தமிழ் சினிமாவில் வெளிவரும் காதல் படங்கள் காலத்திற்கேற்ப மாறிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், காதல் மட்டும் என்றுமே மாறாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் படத்தில் அதையும் மாற்றிவிட்டார்கள்.
காதல் என்று வந்தாலே அது கல்யாணத்தில்தான் போய் முடிய வேண்டும் என காதலிக்கும் அனைவருமே நினைப்பார்கள். ஒரு சில காதல் பிரிவிலும் முடியும். ஏதோ ஒரு பிரச்சினையால்தான் அது பிரிவில் முடியும். ஆனால், காதல், கல்யாணத்தில் முடியக் கூடாது என்பதுதான் இந்தப் படத்தின் பிரச்சினையும்.
படத்திற்கு ‘பியார், பிரச்சினை, பிரேமா, பிரிவு, காதல், கல்யாணம்’ என்று கூட பெயர் வைத்திருக்கலாம்.
அறிமுக இயக்குனர் இளன் இந்தக் காலத்தில் காதல் இப்படித்தான் இருக்கிறது, கல்யாணமும் இப்படித்தான் முடிகிறது என்று ஒரு ‘புது’ கதையை அவிழ்த்துவிட்டிருக்கிறார். அது இன்னும் நம் கலாச்சாரத்திற்குள் எட்டிப் பார்க்காத ‘லிவிங் டு கெதர்’ வாழ்க்கை முறை, அதாவது திருமணமாகமலேயே கணவன், மனைவியாக வாழ்வது.
அப்பா, அம்மா பேச்சைத் தட்ட மறுக்கும், அம்மா மீது அதிக பாசம் வைத்திருக்கும், அப்பா மீது அதிக மரியாதை வைத்திருக்கும் ஹரிஷ் கல்யாண். பணக்கார அப்பாவிற்கு ஒரே செல்ல மகள் ரைசா வில்சன். இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள். பக்கத்து அலுவலகத்தில் இருக்கும் போதே ரைசாவைப் பார்த்து காதல் கொண்ட ஹரிஷ், பக்கத்து சீட்டிலேயே ரைசா வந்ததும் அமைதியாகவா இருப்பார். அப்படி, இப்படி சமாளித்து காதலைச் சொல்லி, காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்.
வீட்டில் ஒரு பக்கம் ஹரிஷுக்குப் பெண் பார்த்துக் கொண்டிருக்க, ரைசாவைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார் ஹரிஷ். ஆனால், தனக்கான ‘டிரீம்’ வேறு எனக் கூறி திருமணத்திற்கு மறுக்கும் ரைசா, ஹரிஷை அவர் வழிக்குக் கொண்டு வந்து ‘லிவிங் டு கெதர்’ வாழ்க்கை வாழ ஆரம்பிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அது கசக்க இருவரும் பிரிகிறார்கள். ஹரிஷுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் ஆகிறது. அதன்பின் காதலர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
படத்தில் ஹரிஷும், ரைசாவும் பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக் கொண்டே இருக்கிறார்கள். பேச்சில் காதலை விட, சண்டையும், சச்சரவும்தான் அதிகம் இருக்கிறது. ஒன்று இருவரும் முத்தம் கொடுத்துக் கொள்ளும் அளவிற்கு நெருக்கமாக இருக்கிறார்கள். இல்லை பேசாமல் போகும் அளவிற்கு விலகி இருக்கிறார்கள். படத்தில் இவர்கள் இருவரது கதாபாத்திரங்கள்தான் திரையை அதிகம் ஆக்கிரமிக்கின்றன.
காதலுக்குத் துணையாக வழக்கம் போல வரும் ஒரு நண்பனும், காதலி ……………………… பையா என்று திட்டிய பின்னும் தமிழ் சினிமா நண்பன் போல தொடர்ந்து உதவுகிறார். ஹரிஷ் காதலுக்கு ஐடியா சொல்லும் டைலர் கதாபாத்திரத்தில் முனிஷ் காந்த். இவர்கள்தான் கொஞ்சமே கொஞ்சம் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். ஹரிஷின் அம்மா வழக்கமான பாவமான நடுத்தரக் குடும்பத்து அம்மா. ரைசாவின் அப்பா ஆனந்த்பாபு, மகள் ‘லிவிங் டு கெதர்’ என்றாலும் சரி என்கிறார், நல்ல வேளை கிளைமாக்சில் மட்டும் வழக்கமான தமிழ் சினிமா அப்பாவாகிவிடுகிறார்.
ஹரிஷ் கல்யாண் இதுவரை நாயகனாக நடித்த படங்களை விட இந்தப் படத்தில் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். அந்த அப்பாவி இளைஞன் கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்திப் போகிறார். ஆனால், அலுவலகத்தில் காதலிப்பதைத் தவிர வேறு வேலையே பார்க்காத ஒருவரை இப்போதுதான் பார்க்கிறோம். அவர் காதலுக்கு அவர்களது ‘பாஸ்’ கூட பிரசன்டேஷன் என்ற பெயரில் உதவுகிறாராம், டூ மச் பாஸ். இப்படி ஒரு அலுவலகத்தில் நமக்கும் வேலை கிடைக்காதா என இந்தக் கால இளைஞர்கள் ஏங்கிப் போய்விட மாட்டார்களா இயக்குனர் இளன் ?.
யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள். யுவனின் காதல் பாடல்கள் என்றாலே இதயத்துக்குள் இடியாய் இறங்கும். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் காதுக்குள்தான் அந்தப் பாடல்கள் நுழைகின்றன. இதயத்தில் நுழைவதற்குண்டான வரிகளை எழுத நா.முத்துக்குமார் உடன் இல்லையே என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. தயாரிப்பாளர், இசையமைப்பாளர் யுவனுக்கு மட்டுமல்ல, யுவனின் ரசிகர்களுக்கும் அது புரிந்திருக்கும்.
காதலுக்காக எவ்வளவோ பிரச்சினைகளைச் சந்தித்த தமிழ்ப் படங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தப் படத்தில் நமது கலாச்சாரத்தில் இல்லாத, கல்யாணம் பண்ணிக் கொள்ளாமலேயே குடும்பம் நடத்தலாம் என்ற தவறான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
ஒரு கற்பனைக் கதைதானே என்று சொன்னாலும், அந்தக் கற்பனைக்கும் ஒரு வரையறை வைத்துக் கொள்வதுதான் சரி இன்றைய இயக்குனர்களே…
வழக்கம் போல, இந்தப் படத்தைப் பார்த்து, வரவேற்று இளைஞர்கள் விவாதிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.