‘எல்லாம் அவன் செயல், என் வழி தனி வழி’ படங்த்திகளுக்குப் பிறகு இயக்குனர் ஷாஷி கைலாஷ் – ஆர்கே கூட்டணியில் வந்திருக்கும் மற்றுமொரு படம்.
ஓடும் ரயிலில் விறுவிறுப்பான ஒரு ஆக்ஷன் படம் என தாராளமாக விளம்பரப்படுத்தலாம். அந்த அளவிற்குக் காட்சிகள் மிக வேகமாக நகர்கின்றன. ஒரு காட்சியின் வசனம் முடிவதற்குள் அடுத்த காட்சி வந்து விடுமோ என யோசிக்க வைக்கும் அளவிற்கு அப்படி ஒரு வேகம்.
வைகை எக்ஸ்பிரஸ் என பெயர் வைத்துவிட்டதாலோ என்னவோ அந்த அளவிற்கு படத்தில் வேகத்தைக் கூட்டியிருக்கிறார்கள்.
சென்னை எழும்பூரிலிருந்து மதுரைக்குச் செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலில் மூன்று பெண்கள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். அவர்களை தீவிரவாதியான ஆர்.கே. செல்வமணி கொன்றிருக்கலாம் என சந்தேகம் எழுதுகிறது. இந்த வழக்கின் விசாரணையை ரயில்வே தீவிரவாதத் தடுப்புப் படை அதிகாரியான ஆர்.கே-விடம் ஒப்படைக்கிறார்கள். அவரின் தீவிர விசாரணையில் அந்த மூன்று பெண்கள் எப்படி இறந்தார்கள் என்பதை அவர் கண்டுபிடிப்பதுதான் படத்தின் மீதிக் கதை.
கொஞ்சம் பேச்சு, நிறைய வேகம், கூடவே விவேகம் என ரயில்வே பாதுகாப்பு அதிகாரியாக ஆர்.கே. அவருக்கு எந்தக் கதாபாத்திரம் பொருத்தமாக இருக்குமோ அதைத் தேர்வு செய்து நடித்திருக்கிறார். உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பல திட்டங்களைத் தீட்டுகிறார். இருந்தாலும் இம்மாதிரியான விசாரணைக் கதைகளில் காட்சிகள் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தால்தான் அதற்கு முன் நடந்தவற்றுடன், நடக்கும் காட்சிகளையும், நடக்கப் போகும் காட்சிகளையும் முடிச்சுப் போட்டுப் பார்க்க முடியும். ஆனால், அவற்றிற்கெல்லாம் இடம் கொடுக்காமல் காட்சிகள் அடுத்தடுத்து மாறிக் கொண்டே இருப்பது நம்மை பின் தொடர வைப்பதில் தடுமாற வைத்துவிடுகிறது.
படத்தின் நாயகியாக நீது சந்திரா இரு வேடங்களில் நடித்திருந்தாலும், இருவரில் ஒருவர் கூட ஆர்.கே.வுக்கு ஜோடியில்லை என்பது எதிர்பாராத அதிர்ச்சி. அதே போல, நீது சந்திரா இரு வேடங்கள் என்பதும் திரைக்கதையில் உள்ள மற்றுமொரு திருப்பம்.
மற்ற நடிகர்களில் நாசர் போலீஸ் அதிகாரியாக வருகிறார். வித்தியாசமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக அவருடைய கதாபாத்திரத்தை முருகன் பக்தராக வடிவமைத்திருக்கிறார்கள்.
ஆர்.கே.வுடன் கூடவே இருக்கும் உதவியாளர் ரமேஷ் கண்ணா, தீவிரவாதியாக ஆர்.கே.செல்வமணி, நடிகையாக இனியா, அவருடைய அக்காவாக அர்ச்சனா, எழுத்தாளராக மனோபாலா, எம்.பி.யாக சுமன், போலீஸ் அதிகாரியாக ஜான் விஜய், டிடிஆராக எம்.எஸ். பாஸ்கர் என அவர்களுக்குக் கிடைக்கும் காட்சிகளில் தங்களது நடிப்பை கூடுதலாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
பிரபாகரின் வசனம் பல காட்சிகளில் கவனிக்க வைக்கிறது. படத் தொகுப்பாளர் காட்சிகளை நறுக் நறுக்கென வெட்டியிருப்பதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் வழக்கமான கமர்ஷியல் சினிமாவை, விறுவிறுப்பாகப் பார்க்கத் தயார் என நினைப்பவர்கள் இந்த வைகை எக்ஸ்பிரசில் பயணிக்கலாம்.
நடிகர்கள்:
ஆர்.கே, நீத்து சந்திரா, இனியா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், மனோ பாலா, சுமன், ரமேஷ் கண்ணா, சித்திக், ஜான் விஜய், சுஜா வருணி, கோமல் ஷர்மா, சிங்கமுத்து, அனுமோகன், அனுப் சந்திரன், அர்ச்சனா, இவர்களுடன் இயக்குனர் R.K. செல்வமணி.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
இயக்குனநர் – ஷாஜி கைலாஸ்
இசை – S S தமன்
ஒளிப்பதிவு – சஞ்சிவ் சங்கர்
வசனம் – V. பிரபாகர்
படத்தொகுப்பு – டான் மேக்ஸ்
சண்டைப் பயிற்சி – கனல் கண்ணன்
மக்கள் தொடர்பு – ஆ. ஜான்
தயாரிப்பு – மக்கள் பாசறை
வெளியான தேதி – 24 மார்ச் 2017