வட சென்னையை மையப்படுத்திய மீண்டும் ஒரு ரவுடிக் கதை. அதே சமயம் அதிக அதிரடி, ஆக்ஷன், கத்தி, ரத்தம் இல்லாமல் யதார்த்தமான ஒரு படமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விஜய் சந்தர்.
ஹரீஷ் பெரடி-யிடமிருந்து, கடனுக்குப் பணம் வாங்கி, கார்கள், பைக்குகள் ஆகியவற்றிற்கு தவணைப் பணம் கட்டாதவர்களிடமிருந்து அந்த வண்டிகளை எடுத்து வரும் வேலை பார்க்கிறார் விக்ரம். அவருக்கு உதவியாக நண்பர்கள் விஷ்வந்த், ஸ்ரீமன், வினோத். ஹரீஷ் பெரடியின் அப்பா அந்தப் பகுதி தாதாவான பாபுராஜாவிடம் அவர்களது கார் ஒன்றைப் பறி கொடுத்தவர். ஒரு சந்தர்ப்பத்தில் விக்ரமிடம் அதைப் பற்றி ஹரீஷ் சொல்ல, விக்ரம், அந்தக் காரைத் தூக்கி வருவதாகச் சொல்கிறார். சொன்னபடியே ‘ஸ்கெட்ச்’ போட்டு நண்பர்கள் உதவியுடன் அந்தக் காரைத் தூக்குகிறார். இதனால், ஆத்திரமடையும் பாபுராஜா, விக்ரமையும், அவரது நண்பர்களையும் கொல்லத் திட்டம் தீட்டுகிறார். விக்ரம், அவரையும் அவரது நண்பர்களையும் பாபுராஜாவிடம் இருந்து காப்பாற்றுகிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
எந்தக் கதாபாத்திரத்திலும் தன்னுடைய நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பவர் விக்ரம். இந்தப் படத்திலும் அப்படியே. அந்த விரலை வைத்து பேசும் பன்ச் வசனங்களைத் தவிர மற்ற காட்சிகள் அனைத்திலும் அவரது நடிப்பு, நடிப்பில்லாத நடிப்பு. போகிற போக்கில் சர்வசாதாரணமாக நடித்துவிட்டுச் செல்கிறார்.
விக்ரமைக் காதலிக்கும் படித்த பெண்ணாக தமன்னா. துளி கூட கிளாமர் காட்டாத தமன்னாவைப் பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது. புடவையில் அவ்வளவு பாந்தமாக இருக்கிறார். ஏறக்குறைய ரவுடி போல சுற்றி வரும் விக்ரமைக் காதலிப்பது நம்ப முடியவில்லை என்றாலும் காதலுக்காக பெற்றோரையே எதிர்த்து முடிவெடுக்கிறார்.
விக்ரமின் நண்பர்களாக விஷ்வந்த், ஸ்ரீமன், வினோத் அவரவர் கதாபாத்திரங்களில் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். இந்தக் கூட்டணியில் வினோத் மட்டும் அடிக்கடி சிரிக்க வைக்கிறார்.
படத்தில் பவர்புல் வில்லன் என யாரும் இல்லாதது ஒரு குறை. பாபுராஜாவைப் பார்த்தால் பயமெல்லாம் வரவில்லை. ஆர்.கே. சுரேஷ் மட்டும் அடியாளாக வந்து கொஞ்சம் மிரட்டுகிறார். விக்ரமின் மாமாவாக அருள்தாஸ், விக்ரமின் அப்பாவாக வேலராமமூர்த்தி, பாபுராஜாவின் எம்எல்ஏ நண்பராக தேனப்பன் மற்ற கதாபாத்திரங்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள். சூரி ஆரம்பத்தில் வருகிறார், அத்துடன் கடைசியில் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார்.
தமனின் இசையில் பாடல்கள் ஹிட்டாகியிருந்தால் அது படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கும். சுகுமார் ஒளிப்பதிவும், ரூபன் படத் தொகுப்பும் படத்திற்கு பக்கபலம். கார் ஷெட் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கலை இயக்குனர் மாயா பாண்டியன் ரசனை வெளிப்பட்டிருக்கிறது.
அடிதடி படமாக மட்டுமே காட்டிவிடக் கூடாது என்பதற்காக கடைசியில் ஒரு கருத்துடன் முடித்துள்ளார்கள். அதிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது.