பூஜை – விமர்சனம்

Poojai - Latest Photos_00013

இயக்குனர் ஹரியிடம் இன்னும் இது போல எத்தனை கதைகள் இருக்குமோ தெரியவில்லை, ஆனாலும், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான, சென்டிமென்ட்டாகவும், கலகலப்பாகவும், காதலுடனும், ஆக்ஷனுடனும் அனைவருக்குமான படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

12 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து ஆக்ஷன் படங்களை மட்டுமே இயக்கி வரும் இயக்குனர் ஹரி, டிரெண்டுக்கு ஏற்றபடியும் அவரை மாற்றிக் கொண்டு அதற்கேற்றபடியான படங்களை இயக்கி வருகிறார்.

அவருடைய படங்களில் இருக்கும் குடும்பப் பின்னணி இந்தப் படத்திலும் முதுகெலும்பாக அமைந்துள்ளது. அதுதான் படத்தை தூக்கியும் நிறுத்துகிறது. இவ்வளவு நட்சத்திரங்களை வைத்துக் கொண்டு குறுகிய காலத்திற்குள் பரபரவென எடுத்து முடித்து படத்தையும் பரபரப்புடன் ரசிக்க வைத்திருக்கிறார்.

மார்க்கெட்டில் வட்டிக்கு பணம் விட்டுக் கொண்டிருப்பவர் விஷால். ஸ்ருதிஹாசனைப் பார்த்ததும் அவரது அழகில் மயங்கி அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்ருதியுடம் விஷால் காதலைச் சொல்லும் போது, என்னை காதலிக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது என ஸ்ருதிஹாசன் கேட்க, அத்துடன் அவரை விட்டு விலகிவிடுகிறார் விஷால். ஆனால், விஷாலின் குடும்பப் பின்னணியே வேறு. மிகப் பெரும் கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்த விஷால், ஏன் அவரது குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருக்கிறார், அதற்கான காரணம் என்ன என்பதுதான் படத்தின் சென்டிமென்ட்டான பிளாஷ்பேக்.

போலீஸ் அதிகாரியான சத்யராஜை, முகேஷ் திவாரி ஊர் பெரிய மனிதன் போர்வையில் கூலிக்கு ஆளை வைத்துக் கொல்ல முயற்சிக்க, அதைத் தடுத்து சத்யராஜைக் காப்பாற்றுகிறார் விஷால். அதையடுத்து விஷாலைத் தேடிக் கண்டுபிடித்து முகேஷ் கொல்ல முயல, அவர்களுக்கிடையே நடக்கும் அதிரடி மோதல்கள் விஷாலின் குடும்பத்தில் எப்படி எதிரொலிக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அதிரடி ஆக்ஷன் ஹீரோ கதாபாத்திரம் என்றால் விஷாலுக்கு ‘அல்வா’ சாப்பிடுவது போல…இந்தப் படத்திலும் இனிக்க இனிக்க அதிரடி வேட்டை நடத்தியிருக்கிறார். இவருக்கான சண்டைக் காட்சிகளை பறந்து பறந்து ஒளிப்பதிவாளர் பிரியன் படமாக்கியிருப்பார் போலும், சமீபத்தில் பார்த்த ஆக்ஷன் படங்களில் இந்தப் படத்தின் வேகம் குறிப்பிட வேண்டியது. அம்மா மீது அளவுக்கதிகமான பாசம் வைத்துள்ள, விஷால் அம்மாவைப் பிரிந்து தவிப்பதிலும், அதன் பின் அம்மா சொன்னார் என்பதற்காக விஸ்வரூபம் எடுத்து எதிரிகளைத் தாக்குவதும், ஆக்ஷன் படங்களுக்கே உரிய அசத்தல்.விஷாலின் அடுத்த வெற்றிப் படப் பட்டியலில் இந்த ‘பூஜை’யும் சேருகிறது.

விஷாலுக்குப் பொருத்தமான புது ஜோடியாக ஸ்ருதிஹாசன். அடடா…அழகழகாக ஆளை அசத்தும் உடைகளில் வலம் வருகிறார். பளிச்சென, பிரைட்டாக இருக்கிறார், கொஞ்சுகிறார், குலாவுகிறார்…எல்லாமே ஓகே…ஆனால், அந்தக் குரல் மட்டுமே கொஞ்சம் இடிக்கிறது…இரண்டு விக்ஸ் சாப்பிட்டு ‘டப்பிங்’ பேசினாங்கன்னா நல்லா இருக்கும்.

சத்யராஜுக்கு இடைவேளைக்குப் பிறகுதான் நடிக்க வாய்ப்பு. ஆனாலும், கிளைமாக்சுக்கு முன்னர் வந்து சரியாக படத்தை முடித்து வைக்கிறார். ‘போக்கிரி’ படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்த முகேஷ் திவாரிதான் இந்தப் படத்தின் முக்கிய வில்லன். உருட்டி, மிரட்டும் வில்லனத்தனத்திலும் ஆக்ரோஷத்தைக் காட்டியிருக்கிறார்.

சூரி, பிளாக் பாண்டி, இமான் அண்ணாச்சி…கூட்டணி காமெடியில் கலகலப்பாக சிரிக்க வைக்கிறது. அதிலும் அந்த வாழைப்பழக் காமெடி சூப்பரோ சூப்பர்…கூட, இப்படி ஆளைச் சேர்த்துக்குங்க சூரி…சூப்பரா ஒர்க் அவுட் ஆகும்…

கம்பீரமான அம்மாவாக ராதிகா, ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், சிதாரா, கௌசல்யா, ரேணுகா, பிரதாப் போத்தன் என அத்தனை நட்சத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்…

யுவன்ஷங்கர் ராஜா இசையில் ‘இப்படியே எங்க வேணா….’,  ‘தேவதை…’, ‘சோடா பாட்டில்…’ பாடல்களை, சேனல்களிலும், எப்எம்களிலும் அடிக்கடிக் கேட்கலாம்.

பூஜை – ஹரி – விஷால் கூட்டணியின் மீண்டும் ஒரு வெற்றிப் படம்…

Read Previous

கத்தி – விமர்சனம்

Read Next

விஜய் – விஷால் திடீர் சந்திப்பு…

Most Popular