ஜெயம் ரவி கதாநாயகனாக அறிமுகமான ‘ஜெயம்’ படத்தில் வில்லனாக அறிமுகமானவர் கோபிசந்த். தெலுங்கில் உள்ள ஹீரோக்களில் இவரும் ஒருவர்.
இவர் நடித்த ‘சௌர்யம்’ படத்தின் மூலம்தான் சிவா இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன் சில தெலுங்குப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்தான் சிவா. தமிழில் ‘சார்லி சாப்ளின்’ படத்திற்கும், மலையாளத்தில் ‘ஈ நாடு இன்னலே வரே’ என்ற படத்திற்கும் ஒளிப்பதிவு செய்தவர்.
‘சௌர்யம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் கோபிசந்த் கதாநாயகனாக நடித்த ‘சங்கம்’ படத்தையும் இயக்கினார். அதன்பின்தான் தமிழில் ‘சிறுத்தை’ படத்தை இயக்கி சிறுத்தை சிவா என அறியப்பட்டார்.
சிவா தற்போது ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் வில்லனாக கோபிசந்த் நடிக்கிறார் என செய்திகள் வெளிவந்தன.
ஆனால், அவற்றை மறுத்துள்ளார் கோபிசந்த். “நானும் சிவாவும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். எனக்காக எப்போதும் ஒரு படத்தை இயக்கியத் தரத் தயாராக இருப்பதாகச் சொன்னார். ஆனால், தமிழில் அவர் தற்போது பெரிய நடிகர்கள் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அங்கு பெரிய இயக்குனராக இருக்கிறார். அதனால், என்னை வைத்து இயக்கும் அவரது எண்ணத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டேன்,“ என்று தெரிவித்திருக்கிறார்.