‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ பாடலைப் பற்றி வசந்தபாலன்

தமிழ் சினிமாவும், தமிழ் சினிமாவின் இசை உலகமும் சீக்கிரமே இழந்த ஒரு திறமைசாலி நா.முத்துக்குமார்.

குறுகிய காலத்தில் எத்தனையோ ஹிட் பாடல்களை எழுதிக் கொடுத்து இசை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர்.

அவரைப் பற்றி இயக்குனர் வசந்தபாலன், பேஸ்புக்கில் இன்று பகிர்ந்த ஒரு நினைவுப்பதிவு…

“ஒரு பொண்ண வர்ணிக்கிறப்ப பேரழகின்னு தானே சொல்லுவோம், பாதி அழகின்னு சொல்லுவோமா என்று மிஷ்கின் ஒரு வார இதழ் பேட்டியில் பகிர்ந்திருந்தார். 

சட்டென நினைவுக்கு வந்தது. அவள் அப்படியொன்றும் அழகில்லை, அவளுக்கு யாருமில்லை என்ற பாடல் வரி. 

‘அங்காடித்தெரு’ திரைப்படத்தில் காதல் மலரும் தருணத்திற்கான பாடல் தேவைப்பட்டது. ஒரு மாதமாக நானும் முத்துக்குமாரும் மாறி மாறி யோசித்தோம்.100 பல்லவிகள் எழுதி ஒரு பல்லவியை வேறு வழியின்றி தேர்ந்தெடுத்தோம். பாடல் பதிவுக்கு கூட தயாராகிவிட்டோம். என் மனம் ஏதோ ஒன்றை தேடியவாறு இருந்தது. 

பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால் சரணங்களை எழுதி என் அலுவலகத்தில் தந்து விட்டு முத்துக்குமார் சென்றிருந்தார். இரவு படப்பிடிப்பு முடித்து அலுவலகம் வந்த போது சரணங்களை படித்தேன். 

ஒரு சரணத்தின் கடைசி வரியில் அவள் அப்படியொன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்த போது மனம் உற்சாகமானது.

அற்புதமான பாடல் வரியை கண்டடைந்த மகிழ்ச்சி. உடனே முத்துக்குமாரைத் தொடர்பு கொண்டு எங்கிருக்கீங்க என்று கேட்டேன். சாலிகிராமத்தில் இருப்பதாக சொன்னார். விரைந்தேன்.

இதைப்பாடலின் முதல் வரியாக வைத்து முழுப்பாடலையும் திரும்ப எழுத சொல்லவேண்டும் ஆனால் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. 

இரண்டு மூன்று முறை பாடலின் பொருட்டு நானும் முத்துக்குமாரும் சண்டையிட்டு பிரிந்திருக்கிறோம். இந்த முறை அந்த மாதிரி நடக்கவே கூடாதுன்னு இயற்கையை வேண்டினேன். 

ஆனந்தபவனில் சில இனிப்புகளை வாங்கிக்கொண்டு முத்துக்குமாரை சந்தித்து உரையாடியபடியே இருந்தேன். 

"என்னண்ணா" என்றார் முத்து. நானும் முத்துவும் அண்ணா என்று தான் அழைத்து கொள்வோம். இந்த மாதிரி கடைசி வரி நல்லாயிருக்கு இதை வைத்து கொண்டு அழகில்லை, கலரில்லை, படிக்கவில்லை என்ற பட்டியல் பாடலாக எழுதிடலாமா என்று தயங்கி தயங்கி கேட்டேன். 

சூப்பர்ன்னா!!! பிரமாதமா பண்ணிடலாமன்னா!!? என்றார் முத்துக்குமார். அதான் முத்துக்குமார், சின்ன முக சுளிப்பின்றி ‘அவள் அப்படியொன்றும் அழகில்லை’ எழுதி தந்தார். அவரின் அதிசிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று,” என்று நா. முத்துக்குமாரின் ‘பெண்ணழகு’ பற்றிய பாடலைப் பற்றிப் பகிர்ந்துள்ளார்.

Read Previous

எம்.ஜி.ஆர், சரோஜா தேவி இணைந்த படங்கள்

Read Next

எம்.ஜி.ஆர் , எம்.எஸ்.வி இணைந்த படங்கள்

Most Popular