தமிழ்த் திரையுலகில் புதிது புதிதாக பல படைப்பாளிகள் வருவது தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது. அப்படி வாரா வாரம் எத்தனையோ புதியவர்கள் வந்தாலும் ஒரு சிலர் மட்டுமே முழுமையான திறமைசாலிகளாக இடம் பிடிக்கிறார்கள். அவர்களில் இந்த ‘ர’ குழுவினர் குறிப்பிட வேண்டியவர்கள். படத்தின் இயக்குனரான பிரபு யுவராஜ் யாரிடமும் உதவி இயக்குனராக பணி புரியாதவராம், நம்பவே முடியவில்லை. ஒரு பரபரப்பான த்ரில்லர் படத்தை ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்புடன் ரசிக்கும்படியாகக் கொடுத்திருக்கிறார். பொதுவாக பேய்க் கதை என்றாலே ஒரு வீட்டிற்குள் மட்டுமே அதிகமான காட்சிகள் நகரும். இந்தப் படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக முதலில் ஒரு வீடு, பிறகு இன்னொரு வீடு என இரண்டு வீட்டில் காட்சிகள் நகர்கிறது. வெறும் பேய் என்று சொல்லிவிடாமல் ‘சிவப்பு கதவு’, ஒரு அமானுஷ்ய சக்தி, சைத்தான், சைக்காலஜி என இதுவரை கேள்விப்பட்டிருக்காத சில விஷயங்களையும் சொல்லியிருக்கிறார்கள். கவனமாகப் பார்த்தால் மட்டுமே கதை புரியும். நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அஷ்ரப், அதிதி செங்கப்பாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணமாகி வீட்டுக்கு வந்த முதல் நாளே அதிதி மர்மமான முறையில் இறந்து போகிறார். அஷ்ரப் வீட்டிற்குள் பேயாக உலா வருகிறார் அதிதி. நம்ப முடியாத சில விஷயங்கள் நடக்கின்றன. அம்மாவின் வற்புறுத்தலால் வேறு வீட்டிற்கும் செல்கிறார்கள். அங்கும் அது தொடர்கதையாகிறது. சில நாட்களுக்குப் பிறகு அஷ்ரப்பின் அக்கா ரித்திகாவும் மர்மமான முறையில் இறந்து போகிறார். ஆனால் அதிதி, ரித்திகா இருவரின் மரணமும் இயற்கையான மரணம் என போஸ்ட் மார்ட்டம் சொல்கிறது. தன்னைச் சுற்றி அதிதியின் ஆவி இருக்கிறது என திடமாக நம்பும் அஷ்ரப், நண்பனின் உதவியுடன் சைன்டிஸ்ட்டான ரவி பிரகாசத்தின் உதவியை நாடுகிறார். அவருடைய ஆலோசனைப்படி ஒரு பரீட்சார்த்த முயற்சியில் இறங்குகிறார்கள். அது நடந்த பிறகு ரவி பிரகாசமும் இறந்து போகிறார். இந்த தொடர் மரணங்களுக்கெல்லாம் என்ன காரணம், பேய் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது ‘ர’ படத்தின் மீதி கதை. படத்தின் அறிமுக நாயகனான அஷ்ரப், அஜய் கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்திப் போகிறார். திருமணமான முதல் நாளிலேயே மனைவியாக வந்த காதலியைப் பறி கொடுத்து தவிப்பதிலாகட்டும், தன்னைச் சுற்றி மனைவியின் அதீதமான சக்தி ஒன்று உலவி வருகிறது என நம்புவதிலாகட்டும், அதன் பின் அந்த சக்தி என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முயல்வதிலாகட்டும், ஒவ்வொரு காட்சியிலுமே அவருடைய நடிப்பு அவ்வளவு யதார்த்தமாக அமைந்துள்ளது. கொஞ்ச நேரமே வந்தாலும் அதிதி செங்கப்பா, அப்பப்பா…என அழகால் மயங்க வைக்கிறார். அவரை அவ்வளவு சீக்கிரத்திலா சாகடிப்பீர்கள். இருந்தாலும் வழக்கமான தமிழ் சினிமா போல, அவரைப் பேயாகக் காட்டாமல் இருந்ததற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள். ஒரு கட்டத்தில் அஷ்ரப்பின் நண்பரான லாரன்ஸ் ராமுதான் வில்லனோ என யோசிக்க வைக்கிறார்கள். எந்த நேரத்திலும் நண்பனுடன் துணையாக இருக்கும் அவரும் அருமையாக நடித்திருக்கிறார். நாயகனின் அம்மா கீதா பாபு, அக்கா ரித்திகா, அக்கா மகள் பேபி யுவினா, இன்ஸ்பெக்டர் ஜே.பி. ஜெய், சைன்டிஸ்ட் ரவி பிரகாசம் ஆகியோர் கிடைத்த வாய்ப்பில் யதார்த்தமாக ஸ்கோர் செய்கிறார்கள். ஒரு த்ரில்லர் படத்திற்கு ஒளிப்பதிவும், படத் தொகுப்பும் தான் பக்கபலமாக இருக்க வேண்டும். அந்த விதத்தில் ஒளிப்பதிவாளர் ஆர்.சரவணன் இரவுக் காட்சிகளில் அமைத்திருக்கும் லைட்டிங் அற்புதமாக அமைந்துள்ளது. அற்புதமான காட்சிகளை தனது படத் தொகுப்பால் பிரமிக்க வைத்திருக்கிறார் பிரேம் பூமிநாதன். எந்த இடத்தில் காட்சிகள் வேகமாக நகர வேண்டும், எங்கு மெதுவாக நகர வேண்டும் என டெக்னிக்கலாக படத் தொகுப்பு செய்திருக்கிறார். அதிலும் ஒரு காட்சியில் மாடியிலிருந்து அஷ்ரப் கீழே இறங்கத் துடிக்க, அதே காட்சி திரும்பத் திரும்ப நடப்பது தமிழ் படத்தைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என யோசிக்க வைக்கிறது. பின்னணி இசையமைப்பில் ராஜ் ஆர்யனின் இசை கலங்கடிக்கிறது. பரபரப்பாக, விறுவிறுப்பாக, ஆங்கிலப் படம் போல நகர்ந்து கொண்டிருக்கும் படம் கிளைமாக்சில் எதற்காக அந்த மரணங்கள் எல்லாம் நிகழ்கிறது என்பது தெரிய வரும் போது மட்டும் அடடா…தமிழ்ப் பட கிளைமாக்சிற்கு வந்து விட்டார்களே என்று எண்ண வைக்கிறது. ‘ர’ என்றால் ‘அபகரித்தல், பறிமுதல்’ என்று அர்த்தமாம்…இந்த ‘ர’ படக் குழுவினர் தமிழ் ரசிகர்களின் மனதை அபகரித்து விடுவார்கள்…