முப்பது வருடம் கழித்துதான் அரவிந்திடம் அவனது அப்பா, அம்மா அரவிந்த் ஒரு வளர்ப்பு மகன் என்ற உண்மையை சொல்கிறார்கள். அரவிந்த் அவனது உண்மையான பெற்றோரைப் பார்க்க மதுரைக்குச் செல்கிறான். அங்கு தன்னைப் போலவே இருக்கும் அண்ணனை சந்திக்கிறான். இருவரின் தோற்ற ஒற்றுமை இருவரின் வாழ்க்கையையும் எப்படி புரட்டிப் போடுகிறது என்பதுதான் இத் தொடரின் கதை.

காதல், கல்யாணம், சில கலாட்டாக்கள் கொண்ட ஒரு கலகலப்பான குடும்பக் கதை தான் இந்த ‘நாம் இருவர் நமக்கு இருவர்’.

அரவிந்த், மாயன் என அண்ணன் தம்பிகளாக இரட்டை வேடத்தில் செந்தில் நடிக்கிறார். திமிர் பிடித்த, படித்த பணக்காரப் பெண்ணாக ரக்க்ஷா நடிக்கிறார். இவர் ‘தமிழ் கடவுள் முருகன்’ தொடரில் அஜாமுகி வேடத்தில் நடித்தவர். அமைதியான வெள்ளந்தி பெண்ணாக ரேஷ்மியும் நடிக்கிறார்கள்.

வரும் மார்ச் 26ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு விஜய் டிவியில் இத் தொடர் ஆரம்பமாக உள்ளது.

Read Previous

ஸ்ரேயா திருமணம், எப்போது அறிவிப்பார் ?

Read Next

சிரஞ்சீவி படப்பிடிப்புக்குச் சென்ற நயன்தாரா

Most Popular