தமிழ் சினிமாவில் மக்களின் பிரச்சனைகளைப் பற்றிப் படம் எடுக்கும் இயக்குனர் ஒரு சிலர் மட்டுமே இப்போது இருக்கிறார்கள். அவர்களில் சுசீந்திரனும் ஒருவர்.
‘ஜீவா, மாவீரன் கிட்டு’ என கடைசியாக அவர் எடுத்த சில படங்கள் சராசரி மக்களின் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் படங்களாக இருந்தன. இந்த ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படமும் நடுத்தரக் குடும்பத்துப் பிரச்சனை ஒன்றை மிகவும் யதார்த்தமாக அலசியிருக்கிறது.
சந்தீப், அவருடைய அம்மா துளசி, தங்கை ஷாதிகா என அப்பா இல்லை என்றாலும் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய நெருங்கிய நண்பர் விக்ராந்த். ஆனால், விக்ராந்தைக் கண்டாலே சந்தீப் அம்மாவிற்குப் பிடிக்காது. டாக்டருக்குப் படித்து முடித்த சந்தீப்பின் தங்கை ஷாதிகா, விக்ராந்தைக் காதலிக்கிறார். சந்தீப்புக்குக் கூட இந்த காதல் விஷயம் தெரியாது. ஒரு சந்தர்ப்பத்தில் இந்தக் காதல் சந்தீப்புக்கும், அவரது அம்மாவுக்கும் தெரிய வருகிறது. அதே சமயத்தில் விக்ராந்தை யாரோ கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் குணம் கொண்டவரான விக்ராந்த்தைக் காப்பாற்ற சந்தீப் களத்தில் இறங்குகிறார். எதற்காக அவரைக் கொல்ல முயற்சித்தார்கள் என்பதையும் கண்டுபிடிக்கிறார். அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
பணமும், அதிகாரத்தையும் கையில் வைத்திருப்பவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள், எப்படியெல்லாம் அடுத்தவருக்கு துன்பத்தைக் கொடுப்பார்கள் என்பதைப் புரிய வைத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.
‘மாநகரம்’ படத்திற்குப் பிறகு சந்தீப் நடித்திருக்கும் படம். அவருடைய தோற்றமே நடுத்தரக் குடும்பத்து இளைஞர் கதாபாத்திரத்திற்கு பாதி வெற்றியைத் தேடிக் கொடுத்துவிடுகிறது. மீதியை அவர் நடிப்பின் மூலம் கொடுத்திருக்கிறார். ஒரு பக்கம் அம்மா, மறுபக்கம் நண்பன் என இரண்டிற்கும் நடுவில் அவர் பதட்டப்படாமல் எடுக்கும் முடிவுகள் ரசிக்க வைக்கின்றன.
இரண்டாவது நாயகனாக விக்ராந்த், இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் விக்ராந்திற்கு ‘டெய்லர் மேட்’ ஆக அமைந்து விடுகின்றன. சந்தீப்பின் காதலியாக மெஹ்ரின், பாடல்களுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார். விக்ராந்தின் ஜோடியாக ஷாதிகா, தமிழ் சினிமாவுக்கு நன்றாக நடிக்கத் தெரிந்த ஒரு தங்கை ரெடி. படத்தில் சூரியும் இருக்கிறார், நகைச்சுவை இல்லாத குணச்சித்திர கதாபாத்திரம்.
இமான் இசையில் ‘இரயில் ஆராரோ..’ பாடல் இனிமை. மற்ற பாடல்களிலும் இமான் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ஒரு அற்புதமான தலைப்பு. ஆனால், முழுமையான ஆக்ஷன் படமாக இல்லாமல், குடும்பம், தங்கையின் காதல், நட்பு, படிப்பு என பல விஷயங்களைச் சேர்த்துவிட்டார்கள். எதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்பதில் அப்படி, இப்படி என படம் கொஞ்சம் அலை பாய்கிறது.
மருத்துவப் படிப்பு ஊழலை மட்டுமே நெஞ்சுக்கு நேராக குத்தீட்டியாக வைத்து குத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.