மீண்டும் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் மும்முரமாக தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நடிகர் சங்கத்திற்காக கல்யாண மண்டபத்துடன் கூடிய புதிய கட்டிடம் டி.நகரில் கட்டப்பட்டு வந்தது. ஆனால், பணமின்றி இடையே பணிகள் தொய்வடைந்தது.
இதற்குப் பிறகு நடைபெற்ற தேர்தலிலும் நாசர் தலைமையிலான அணியே வெற்றி பெற்றாலும், பணமில்லாத காரணத்தால் கட்டிடப் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது.
தற்போது அந்த கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்காக வங்கியிலிருந்து கடன் வாங்கப்பட உள்ளது.
இந்த கடனை அடைப்பதற்கு புதிய வழி ஒன்றை யோசித்து களமிறங்கியுள்ளது நடிகர் சங்கம்.
என்னவென்றால், வங்கியில் சுமார் 10 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய உள்ளது.
இதற்காக முன்னணி நடிகர்கள் பலரும் சுமார் 1 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்துள்ளார்கள். இந்த 10 கோடி ரூபாய்க்கு வரும் வட்டியை வைத்து, நடிகர் சங்க கட்டிடத்திற்கு வாங்கப்படும் கடன் தவணை தொகை கட்டப்படும்.
சுமார் 3 ஆண்டுக்குள் இந்தத் தொகையை முடித்து, மீண்டும் பணம் அளித்த அனைவருக்கும் டெபாசிட் தொகையை எடுத்து திருப்பி அளிக்க முடிவெடுத்துள்ளது நடிகர் சங்கம்.
இப்போதைக்கு இதற்கு சூர்யா, கார்த்தி, சிம்பு உள்ளிட்ட பலர் 1 கோடி ரூபாய் அளிக்க முன்வந்துள்ளனர்.
இந்த முடிவின் மூலமாக, நடிகர் சங்க கட்டிடம் விரைவில் முடித்து திறக்கப்படும் என்பது தெளிவாகிறது.