தெருக்கூத்தில் இருந்து நாடகம், நாடகத்தில் இருந்து திரைப்படம், திரைப்படத்திலிருந்து டிவி தொடர்கள். பல முன்னணி திரைப்பட இயக்குனர்கள்தான் குடும்பப் பாங்கான தொடர்களை இயக்கி டிவி தொடர்களுக்கும் ஒரு பெயரை வாங்கிக் கொடுத்தார்கள்.
குடும்பங்கள், உறவுகள் ஆகியவற்றுடன் ஒரு திரைப்படம் வந்தாலே அதை டிவி தொடர்கள் என்று ஏளனம் செய்ய தற்போது புதிய கூட்டம் ஒன்று கிளம்பியிருக்கிறது.
ஒவ்வொருவருக்குப் பின்னும் ஒரு குடும்பம் இருக்கிறது. தமிழ் சினிமாவில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படங்கள் வருவது குறைந்துவிட்டது என்று கூறுபவர்களே ஒரு குடும்பப் பாங்கான படம் வந்துவிட்டால், அதை உடனே டிவி தொடர் என விமர்சிப்பது மட்டரகமானது.
இவர்கள் ‘இருட்டு முறையில் முரட்டு குத்து’ மாதிரியான படங்களை வரவேற்கும் ரசிகர்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இயக்குனர் பாண்டிராஜ், விவசாயம், கூட்டுக்குடும்பத்தின் பாசம், மோதல், காதல் என இன்றைய தலைமுறை அதிகம் உணர்ந்திருக்காத ஒரு களத்தை, குடும்பத்தை நம் கண்முன் யதார்த்தமாய் காட்டியிருக்கிறார்.
சில திரைப்படங்களில் வரும் வழக்கமான காட்சிகள், கதாபாத்திரங்கள் ஆகியவை மட்டும்தான் இந்தப் படத்தில் எதிர்மறையாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு சில விஷயங்கள். ஆனால், அவற்றையும் மீறி பல சிறப்பான காட்சிகள், உணர்வுபூர்வமான காட்சிகள், விவசாயத்தின் பெருமை, விவசாயியின் பெருமை, அப்பா, அக்கா, அக்கா மகள் உறவுகளின் பாசம், சாதிப் பிரிவு வேண்டாம் என்பது என பார்த்துப் பார்த்துப் பாராட்ட வேண்டிய பல காட்சிகளை படத்தில் வைத்திருக்கிறார்.
கடைக்குட்டி சிங்கம் குணசிங்கம் ஆக குணச்சித்திர கதாநாயகனாக கார்த்தி கலக்கலாய் நடித்திருக்கிறார். இம்மாதிரியான படங்களிலும், கதாபாத்திரங்களிலும்தான் ஒரு நடிகரின் திறமை முழுமையாக வெளிப்படும். அந்த விதத்தில் ஒரு காட்சியில் கூட எந்தவித குறையும் இல்லாமல் இயல்பாய் நடித்திருக்கிறார் கார்த்தி.
ஒரு பாசமான அப்பா, ஐந்து மகள்களையும், ஒரு மகனையும், பேரன், பேத்திகளையும் பெற்றவர், இரண்டு தாரங்களுக்குக் கணவர் என சத்யராஜ் வேறொரு பரிமாணத்தில் தனி முத்திரை பதிக்கிறார்.
நாயகிகளிக சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா. அழகுக்கும் ரசனைக்கும் சாயிஷா, நடிப்பிற்கு மற்ற இருவர் என ஏரியாவை பிரித்துவிட்டிருக்கிறார் இயக்குனர். மூவருமே அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு. சாயிஷாவுக்கு மட்டும் கார்த்தியுடன் டூயட் வைத்து, மற்றவர்களுக்கு இயக்குனர் வைக்காமல் விட்டுவிட்டார். கனவில் கூட அவர்களுக்கு டூயட் இல்லை. அதற்கான காரணம் படத்தின் கிளைமாக்சில் புரியும்.
மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள….என கூறினால் ஒரு பெரிய பட்டியலே போட வேண்டும். அவர்களில் சூரி நகைச்சுவையுடன், குணச்சித்திர நடிப்பிலும் பிரமாதப்படுத்தி இருக்கிறார். சரவணன் சில காட்சிகளில் வந்தாலும் ஒவ்வொரு காட்சியிலும் கைதட்டல் பெறுகிறார். இளவரசு, மாரிமுத்து, ஸ்ரீமன், விஜி சந்திரசேகர், பானுப்ரியா, மௌனிகா, தீபா, யுவராணி, இந்துமதி மணிகண்டன், ஜீவிதா கிருஷ்ணன், ஜான் விஜய், பொன்வண்ணன் என ஒவ்வொருவரும் அவர்களுக்காகக் கிடைத்த காட்சிகளில் அவர்களுடைய இருப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வில்லனாக சந்துரு, வழக்கமான தமிழ் சினிமா வில்லன்.
இமான் இசையில், ‘தண்டோரா…., சண்டக்காரி’ பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். வேல்ராஜ் ஒளிப்பதிவில் கிராமமும், சத்யராஜ் வீடும் மனதில் அப்படியே பதிகின்றன. திலீட் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் அதிரடி. காட்டுக்கள் நடக்கும் சண்டையும், கிளைமாக்ஸ் சண்டையும் அசத்தல்.
இடைவேளைக்குப் பின்னர் மட்டும் திரைக்கதையில் கொஞ்சம் தடுமாற்றம், ஆனால், அதை அழுத்தமான, உணர்வுபூர்வமான கிளைமாக்ஸ் சரி செய்துவிடுகிறது.
கடைக்குட்டி சிங்கம் – சிங்க நடை…