ஒரு படத்தின் இரண்டாம் பாகம் வருகிறதென்றால் முதல் பாகத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் படம் பார்க்க வருவார்கள். அவர்களது ஒப்பீடும் முதல் பாகத்துடன் கண்டிப்பாக இருக்கும்.
அப்படிப் பார்த்தால் ‘கோ 2’ படம் முதல் பாகத்துடன் ஒப்பிட முடியாத அளவிற்குதான் உள்ளது. முதல் பாகத்தில் இருந்த பிரம்மாண்டம், கதையின் வலிமை இந்த இரண்டாம் பாகத்தில் மிஸ்ஸிங்.
ஒரு இடத்திற்குள்ளேயே மொத்த படமும் அதிகமாக நகர்வதால் அது விறுவிறுப்பைக் கூட்ட மறுக்கிறது.
மாநிலத்தின் முதல்வர் பிரகாஷ்ராஜை, பாபி சிம்ஹா கடத்தி ஒரு கட்டிடத்திற்குள் அடைத்து வைக்கிறார். அவர் எதற்காக முதல்வரை கடத்தி வைத்துள்ளார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறை திணறுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் பாபி சிம்ஹா தான் ஏன் முதல்வரைக் கடத்தினேன் என்பதைச் சொல்கிறார். அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.
பாசி சிம்ஹா, தனி கதாநாயகனாக ஒரு முழுபடத்தையும் தாங்கும் அளவிற்கு இன்னும் தயார் ஆகவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. அதிலும் இந்தப் படத்தில் அவருடைய பேச்சில் தெலுங்கு வாடை நிறையவே அடிக்கிறது. கதாநாயகனாக நடிப்பதை விட, வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதும்தான் பாபிக்கு சிறந்ததாக அமையும் போலிருக்கிறது.
நிக்கி கல்ரானி, தொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கிறார். தடுப்பிற்கு அந்த பிறகு நின்று கொண்டு அமைச்சரை இரண்டு கேள்வி கேட்டதோடு அவருடைய வேலை முடிந்து விடுகிறது.
பாலசரவணன் நாயகனின் நண்பனாக வருகிறார். நல்லவேளையாக காமெடி என்ற பெயரில் நம்மைக் கொடுமைப்படுத்தாமல் விட்டதற்கு பாலாவிற்கு நன்றி.
படத்தில் நடிப்பில் நம்மை மிரள வைத்திருப்பவர் கருணாகரன் மட்டுமே. அந்த அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் அவருடைய உடல் மொழியும், நடிப்பும், பேச்சும், கடைசியில் அவருக்கு ஏற்படும் முடிவும் கண்ணீரை வரவைக்கின்றன.
ஜான் விஜய் வழக்கம் போல நடித்துத் தள்ளுகிறார். இளவரசுவை கொஞ்சமான வில்லனத்தனத்துடன் பார்ப்பது வித்தியாசமே.
இரண்டாவது பாதியில் சில ‘அந்நியத்தனமான’ வசனங்கள் இடம் பெற்றிருந்தாலும், மக்களின் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் காட்சிகள் ‘அட‘ போட வைக்கின்றன. அந்த ‘அட’ போட வைக்கும் காட்சிகளை ஆரம்பத்திலிருந்தே வைத்திருந்தால் ‘அடடா’ என்று சொல்ல வைத்திருக்கும்.
லியோன் ஜேம்ஸ்-ன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. தமிழுக்கு ஒரு நல்ல அறிமுகம். முன்னணியில் வந்து மற்றவர்களுக்கும் போட்டியாக அமையலாம்.
‘கொடி’ கட்டிப் பறக்க வேண்டிய காட்சிகளை இன்னும் அதிகமாக வைத்திருந்தால், இந்த ‘கோ’வை கோலாகலமாகக் கொண்டாடியிருக்கலாம்.