‘அமரன் 2’ – ஆச்சரியப்படுத்தும் கார்த்திக்

80களின் கனவு நாயகன் கார்த்திக், இத்தனை வருடங்கள் கடந்தும் அதே இளமையுடன் இருக்கிறார்.

நேற்று நடைபெற்ற ‘அமரன் 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்ன நேரத்திற்கு வந்து கார்த்திக் ஆச்சரியப்படுத்தியது ஒரு புறமிருக்க, படத்தின் புகைப்படங்களைப் பார்த்தால் இடையில் இத்தனை வருடங்களில் ஏன் நடிப்பைத் தொடராமல் விட்டுவிட்டார் என மற்றொரு ஆச்சரியமும் வருகிறது.

அதற்குக் காரணம் ‘அமரன் 2’ படத்தின் புகைப்படங்கள்…ஒவ்வொரு புகைப்படத்திலும் 1992ம் ஆண்டு வெளிவந்த ‘அமரன்’ படத்தில் இருப்பதைப் போன்றே இப்போதும் இருக்கிறார்.

கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக, வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்தி ‘அமரன் 2’வை உருவாக்கப் போகிறார்களாம்.

23 வருடங்கள் கழித்து ‘அமரன் 2’ படத்தை உருவாக்கக் காரணம் என்ன என்று இயக்குனரைக் கேட்ட போது,

“அமரன்’ படம் வெளிவந்த சில வருடங்களுக்குள்ளாகவே இரண்டாம் பாகத்தை இயக்கும் எண்ணம் இருந்தது. சில காரணங்களால அது தள்ளிப் போய்க்கிட்டே இருந்தது.

‘அமரன்’ படத்தைப் பத்தி பல பேர் என் கிட்ட பேசியிருக்காங்க. அந்தப் படம் வந்த போது நான் ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தேன், காலேஜ்ல படிச்சிட்டிருந்தேன்னு சொல்வாங்க.

‘அமரன்’ படம் ஒரு பெரிய பரப்புல அமைஞ்சது. அதுக்கான சரியான களம் இரண்டாவது பாகத்துக்குக் கிடைக்கணும். அது பற்றி யோசிச்சிட்டிருந்தப்போ ஒரு அருமையான களம் இப்ப அமைஞ்சது.

இந்தப் படம் ஒரு பொருள் பொதிந்த படம். பல விஷயங்களைச் சொல்ற படமா ‘அமரன் 2’ படம் அமையும். என்னைப் பொறுத்தவரை கார்த்திக் உலக நடிகர்களின் வரிசையில் இடம் பிடிக்கக் கூடிய அளவுக்கு இருக்கிறவருங்கறது என்னோட கருத்து,” என்றார்.

கார்த்திக் ஜோடியாக நடிக்கும் நடிகை, மற்ற நட்சத்திரத் தேர்வு நடைபெற்று வருகிறது.

Read Previous

ஜெயா டிவி – ஜுன் 8 முதல் 14 வரை – திரைப்படங்கள் விவரம்

Read Next

‘அம்மணி’ படத்தில் 82 வயது நாயகி…

Most Popular