தமிழ் சினிமாவை சமீப காலமாக த்ரில்லர் படங்கள்தான் அதிகமாக ஆக்கிரமித்துக் கொண்டு வருகிறது. வாரா வாரம் ஒரு த்ரில்லர் படம் கண்டிப்பாக வந்து விடுகிறது. டிஜிட்டல் யுகத்தில் குறைந்த செலவில், அறிமுக அல்லது வளர்ந்து வரும் நட்சத்திரங்களை வைத்து இம்மாதிரி நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் உருவாகி வருவதாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள். ‘சரபம்‘ என்ற தலைப்பின் மூலமே வித்தியாசத்தை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர் அருண் மோகன். மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான ‘ஆடுகளம்’ நரேனுக்கு அப்பா சொல் கேளாத ஒரு மகள் சலோனி. நரேனின் கம்பெனிக்கு ஒரு புதிய திட்டத்துடன் அலுவலக வேலையாகச் செல்கிறார் நவீன் சந்திரா. ஆனால், நவீன் தந்த திட்டம் சரியாக இல்லை என அவரை அசிங்கப்படுத்தி அனுப்புகிறார் நரேன். வெறுப்பின் உச்சத்திற்கு செல்லும் நவீன், நரேனை வீடு தேடிச் சென்று எதையாவது செய்யத் துடிக்கிறார். அப்போது எதிர்பாராமல் நரேன் வீட்டை விட்டு வெளியேறும் சலோனியுடன் நட்பாகிறார். இருவரும் சேர்ந்து நரேனிடமிருந்து ஒரு கடத்தல் நாடகமாடி பணம் பறிக்க திட்டமிடுகிறார்கள், அவர்கள் நாடகம் வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யூகிக்க முடியாத திரைக்கதை படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. நவீன் சந்திரா கதாபாத்திரம் மூலம் வழக்கம் போல ஹீரோயிசம் எதையும் செய்ய முயற்சிக்காமல் வித்தியாசமாக அவரது கதாபாத்திரத்தை சராசரி இளைஞனாகவே உலவ விட்டிருக்கிறார்கள். நடிப்பைப் பொறுத்தவரை யாரும் குறை வைக்கவில்லை.
சமீபத்தில் வெளிவந்த ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தில்தான் இது போன்ற ஒரு திரைக்கதை யுக்தியைப் பார்த்தோம். படம் ஆரம்பித்து வெகு நேரம் வரை எதை நோக்கி கதை போகிறது என்றே புரியவில்லை. சலோனி இரு வேடங்கள் என்று தெரிந்ததும் பரபரப்பு தொற்றிக் கொள்வதற்குப் பதிலாக குழப்பமே வருகிறது. ‘சரபம்’ டாட்டூ கழுத்தில் இருப்பதை வைத்து யார் அக்கா, தங்கை என்பதே தெளிவாக கண்டுபிடித்து விடலாமே. மூன்றே மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றி மட்டுமே கதை நகர்கிறது. காவல் துறை விசாரணை ஆரம்பிப்பதைப் பார்த்தால் கிளைமாக்சில் ஏதோ கண்டு பிடித்து விடுவார்கள் என்று எதிர்பார்த்தால், சலோனி சொல்வதைக் கேட்டு கேஸை அப்படியே மூடி விடுகிறார்களே… சரபம் – வெற்றியை நோக்கி பறந்திருக்க வேண்டும்….