‘தேவரா’ திரைப்படம் திட்டமிட்டப்படி ஏப்ரல் மாதம் வெளியாகாது என்பது தெளிவாகி இருக்கிறது.
ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்குப் பிறகு ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தேவரா’.
இதனை கொரட்டலா சிவா இயக்கி வருகிறார். முழுக்க கடல் சார்ந்த பின்னணியில் உருவாகி வரும் படம் இது.
இதில் ஜான்வி கபூர், சைஃப் அலி கான் என பெரிய நடிகர்கள் பலரும் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். பெரிய பொருட்செலவில் 2 பாகங்களாக வெளிவர உள்ளது.
இதில் முதல் பாகம் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்பது தெளிவாகியுள்ளது. ‘தேவரா’ படப்பிடிப்பின் போது, சைஃப் அலிகானுக்கு கையில் அடிபட்டுள்ளது.
இதற்காக அவர் ஓய்வில் இருக்கிறார். மீண்டும் அவர் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள 20 நாட்களுக்கு மேல் ஆகும் என்று தெரிகிறது.
அதுமட்டுமன்றி, தண்ணீர் சார்ந்த கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் என்பதால் திட்டமிட்டப்படி அதனையும் முடிக்க முடியவில்லை.
இந்த இரண்டு காரணத்தால் ஏப்ரல் மாதத்தில் ‘தேவரா’ வெளியாக வாய்ப்பில்லை என்பது தெளிவாகியுள்ளது.
மேலும், புதிய வெளியீட்டுத் தேதி உடன் படத்தின் தற்போதைய நிலையை அறிவிக்க முடிவு செய்துள்ளது.