‘என்னை அறிந்தால்’ டீசர் புதிய சாதனை…

yennai arindhaal teaser new recordஇன்றைய தேதியில் ரசிகர்களை எளிதில் சென்றடையும் ஊடகமாக இணையதளங்கள்தான் உள்ளது என்பதை ஒவ்வொரு படமும் நிரூபித்து வருகிறது.

எந்த படத்தின் டீசரோ அல்லது டிரைலரோ கூட முதலில் யு டீயுப் போன்ற இணையதளங்களில்தான் வெளியிடப்படுகின்றன. அவற்றை மற்ற இணையதள பத்திரிகைகள்தான் மீண்டும் பதிப்பிடவும், அவற்றைப் பற்றிய செய்தியாகவும் வெளியிடுகின்றன.

இதன் மூலம் அவை ரசிகர்களை உடனடியாக சென்றடைகின்றன. மொபைல் போன்களில் கூட அவற்றைப் பார்க்கலாம் என்பதால் படங்களுக்கும் நல்ல விளம்பரங்களும் கிடைக்கின்றன.

அந்த விதத்தில் நேற்று வெளியான ‘என்னை அறிந்தால்’ டீசருக்கு ரசிகர்களிடையே பிரமாதமான வரவேற்பு கிடைத்து வருகிறது. பொதுவாக டீசர்களை யு டியூபில் வெளியிடும் போது அவை எவ்வளவு பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது என்பதைத்தான் ஹிட்ஸ்களை வைத்து கணக்கிடுவார்கள்.

அதைத் தவிர்த்து  ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்  ஒரு புதிய சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது. ‘என்னை அறிந்தால்’ டீசருக்கு யு டியூபில் இதுவரை 46,000 லைக்குகள் கிடைத்துள்ளது.

இதுவரை வெளிவந்த தமிழ்ப் படங்களின் லைக்குகள் அனைத்தையும் ‘என்னை அறிந்தால்’ டீசர் முறியடித்து விட்டது. சமீபத்தில் மிகவும் பெரிதாகப் பேசப்பட்ட ‘ஐ, கத்தி, லிங்கா’ ஆகிய படங்களின் லைக்குகளை விட மிக அதிகமான லைக்குகளைப் பெற்று ‘என்னை அறிந்தால்’ டீசர் சாதனை படைத்திருக்கிறது.

அதிலும் ‘லிங்கா’ படத்தின் டிரைலருக்கு இதுவரை 16000 லைக்குகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. ‘கத்தி’ டிரைலருக்கு 30,000 லைக்குகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான ‘ஐ’ டீசருக்கு 41,000 லைக்குகள் கிடைத்திருக்கிறது.

அவற்றையெல்லாம் ஒரே நாளில் ‘என்னை அறிந்தால்’ டீசர் முறியடித்திருப்பது இணையதள உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Read Previous

இன்றைய ரிலீஸ் – 9 படங்கள்…

Read Next

ர – விமர்சனம்