தமிழ்த் திரையுலகத்தில் தங்களை பெரிய ஹீரோக்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் கூட இப்படி ஒரு படத்தை எடுக்கத் துணிவார்களா என்பது சந்தேகம்தான். அப்படி ஒரு துணிச்சலான படத்தைத் தேர்வு செய்து தான் மற்ற ஹீரோயின்கள் போல இல்லை என நிரூபித்திருக்கும் நயன்தாராவுக்கு முதலில் வாழ்த்துகள்.
நடித்தோம், சம்பாதித்தோம் என்று இல்லாமல் எந்த மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என சரியாக முடிவெடுத்து ஒரு திறமையான இயக்குனரின் முதுகில் ‘கத்தி’யால் குத்தாமல் கை கொடுத்து தூக்கிவிட்டிருக்கும் நயன்தாராவின் குணம் வேறு எந்த ஒரு நடிகருக்காவது வருமா என்பது சந்தேகம்தான்.
இந்த ஆண்டில் இதுவரை வந்த படங்களில் மிகச் சிறந்த படம் என ‘அறம்’ படத்தைத் தாராளமாகச் சொல்லலாம். தனது முதல் படத்தையே ஒரு துணிச்சலான படமாகக் கொடுத்த இயக்குனர் கோபி நயினார் தமிழ் சினிமா இயக்குனர்களில் ஒரு சிறந்த இடத்தைப் பிடிப்பார் என்பது உறுதி.
பொதுவாக படம் பார்த்துவிட்டு வந்த பின் அன்று இரவோ, மறுநாள் காலையோதான் விமர்சனம் எழுதத் தோன்றும். ஆனால், இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்ததுமே விமர்சனம் எழுதத் தோன்றுகிறது. இப்படிப்பட்ட நல்ல படங்களை மக்களும் பார்த்து ஆதரவு தர வேண்டுமே என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் காட்டூர் என்ற கிராமத்தில் கூலித் தொழிலாளியாக இருப்பவர் ராம்ஸ். மனைவி சுனுலட்சுமி, மகன், மகள் என சிறிய ஏழ்மையான குடும்பம். ஒரு நாள் ராம்ஸின் மகள் மூடப்படாத ஆழ்துளைக் குழாய் குழியில் விழுந்துவிடுகிறாள். அந்தக் குழநதையைக் காப்பாற்ற கலெக்டரான நயன்தாரா நடவடிக்கையில் இறங்குகிறார். அவர் தலைமையில் ஒரு குழு செயல்படுகிறது. ஆழ்துளைக் குழாய் இருக்கும் இடம் கவுன்சிலருக்குச் சொந்தமானது என்பதால் அரசியல் மற்றும் அரசின் தலையீடு வேறு. இருந்தாலும் நேர்மையான கலெக்டரான நயன்தாரா அதையெல்லாம் தள்ளிவிட்டு குழந்தையைக் காப்பாற்ற முடிவெடுக்கிறார். அதற்கு பல தடைகள் வருகின்றன. அதையெல்லாம் மீறி அந்த பெண் குழந்தையை அவர் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் 24 மணி நேரத்திற்குள் நடக்கும் பரபரப்பான கதை.
தமிழ் சினிமா இனி ஹீரோக்களை மட்டுமே நம்பி இல்லை, நல்ல படங்களைக் கொடுக்க இங்கு நயன்தாரா மாதிரியான சினிமாவை அதிகம் நேசிக்கும் நடிகைகளும் இருக்கிறார்கள் எனப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறோமோ அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவதில் வல்லவர் நயன்தாரா. படத்தில் அவரது கலெக்டர் கதாபாத்திரத்தின் பெயர் மதிவதனி. இதிலேயே ஒரு குறியீடு இருக்கிறது. சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருந்தால் இந்த ஆண்டு தேசிய விருதுப் பட்டியலில் நயன்தாராவைத் தவிர வேறு யாரும் போட்டியிட்டிருக்க வேண்டாம்.
இதுவரை பல படங்களில் முரட்டுத்தனமான அடியாளாகப் பார்த்த ராம்ஸ், இந்தப் படத்தில் ஒரு ஏழை அப்பாவாக அப்படியே வாழ்ந்திருக்கிறார். அவரது மனைவியாக சுனுலட்சுமி. கிராமத்துக் கணவன், மனைவியை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள். இவர்களின் மகனாக ‘சின்ன காக்கா முட்டை’ ரமேஷ். எம்எல்ஏவாக வேல ராமமூர்த்தி, அரசாங்க ஆதரவு அதிகாரியாக கிட்டி, ராம்ஸ் நண்பனாக பழனி பட்டாளம், அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஜிப்ரான் இசையமைப்பில் கதைக்குத் தேவையான பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன. அந்த பொட்டல் வெளியை கிராமத்து வறட்சியை அப்படியே படம் பிடித்திருக்கிறார் ஓம் பிரகாஷ். அதிலும், ஆழ்துளைக் குழாய் துளைக்குள் கேமரா செல்லும் போது நாமும் அப்படியே உள்ளே செல்வது போல ஒரு உணர்வு.
நாட்டின் நிலைமையை பல இடங்களில் தன் வசனங்கள் மூலம் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கோபி நயினார். நீண்ட நாளைக்குப் பிறகு பத்திரிகையாளர் காட்சியில் பல இடங்களில் கைத்தட்டல் பெற்ற படம் இதுவாகத்தான் இருக்கும்.
100 கோடி வசூல், 200 கோடி வசூல் என்று மார்தட்டிக் கொள்ளும் ஹீரோக்களே, தயவு செய்து உங்கள் திரையுலக வாழ்க்கையில் இப்படி ஒரு படத்தில் நடித்துவிடுங்கள். இல்லையென்றால் திரையுலக வரலாற்றில் உங்களுக்கென ஒரு தனி இடம் கிடைக்கவே கிடைக்காது.