அரசியல் பேசாததால் நான் பயப்படுகிறேன் என அர்த்தமில்லை என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டெவில்’. இதில் விதார்த், பூர்ணா, அருண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் இயக்குநர் மிஷ்கின்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதனை முடித்து வெளியே வந்த மிஷ்கினிடம், ராமர் கோயில் திறப்பு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு மிஷ்கின் கூறியிருப்பதாவது:
“ராமர், அல்லா, இயேசு என் மனதில் இருக்கிறார்கள். ராமர் ஒரு காவியத் தலைவர். அவர் ஒரு பெரிய அவதாரம். அரசியல் ரீதியாக எனக்கு கருத்து சொல்லத் தெரியாது. சினிமாக்காரனாக அரசியல் சார்ந்து எதையும் சொல்லக் கூடாது என முடிவெடுத்துள்ளேன்.
நான் எடுக்கும் சினிமா தான் என் அரசியல். என் கதாபாத்திரங்கள் எல்லா காலக்கட்டத்திலும் இருக்கும், மனித அவலம், மனிதர்கள் நேசிக்கதவறியது, சக உயிர்கள் மீது அன்பு செலுத்தாமை குறித்து பேச நினைக்கிறேன். சமகால அரசியல் குறித்து பேச வேண்டாம் என நினைக்கிறேன்.
நான் அரசியல் பேசும் இடம் என்னுடைய வாக்குப்பதிவு மையம் மட்டும் தான். அரசியல் பேசாததால் நான் பயப்படுகிறேன் என அர்த்தமில்லை. என்னுடைய கதைகள் மூலம் என் அரசியல் வெளிப்பட வேண்டும் என நினைக்கிறேன்”
இவ்வாறு மிஷ்கின் தெரிவித்துள்ளார்.