இப்படி கூட ஒரு படத்தை எடுக்கலாமா, எடுக்க முடியுமா என ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் திலீப். அவரே இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். ஐ.டி- வேலைகளில் இருக்கும் ஐந்து இளைஞர்கள் வார இறுதி நாளில் ஒருவரது ரூமில் அமர்ந்து குடித்து விட்டு வெட்டி நியாயம் பேசுவதுதான் படத்தின் கதை ?. கண்டிப்பாக இதுதான் கதையே இல்லாத ஒரு திரைப்படமாக இருக்கும். கதை மட்டுமா இல்லை, படத்தில் ஹீரோயின் கூட யாருமில்லை. மருந்திற்கு படத்தின் ஆரம்பத்தில் ஒரே ஒரு பெண் கதாபாத்திரம் மட்டும் ஒரு ஐந்து நிமிடம் இடம் பெற்றிருக்கிறது. ‘குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு’ என்று சொல்வார்கள். ஆனால், இப்படி குடித்து விட்டு, விடிய விடிய பேசிக் கொண்டிருப்பார்களா…படம் முழுவதுமே ‘குடி குடியைக் கெடுக்கும், புகைப் பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது’ என்று போட்டாலும் தவறில்லை. குடிக்காமலேயே இப்படி வெட்டி நியாயம் பேசுபவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். மாறுதலுக்கு ரூமிற்குள் அமர்ந்து குடிப்பதை தவிர்த்து ஒரு டீக்கடையிலோ, அல்லது வேறு இடத்திலோ நடப்பது போன்று வைத்திருக்கலாம். படம் பார்த்து முடிந்த பின் போய் ஒரு ‘குவார்ட்டராவது’ போட்டால்தான் சரியா இருக்கும், இல்லை ஒரு ‘கட்டிங்’ ஆவது கரெக்ட் பண்ணணும்னு நினைக்க வச்சிட்டீங்களே பாஸ். அந்த அளவுக்கா ‘குடி’யை குடிப்பாங்க. நம்ம வாழ்க்கையில அப்படி யாரையும் பார்த்ததில்லை…அதுதான்…அப்படி ஒரு சந்தேகம்…ம்ம்ம்.. குடித்து விட்டு ஐந்து நண்பர்கள் பேசாத விஷயமே இல்லை எனலாம், சினிமாவில் இருந்து, ஈழம், அரசியல், திராவிடம், திமுக, அதிகமுக, பெண்கள், லெக்கிங்கஸ், சேகுவேரா, ஐடி, கல்யாணம், உலக அரசியல், இரண்டாம் உலகப் போர், ஹிட்லர் என சகட்டு மேனிக்கு அனைத்தைப் பற்றியும் விவாதிக்கிறார்கள். சில விஷயங்களை அழுத்தமாகவும் பதிய வைத்திருக்கிறார்கள். ஐந்து நண்பர்களாக திலீப், தமிழ், பிரதாப், வொய்ட், ரவி ஒருவரை ஒருவர் வாரிக் கொள்வதிலும், வெறுப்பேற்றிக் கொள்வதிலும், காமிரா என்ற ஒன்று இருப்பதையே மறந்து விட்டு அவ்வளவு யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். இளைஞர்களின் புதிய முயற்சி என்று படத்தைத் தாராளமாகப் பாராட்டலாம். ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதை என்றாலும், பேசிக் கொண்டேயிருக்கிறார்கள் என்றாலும் இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. சொல்ல வந்த விஷயம் நன்றாக இருக்கிறது, ஆனால் சொல்லிய முறைதான் சரியில்லை…அங்கங்கே இரட்டை அர்த்த வசனங்கள் வேறு… சினிமா என்பது எவ்வளவு வலிமையான ஊடகம், இதன் வீச்சு எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து கொண்டு அதற்கேற்றபடி அடுத்தடுத்து ‘நல்ல’ படங்களை இந்தக் குழுவினர் தருவார்கள் என நம்புவோம்.