நமக்குப் பிடிச்ச விஷயத்துல சாதிக்கணும்கற வெறி எல்லாருக்குள்ளயும் இருக்கும். அந்த விஷயத்தை சாதிக்கறதுல கூட பல தடைகள் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. ஆனால், எதைப் பத்தியும் கவலைப்படாம உண்மையான ஈடுபாட்டோட விடாம முயற்சி செஞ்சால் நாம அந்த சாதனையைத் தொட்டுடலாம்கறத ரொம்ப அழகா சொல்லியிருக்கிற படம்தான் இந்த ‘ஜீவா’. இப்ப வர்ற தமிழ்ப் படங்கள்ல யதார்த்தமா கதை சொல்ற பாணி நிறையவே வெற்றியைக் கொடுத்துட்டு வருது. இயக்குனர் சுசீந்திரனோட இந்த யதார்த்த அணுகுமுறை அவருக்கு நல்ல படங்களையும் கொடுக்கிற ஒருத்தர்னு நிரூபிக்க வைச்சிருக்கு. ‘வெண்ணிலா கபடிக் குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘பாண்டிய நாடு’, படங்களின் அருமையான வெற்றிக்குப் பிறகு மற்றுமொரு அருமையான படத்தைக் கொடுத்திருக்கிறார். விளையாட்டை மையமாக வைத்து சில படங்கள் வந்திருக்கலாம். ஆனால், உணர்வுபூர்வமாக நம்மை ஆட்கொள்ளும் படங்கள் ஒரு சில படங்கள்தான். அந்த வரிசையில் இந்த படமும் இடம் பிடிச்சிருக்கு. முதல் பாதியில் அழகான காதல், இரண்டாவது பாதியில் உத்வேகமான விளையாட்டு என இரண்டையும் மிக்ஸ் செய்திருப்பது இனிமை. சிறு வயதிலேயே அம்மாவை இழந்த விஷ்ணு, பக்கத்து வீட்டாரான சார்லி குடும்பத்தின் ஆதரவுடன் வளர்ந்தவர். அவருடைய அப்பா மின்சார வாரியத்தில் வேலை பார்ப்பவர். சராசரிக்கும் கீழான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவரான விஷ்ணுவிற்கு சிறு வயதிலிருந்தே பெரிய கிரிக்கெட்டராக வேண்டும் என்று ஆசை. ஆனால், வசதியில்லாத காரணத்தால் அவரை எந்த கிரிக்கெட் கிளப்பிலும் சேர்த்துவிடாமல் இருக்கிறார் விஷ்ணுவின் அப்பா. இதனிடையே விஷ்ணுவின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டிற்கு குடி வரும் ஸ்ரீதிவ்யாவிற்கும் விஷ்ணுவிற்கும் காதல் அரும்புகிறது. பள்ளிப் படிப்பில் இருக்கும் இவர்களின் காதல் ஸ்ரீதிவ்யாவின் குடும்பத்திற்குத் தெரியவர இரண்டு குடும்பத்துக்கும் சண்டை நடக்கிறது. ஸ்ரீதிவ்யாவை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்கிறார்கள். காதலியின் பிரிவால் பாதிப்படையும் விஷ்ணுவை கிரிக்கெட் கிளப்பில் சேர்த்துவிடச் சொல்கிறார் சார்லி. பிடித்த மற்றொரு விஷயத்தின் மீது ஆர்வம் போனால்தான் அவன் காதலை மறப்பான் என சார்லி விஷ்ணுவின் அப்பாவிடம் சொல்கிறார். அதன் பின் விஷ்ணு கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்து பயிற்சி எடுக்க ஆரம்பிக்கிறார், படிப்படியாக சிறந்த கிரிக்கெட்டராக உருவாகிறார். அதன் பின் அவருடைய காதல் என்ன ஆனது, கிரிக்கெட்டில் சாதித்தாரா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் கபடி விளையாட்டை மையப்படுத்தி படமெடுத்த சுசீந்திரன் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படத்தைக் கொத்திருக்கிறார். அந்தப் படம் கிராமம் சார்ந்த படம், இந்தப் படம் நகரம் சார்ந்த படம். ஒரு இயக்குனரின் திறமையே எப்படிப்பட்ட களத்திலும் புகுந்து விளையாடுவதுதான் என்பதை இந்தப் படத்திலும் அழுத்தமாகப் பதிய வைத்திருக்கிறார். அந்தப் படத்தின் நாயகன் விஷ்ணுவுடன் மீண்டும் கை கோர்த்திருக்கிறார். நடுத்தரக் குடும்பத்து இளைஞன் கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்திப் போகிறார் விஷ்ணு. நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பள்ளிக் கூட மாணவனாகவும், திறமையான கிரிக்கெட் வீரராகவும், உண்மையான காதலனாகவும், நட்புக்கு மரியாதை கொடுப்பவராகவும் பல பரிமாணங்களை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரம். நமக்கென்னமோ, விஷ்ணு நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் அவருக்கு சரியான ஸ்கோப் உள்ள படமாக அமைந்திருப்பதாகத் தோன்றுகிறது. கிளைமாக்சை நெருங்கும் காட்சிகளில் உணர்ச்சி பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி கண்கலங்கவும் வைத்து விடுகிறார். நடிப்பில், சிங்கிள் ரன், டபுள் ரன் இல்லாமல் சிக்சர் அடித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா நடித்திருக்கும் படம். இப்படி ஒரு அம்சமான பெண்ணை இன்றைய தமிழ் சினிமாவில் பார்ப்பது அபூர்வம்தான். ரேவதி, சினேகா வரிசையில் இடம் பிடிக்கக் கூடிய முழு தகுதி ஸ்ரீதிவ்யாவிற்கு இருக்கிறது. பள்ளி மாணவியாக உதட்டோர சிரிப்பில் மட்டுமல்ல, வாய் நிறைய சிரிப்பிலும் நம்மை ‘வழுக்கி’ விழ வைப்பவர், கல்லூரி மாணவியாக வரும் போதும் அதற்கேற்றபடியான மெச்சூரிட்டியான தோற்றத்துடன் தெரிவது ஆச்சரியமளிக்கிறது. முதலில் பள்ளி மாணவியாக நடித்ததும் ஸ்ரீதிவ்யாதானா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார். ராசியான நடிகை பட்டியலில் ஸ்ரீதிவ்யா அழுத்தமாகத் தடம் பதித்துவிட்டார். நண்பன் கதாபாத்திரம் போலத் தெரிந்தாலும் மற்றொரு ஹீரோ என லட்சுமணை தாராளமாகச் சொல்லலாம். ‘ஓபனிங் பேட்ஸ்மென்’ என்றால் சும்மாவா…பாரதிராஜா இயக்கிய ‘அன்னக் கொடி’ படத்தில் நாயகனாக நடித்தவர்தான் இந்த லட்சுமண். உங்க குரல் அட்டகாசமா இருக்கே…என்ன பண்றீங்க பாஸ்…அதுவே அந்த உணர்ச்சிபூர்வ நடிப்பை 90 சதவீதம் கொடுத்துடுது, மீதி 10 சதவீதம் நடிச்சாலே போதும்கற மாதிரி இருக்கு. கடைசில கண் கலங்க வச்சிட்டீங்க… இடைவேளை சமயத்தில்தான் சூரி என்ட்ரி கொடுக்கிறார். ஆனாலும், கிடைத்த கேப்பில் அவரும் காமெடி சிக்சர் அடிக்கிறார். ரொம்பவும் குறைவாக அவரைப் பயன்படுத்தியிருப்பது மட்டும்தான் குறையாகத் தெரிகிறது. இன்னும் அதிக காட்சிகள் கொடுத்தால் கதையின் தன்மை கெட்டுவிடும் என இயக்குனர் நினைத்திருக்கலாம். குணச்சித்திரக் கதாபாத்திரங்களில், சார்லி, மாரிமுத்து, டி.சிவா, தேர்வுக்குழுத் தலைவராக வரும் மதுசூதன் ராவ் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு. இமான் இசையில் “ஒருத்தி மேலே…., ஒவ்வொன்றாய் திருடுகிறாய்….” இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்கள்…எஸ்பிபி குரலில் ஒலிக்கும் ‘எங்கே போனாய்…’ உருக்குகிறது. மதியின் ஒளிப்பதிவு பளிச்…பளிச்…பெயருக்கேற்றாற் போல் ஸ்ரீதிவ்யாவைக் காட்டியிருக்கிறார். ஜீவா – மேன் ஆப் த மேட்ச்…