‘பென்சில்’ திரைப்படம் வெளிவந்த மறுநாளே அப்படம் இணையதளத்தில் வெளியாகிவிட்டது என்று புகார் கொடுத்தார்கள் படக்குழுவினர்.
அப்படியென்றால் இந்தப் படத்தை ‘4th period mystery’ என்ற படத்திலிருந்து காப்பியடித்ததால், அந்தக் கொரியன் படத்தின் தயாரிப்பாளர்கள் யாரிடம் போய் புகார் கொடுப்பார்கள்.
இல்லையென்றால் ‘காதலும் கடந்து போகும்’ படத்தைப் போல கொரியன் பட நிறுவனத்தாரிடம் உரிமை பெற்று ‘பென்சில்’ படத்தைத் தயாரித்து வெளியிட்டார்களா என்பதை படக்குழுவினர் தெரிவித்தால் நலமாக இருக்கும்.
‘4th period mystery’ படத்தின் கதை இதுதான்.
காலை 11.40 மணிக்கு வகுப்பறைக்கு செல்லும் நாயகன் ‘யு செங் ஹோ’ அங்கே ‘ஜோ சாங் கியூன்’ கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடைப்பதைப் பார்க்கிறான். நன்றாகப் படிக்கும் யு செங்-கிற்கும், ஜோ சாங்-கிற்கும் அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம்.
காலை 11.50 மணிக்கு அந்த வகுப்பறைக்குள் டா-ஜங் வருகிறாள். அங்கு யு செங் ரத்தம் படிந்த கையுடனும், ஆடையுடனும் ஜோ சாங் அருகில் இருப்பதைப் பார்க்கிறாள். டா-ஜங் மர்ம நாவல்களைப் படிப்பவள். அவளுக்கு யு செங் கொலை செய்திருக்க மாட்டான் என்று தெரியும். இன்னும் 40 நிமிடங்களுக்குள் மற்ற மாணவர்கள் வகுப்பறைக்குள் வந்து விடுவார்கள். அதற்குள் கொலைகாரனைக் கண்டுபிடிக்க வேண்டும்.
நண்பகல் 12.05 மணிக்கு, டா-ஜங் நாவல்களைப் படித்ததை வைத்து கொலைகாரனைக் கண்டு பிடிக்க யு செங்குடன் களத்தில் இறங்குகிறாள். உடன் யு செங்கின் நண்பன் கிம் டோங் பியோங் இணைந்து கொள்ள, அவர்கள் கொலையாளியைக் கண்டுபிடித்தார்களா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இந்த கொரியன் படத்தில் யு செங் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் ‘பென்சில்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க, டா ஜங் கதாபாத்திரத்தில் ஸ்ரீதிவ்யா நடிக்க, ஜோ சாங் கதாபாத்திரத்தில் ஷாரிக் ஹாசன் நடிக்க, கிம் டோங் கதாபாத்திரத்தில் மிர்ச்சி ஷா நடிக்க படத்தை மணி நாகராஜ் இயக்கியிருக்கிறார்.
‘பென்சில்’ படத்தைப் போலவே இந்த ஒரிஜனல் கொரியன் படமும் படம் ஆரம்பித்து பல பிரச்சனைகளுக்கு இடையேதான் 2009ல் வெளிவந்தது.
‘கொரியன்’ படத்தின் காப்பி என்று தெரிந்தும் இந்த ‘பென்சில்’ படத்தை முழுவதுமாக விமர்சிப்பது முறையல்ல…