‘விஸ்வரூபம் 2’ படத்தில் கமல்ஹாசனின் கட்சிப் பிரச்சாரம் சரியா ?

கமல்ஹாசன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள ‘விஸ்வரூபம் 2’ படம் நேற்று தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.

தமிழ்ப் படத்தின் ஆரம்பத்தில் சென்சார் சான்றிதழ் காட்டியதும் படம் ஆரம்பிக்கும் என காத்திருந்த சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக கமல்ஹாசன் ஆரம்பித்து நடத்தி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பாடலுடன், ஒரு பிரச்சார குறும்படம் இடம் பெற்றுள்ளது.

‘விஸ்வரூபம்’ படத்தின் முதல் பாகத்தை வெளியிட அப்போது தமிழக அரசு தடை விதித்த சமயத்தில் கமல்ஹாசன் அவருடைய ரசிகர்களிடம் உரையாடிய பேச்சிலிருந்து ஆரம்பமாகும் அந்தக் குறும்படம் பின்னர் அவருடைய மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆரம்பம், கமல்ஹாசனின் அரசியல் சுற்றுப் பயணத்தில் நகர்ந்து, அடுத்து அவர் என்ன செய்வார் என்ற ரீதியில் முடிவடைகிறது.

‘விஸ்வரூபம் 2’ படத்தை கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டும் பார்க்க வரப் போவதில்லை, அவருடைய ரசிகர்கள் அல்லாத, கட்சி சார்பற்ற பலரும் பார்க்க வருவார்கள். அப்படியிருக்கையில், படம் பார்க்க வரும் ரசிகர்கள் நேரடியாகப் படத்தைப் பார்க்க முடியாமல், இந்தப் பிரச்சாரப் பாடலைப் பார்த்த பின்தான் படத்தைப் பார்க்க முடியும் என்பது அந்த ரசிகர்களை படத்துடன் ஒன்ற விடாமல் செய்யும் விஷயம் என பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்.

சினிமாவை அதிகம் நேசிக்கும் கமல்ஹாசன் வேறொரு தயாரிப்பாளர் முதலீடு செய்த படத்தில் அவருடைய கட்சிப் பாடலை இணைத்ததோடு மட்டுமல்லாமல், படம் பார்க்க வந்த ரசிகர்களையும் அதற்குண்டான மனநிலையிலிருந்து விலகச் செய்த ஒரு விஷயமாகவே அது பார்க்கப்படுகிறது.

‘மக்கள் நீதி மய்யம்’ எனப் பெயரை வைத்துவிட்டு, படத்தில் கட்சிப் பிரச்சாரத்தை சேர்த்ததன் மூலம் மக்களுக்கும் நீதியில்லாமல், தயாரிப்பாளருக்கும் நீதியில்லாமல் செய்துவிட்டாரே என சமூக வலைத்தளங்களில் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

Read Previous

விஸ்வரூபம் 2 – விமர்சனம்

Read Next

பியார் பிரேமா காதல் – விமர்சனம்