நம்பவே முடியாத கதைகளைக் கூட நம்ப வைக்க வைக்கும் அளவிற்கு சரியாகச் சொன்னால் அதை ரசிகர்கள் நம்பிக்கையுடன் ரசித்து விடுவார்கள். அதில் கொஞ்சம் ‘மிஸ்’ ஆனாலும் அவ்வளவுதான். ‘குலேபகாவலி’ படத்தை அப்படி ஒரு படமாகத்தான் கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார்கள்.
அறிமுக இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள ‘குலேபகாபலி’ படம் ஒரு பேன்டஸி, காமெடித் திரைப்படம்.
கதைக்காக எல்லாம் பெரிதும் சிரமப்படாமல், ரசிகர்களைச் சிரிக்க மட்டும் வைப்போம் என்று முடிவெடுத்து அதைக் கொஞ்சமாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.
வெள்ளைக்காரன் காலத்தில், அவனிடமிருந்து திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட வைரங்களை, ‘குலேபகாவலி’ என்ற ஊரில் உள்ள கோயிலுக்கு அருகில் புதைத்து வைக்கிறார் ஒருவர். அவருடைய வாரிசுக்கு அது பற்றித் தெரியவர, அதைக் கண்டு பிடித்து எடுத்து வரும் வேலையை சிலைகளைத் திருடி விற்கும் பிரபுதேவாவிடம் ஒப்படைக்கிறார்கள். அந்த வைரப் புதையலை பிரபுதேவா எடுத்து வந்தாரா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
காதில் பூ சுற்றும் பல கதைகளைப் பார்த்த தமிழ் சினிமாவில் மீண்டும் இப்படி ஒரு கதையைக் கொண்ட படம். ஆனால், பிரபுதேவா, ரேவதி ஆகியோரது துடிப்பான நடிப்பால் அப்படி, இப்படி இருந்தாலும் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.
நகைச்சுவைக் கூட்டணிக்கு மட்டும் இன்னும் சிறப்பான நடிகர்களைத் தேர்வு செய்திருந்தால் இந்த ‘குலேபகாவலி’ படம் குடும்பத்தினர் அனைவரையும் கவர்ந்திருக்கும்.
என்ன பேசினாலும் சிரிப்பு வராத முனிஷ்காந்த், நடிக்கவே வாய்ப்பில்லாத மிகவும் இளைத்துப் போயிருக்கும் ஹன்சிகா ஆகியோர் படத்தில் பொருத்தமே இல்லாமல் வந்து போகிறார்கள்.
பிரபுதேவா அந்தக் காலத்திலேயே காமெடியில் ஒரு கலக்கு கலக்கியவர், இன்னும் அந்தக் கலக்கலான நடிப்பு அவரிடமிருக்கிறது. கூடவே, இன்றைய இளம் ரசிகர்களும் வியக்கும் நடனத் திறமை. சரியான கதைகளைத் தேர்வு செய்து நடித்தால் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகியோருக்கும் பிரபுதேவா சவால் விடலாம்.
70களில் பிறந்தவர்களுக்கு பிடித்த நாயகிகளில் ஒருவரான ரேவதி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் முழுவதும் வரும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இதற்கு முன் இப்படி ஒரு கதாபாத்திரத்தைப் பார்த்திருப்போமா என்பது சந்தேகம்தான். ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரு காட்சி விடாமல் தன் நடிப்பால் அசத்துகிறார் ரேவதி.
விவேக் மெர்வின் இசையில் பிரபுதேவா தனியாக நடனமாடும் அந்த முதல் பாடம் ஒன்றுமே புரியவில்லை. ஆனால், சேனல்களில் அடிக்கடி ஒளிபரப்பானால் பாடல் சூப்பர் ஹிட் வரிசையில் சேரும்.
வில்லன்கள், மதுசூதரனராவ், ஆனந்தராஜ் ஆகியோருக்குப் பெரிய வேலை இல்லை. மன்சூர் அலிகான், யோகி பாபு கூட்டணி பிரபுதேவாவை விட்டுப் பிரிந்ததும் சொத்தை ஆகிவிடுகிறார்கள். மொட்டை ராஜேந்திரன், சத்யன் கிடைத்த கேப்பில் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள்.
படத்தில் ஒரு கதாபாத்திரம் கூட நல்லவர் கிடையாது, ஒன்று திருடர்களாக இருக்கிறார்கள் அல்லது ஏமாற்றுபவர்களாக இருக்கிறார்கள்.
படத்தில் ஒருவரை மற்றவர் அடிக்கடி துரத்திக் கொண்டேயிருக்கிறார்கள். ஒன்று காரில் துரத்துகிறார்கள், இல்லை என்றால் பில்டிங்கில் துரத்துகிறார்கள். துரத்தலைக் குறைத்து, நகைச்சுவையை இன்னும் அதிகம் சேர்த்திருந்தால் ‘குலேபகாவலி‘, குலே‘பக்கா’வலி ஆக இருந்திருக்கும்.