தொலைக்காட்சித் தொடர்களில் நம் வீட்டுப் பெண்கள் மூழ்கி விட்டதால், சினிமாக்களில் குடும்பக் கதைகளை சொன்னால் கூட யாரும் விரும்பிப் பார்ப்பதுமில்லை, திரும்பிப் பார்ப்பதுமில்லை. அப்படி உள்ள ஒரு சூழ்நிலையில் நடுத்தரக் குடும்பத்துப் பெண்களுக்குத் தேவையான ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம். இருப்பதை வைத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் இல்லாததற்கும் அடுத்தவர் பொருளுக்கும் ஆசைப்பட்டால் என்ன நடக்கும் என்பதை அழகான குடும்பத்துப் பின்னணியில் கொடுத்து கடைசியில் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்கள். செந்தில்குமார் – விஜயலட்சுமி பாசமான கணவன் மனைவி, இவர்களுக்கு அன்பான ஒரு குழந்தை வெண்நிலா. இவர்கள் குடியிருக்கும் அபார்ட்மென்ட்டில் பக்கத்து வீட்டிற்கு குடி வருகிறார் வசதி படைத்த சிருந்தா. கொஞ்ச நாட்களில் விஜயலட்சுமியும், சிருந்தாவும் நெருங்கிய தோழிகள் ஆகின்றனர். தனது முதலாளி வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக செந்தில் மனைவி விஜயலட்சுமியை அழைக்க, அவரோ தன்னிடம் நல்ல நகைகள் எதுவுமில்லை அதனால், திருமணத்திற்கு வர மாட்டேன் என்கிறார். பின்னர், தோழி சிருந்தாவின் நகைகளை இரவல் வாங்கிக் கொண்டு அணிந்து செல்கிறார். திருமணம் முடிந்து வரும் வழியில் அந்த நகைகளை திட்டமிட்டு சிலர் கொள்ளையடித்து விடுகின்றனர். அதன் பின் அந்த நகைக்கான 25 லட்ச ரூபாய் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு சிருந்தாவின் அப்பா முத்துராமன் செந்தில் குமார் – விஜயலட்சுமி ஆகியோரை மிரட்டுகிறார். விஜயலட்சுமி மீது வெறுப்பு உண்டாகும்படி மகளையும் அவர்களுக்கு எதிராகத் திருப்புகிறார். பணத்தை செந்தில் குமார் – விஜயலட்சுமி தம்பதிகள் திருப்பிக் கொடுத்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் பெண்களிடம் நன்கு பரிச்சயமான செந்தில்குமார் நாயகனாக நடித்திருக்கிறார். ஏறக்குறைய இதே மாதிரியான கதாபாத்திரத்தில்தான் தொடரிலும் நடித்திருப்பார். மனைவியிடம் பாசமழை பொழியும் கணவன் கதாபாத்திரம் என்றால் செந்திலுக்கு ‘லட்டு’ சாப்பிடுவது போல…இந்தப் படத்தில் இடைவேளைக்குப் பின் சென்டிமென்ட் நடிப்பிலும் உருகி உருகி நடித்திருக்கிறார். கிளைமாக்சில் ஏற்படும் கோபம், ஆவேசம் ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்து கணவனுக்கு வரும் நியாயமான கோபம். சரவணன் மனைவியாக நடித்திருக்கும் விஜயலட்சுமி அப்படியே நமது பக்கத்து வீடுகளில் பார்க்கும் சராசரி குடும்பத்துப் பெண்ணாகவே தெரிகிறார். அழகாக இருக்கிறார் என்று சொன்னால் பக்கத்து வீட்டில் உள்ளவரின் மனைவியை ரசிப்பது போலாகி விடும்…?. கிராமத்திலிருந்து சிட்டிக்கு வந்து செட்டிலாகும் பெண்கள் எப்படி இருப்பார்களோ அதை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறார் விஜயலட்சுமி. நன்றாகவே நடிக்கிறார், ஆனாலும் ‘சென்னை 28’ படத்திற்குப் பிறகு பெரிய வெற்றிப் படமாக அமையவில்லையே என்பதை இந்தப் படம் தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். பணக்கார வீட்டுப் பெண்ணாக நடித்திருக்கும் சிருந்தா, அந்த பெரிய கண்களிலேயே பகட்டுத்தனத்தை பக்காவாக காட்டி விடுகிறார். இவருடைய அப்பாவாக நடித்திருக்கும் ‘வழக்கு எண் 18/9’ முத்துராமன் போல பல விவகாரமான மனிதர்களை நம் ஊரில் பார்க்கலாம். ‘பிளாக் பாண்டி’ ஒரு சில காட்சிகளில் நக்கல் நடிப்பை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். செந்தில்குமாரின் அக்கா, மாமா, சித்தப்பா அனைவருமே நம் ஊர் மனிதர்களாகவே யதார்த்தமாகத் தெரிகிறார்கள். தன்ராஜ் மாணிக்கம் இசையில் பின்னணி ஓகே. பாடல்களில் ஒரு சில சூப்பர் ஹிட்களை கொடுத்திருக்கலாம். வெண்நிலா வீடு – வீட்டை விட்டு வெளியே வந்து கொஞ்சம் இந்த ‘வெண்நிலா’வைப் பார்க்கவும் போலாமே…