இந்திய நாட்டில் வாக்களிப்பது என்பது நேரடியாக வாக்குச் சவாடிக்குச் சென்று வாக்களிக்கும் முறையில் மட்டும்தான் இருக்கிறது என்பது இத்தனை தேர்தலில் வாக்களித்த அனைவருக்குமே தெரியும்.
கிராமத்தில் இருக்கும் படிப்பறிவில்லாத மக்களுக்குக் கூட நன்றாகத் தெரியும்.
ஆனால், தமிழ்த் திரையுலகத்தில் முக்கிய இடத்தில் உள்ள நடிகர் சூர்யாவுக்கு அது கூடத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
இத்தனைக்கும் இந்தத் தேர்தலில் அனைவரும் 100/100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வேறு வீடியோ மூலம் வெளியிட்டார்.
நாளை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தத் தேர்தலில் தன்னால் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “என் சூழ்நிலையை விளக்கி, அஞ்சல் மூலம், இணையம் மூலம் வாக்களிக்க முடியுமா என அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். சட்டப்பூர்வமான வழிகள் ஏதும் இல்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சூர்யா அவர்களே, நீங்கள் வாக்களிக்க வர முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, அதற்காக வீடியோவில் அனைவரும் வாக்களியுங்கள் என்று சொல்லிவிட்டு, இந்த நாட்டில் இல்லாத ஒரு முறையைப் பற்றி குறிப்பிட்டிருப்பது எவ்வளவு அபத்தமாக உள்ளது.