தமிழ்த் திரைப்படங்களை தாறுமாறாக விமர்சித்து ஏற்கெனவே பல வீடியோக்கள் யு டியூபில் நிறைந்து வருகின்றன. அதிலும், சில வீடியோ மீம்ஸ் விமர்சனங்களைப் பார்த்தால் பதற வைக்கிறது.
ஒரு காலத்தில் டிவிக்களில் வந்த ஒரு சில விமர்சனத்திற்கே பல பிரச்சினைகளை எழுப்பியவர்கள், இன்று இப்படிப்பட்ட யு டியூப் வீடியோக்களுக்கு எந்தவிதமான பிரச்சினைகளையும் எழுப்ப முடியாத ஒரு நிலையில் இருக்கிறார்கள்.
வீடியோ விமர்சனங்களுக்கே அப்படியென்றால், தமிழ் சினிமாவில் வந்த பல படங்களை விமர்சித்து, கிண்டலடித்து எடுக்கப்பட்டுள்ள ‘தமிழ்ப் படம் 2’ படத்திற்கு பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பாமல் நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு நகர்ந்துவிடுகிறார்கள்.
முதல் பாகம் அளவிற்கு இந்த இரண்டாம் பாகம் இல்லை என்பதுதான் பலரது கருத்தாக இருக்கிறது. அதே போல இந்த இரண்டாம் பாகத்தில் முதல் பாதி இருந்த அளவிற்கு இரண்டாம் பாகமும் இல்லை என்பது மற்றொரு கருத்தாக இருக்கிறது.
முதல் பாதியில் பரவை முனியம்மாவின் வில்லத்தனத்தை ரசித்தவர்கள் கூட இந்தப் படத்தில் சதீஷின் வில்லத்தனத்தை ரசிக்கவில்லை என்பதுதான் உண்மை. நடிக்கவே முயற்சி செய்யாதவருக்கு எதற்காக அவ்வளவு கெட்-அப் என்பது புரியவில்லை. இவருக்குப் பதிலாக வேறொருவரைத் தேர்வு செய்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும்.
சிவாவின் நகைச்சுவைக்கென்று தனி ஸ்டைல் உண்டு. அதை முதல் பாகத்திலேயே நிரூபீத்தவர். முகத்தில் எந்தவித உணர்வையும் காட்டாமல் மற்றவர்களைக் கிண்டலடித்து நகர்ந்து போகிறார். டயலாக்கை மட்டும் இன்னும் கொஞ்சம் தெளிவாக உச்சரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
முதல் பாகத்தில் சரியோ, தப்போ ரசிக்க வைத்த சிலபல விஷயங்கள் இந்தப் படத்தில் மிஸ்ஸிங். முதல் பாதியில் ரசிக்க வைத்த திஷா பாண்டே இந்தப் படத்தில் ஒரு காட்சியோடு இறந்து போகிறார். அவருடைய இடத்தை நிரப்ப முடியாமல் தவிக்கிறார் ஐஸ்வர்யா மேனன். அதிலும் இரண்டாவது முறையாக வந்தும் நிரப்ப முடியாமல் போவது அதைவிடக் கொடுமை.
முதல் பாகத்தில் ரசிக்க வைத்த மனோபாலா, வெண்ணிற ஆடை மூர்த்தி, எம்எஸ் பாஸ்கர் கூட்டணியில், இந்த இரண்டாவது பாகத்தில் மனோபாலா மட்டுமே இடம் பிடித்துள்ளார். மற்றவர்களுக்குப் பதிலாக சந்தானபாரதி, ஆர். சுந்தர்ராஜன். இவர்களுக்கு அதிகமான காட்சிகளும் இல்லை, இருக்கும் காட்சிகளில் நகைச்சுவையும் இல்லை.
பல ஹிட் படங்களின் காட்சிகளை ‘ஸ்பூஃப்’ செய்கிறேன் என சீரியசாகத்தான் செய்திருக்கிறார்களே தவிர, முழுவதும் காமெடியாகச் செய்யவில்லை. அஜித், விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் என சிலரை மட்டும் அடிக்கடியும் ஓவராகவும் கிண்டலடிக்கிறார்கள். இருந்தாலும் அவற்றிற்கு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள்.
கண்ணன் இசையில் முதல் பாகத்தில் ரசிக்க வைத்த ‘ஓமகசியா…, பச்ச மஞ்ச…’ பாடல்கள் அந்தப் படத்தைப் பற்றி அதிகம் பேச வைத்தது. ஆனால், இரண்டாம் பாகத்தில் ‘நான் யாருமில்ல…’ பாடல் மட்டுமே ரசிக்க வைக்கிறது.
ஏதோ ஒரு அவசரத்தில் படத்தை எடுத்து முடித்து போல் தெரிகிறது. கதைக்குப் பெரிதாக யோசிக்கத் தேவையில்லை, திரைக்கதையில் எந்தெந்த காட்சிகள் இடம் பெறலாம் என்பதற்கு மற்ற ஹிட் படங்கள்தான் ரெபரென்ஸ். அதை கொஞ்சம் பொறுமையாகத் தேடிப் பிடித்து இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தி சிரிக்க வைத்திருக்கலாம்.
தமிழ்ப் படம் 2 அல்ல, தமிழ்ப் படம் 1/2.