குறையொன்றுமில்லை – விமர்சனம்

kurai ondrum illai பத்திரிகையாளர்களுக்கான காட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே படத்தின் இயக்குனர் கார்த்திக் ரவி, குறையே இல்லாமல் யாரும் இருப்பதில்லை, இந்தப் படத்திலும் குறைகள் இருக்கின்றன, கண்டிப்பாக அடுத்தடுத்த படங்களில் அவற்றைத் திருத்திக் கொள்வோம் என பேசியதே ஆச்சரியமான ஒன்றுதான். அதற்கேற்றபடி படத்தின் டைட்டிலைப் போடும் போதே ‘குரையொன்றுமில்லை’ என்று ஒவ்வொரு எழுத்தாக வருகிறது. என்ன இது ’குறை’ என்பதையே ‘குரை’ ஆகப் போடுகிறார்களே என்று பார்த்தால் ‘குரை’ என்பதை ஒரு சிவப்பு வண்ணத்தால் ‘ர’ வை ‘ற’வாக மாற்றுகிறார்கள். தலைப்பிலேயே வித்தியாசமாக யோசித்த இயக்குனர் இதை ஒரு படமாக எண்ணாமல் ஒரு வாழ்வியலாக எண்ணியிருப்பது ஆச்சரியம்தான். விவசாயம் எப்படியெல்லாம் வளர வேண்டும், விவசாயிகள் இல்லாமல் யாரும் உயிர் வாழக் கூட முடியாது என்ற உண்மையை படமாக்க முயற்சித்திருப்பதற்கு அவருக்கு முதலில் ஒரு பாராட்டு. வெயிலிலும், மழையிலும், இரவிலும் கஷ்டப்பட்டு உணவுப் பொருட்களை உருவாக்கும் விவசாயிகள் ஒரு வேளை உணவைக் கூட நிம்மதியாக உண்ண முடியாத நிலையே தற்போது இருக்கிறது. உழைப்பதற்கு உண்டான ஊதியம் விவசாயிகளுக்கு கிடைக்காமல், அதன் பின் அது நுகர்வோரைச் சென்று சேர்வதற்குள் உழைக்காமலே பலர் அள்ளும் லாபம் கணக்கிலடங்காது. சினிமாவாகப் பார்க்க முடியாத ஒரு படம். ஒரு கிராமத்தையும், கார்ப்பரேட் அலுவலகம் ஒன்றையும் நேரிலேயே பார்த்த ஒரு அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ரவி. விவசாயிகளால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வைத்து ‘கனெக்ஷன்’ என்ற சூப்பர் மார்க்கெட்டை நடத்தி வரும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் கீதன். கிராமத்தில் இருக்கும் விவசாயிகளையும் தங்களது நிறுவனத்தில் இணைத்துக் கொண்டு அவர்களுக்கு அதற்குண்டான ஊதியத்தையும், வாழ்வாதாரத்தையும் உருவாக்கித் தர வேண்டும் என்ற யோசனையை கம்பெனிக்கு கொடுக்கிறார். ஆனால், அதற்கு அவருடைய மேலதிகாரி எதிராக இருக்கிறார். இருந்தாலும் கம்பெனி நிர்வாகியின் அனுமதியால் அதை நடைமுறைப்படுத்த தனது சொந்த ஊருக்கு புறப்படுகிறார் கீதன். அங்கு தனது நண்பர்களை தான் நினைக்கும் திட்டத்தில் இணைந்து செயல்படுத்த பயிற்சியளிக்கிறார். இதனிடையே, ஊருக்கு மருத்து முகாமுக்காக வரும் டாக்டரான ஹரிதாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் கீதன் நடத்த நினைக்கும் திட்டம் முடக்கப்படும் நிலைக்கு வர, ஹரிதாவும் கீதனை விட்டுப் பிரிகிறார். இதன் பின் வேலையிலும், காதலிலும் கீதன் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை. படத்தில் நடித்திருக்கும் யாருமே நடிகர்களாகத் தெரியவில்லை. கீதன், ஹரிதா,  மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள கிருஷ்ணா விசுவநாதன், ஹிட்லர், சத்தியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி என அனைவருமே உண்மையிலே அந்தந்த கதாபாத்திரங்களாகவே இருந்தார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது. தான் நினைப்பதை மட்டுமே செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளைஞன் கதாபாத்திரத்தில் கீதன், காதல் என்றாலே பிடிக்காமல் இருந்து பின்னர் காதலில் விழும் ஹரிதா இருவரின் நடிப்பும், நட்பாக இருந்து இவர்கள் காதலர்களாக மாறுவதும் இயல்பாக அமைக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பத்தில் மட்டும் சில பல குறைகளை வைத்துள்ளார்கள். திடீரென ஒரு குறும் படம் பார்ப்பது போலவும், டாகுமென்டரி பார்ப்பது போலவும் தோன்றுகிறது. அவற்றைத் தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருந்தாலும் நல்ல விஷயத்தைக் கருவாக எடுத்துக் கொண்டிருப்பதற்காக, இந்த ‘குறையொன்றுமில்லை’  படத்தில் சில குறைகள் இருந்தாலும் முடிவில் நிறைவைத் தந்த படமாக அமைந்திருக்கிறது. ‘குறையொன்றுமில்லை’ – நிறைவு…

Read Previous

இன்றைய ரிலீஸ் – 8 படங்கள்…

Read Next

வெண்நிலா வீடு – விமர்சனம்

Most Popular