தணிக்கையின் மூலம் ‘தெறி’ இந்தி ரீமேக்கின் தலைப்பு என்ன என்பது வெளியாகி இருக்கிறது.
‘ஜவான்’ வெற்றிக்குப் பிறகு, இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் இயக்குநர் அட்லி.
தமிழை தொடர்ந்து இந்தியிலும் தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். முதலில் தனது ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்து வருகிறார்.
இதில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதனை ‘கீ’ படத்தினை இயக்கிய காளீஸ்வரன் இயக்கி வருகிறார். இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், அதற்கு முன்பாகவே படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஜனவரி 29-ம் தேதி இந்தப் படத்தின் டீஸரை வெளியிடவுள்ளது படக்குழு.
மே மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். இதனிடையே, டீஸர் தணிக்கையின் மூலம், படத்தின் தலைப்பு என்ன என்பது வெளியாகியுள்ளது.
’தெறி’ இந்தி ரீமேக்கிற்கு ‘பேபி ஜான்’ என்று தலைப்பிட்டுள்ளார்கள். முதலில் வெளியிடப்பட உள்ள டீஸர் 54 விநாடிகள் கொண்டதாக இருக்கும் என்பது தணிக்கைச் சான்றிதழ் மூலம் தெரியவந்துள்ளது.
‘பேபி ஜான்’ படத்தினை முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் அட்லியுடன் இணைந்து தயாரித்துவருவது குறிப்பிடத்தக்கது.